பள்ளிப் பருவத்தில் சேரன், ரவி, கந்தன், குமார் என்ற நால்வரும் ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்புகளில் படித்தாலும் தங்களது நட்பை ஆணிவேர் போல் ஆழமாக விதைத்தனர்.
வேலை நிமித்தமாக வேறு வேறு ஊர்கள் சென்றாலும் பணி நிறைவு ஆனதும் நான்கு பேரும் தங்களது வாரிசுகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டுபொறுப்பை முடித்துவிட்டவர்களாய் தங்களது மனைவியுடன் சொந்த வீட்டில் வந்து குடியேறி ஆனந்த வாழ்வை அகம் மகிழ்ந்து அனுபவித்து வருகின்றார்கள்.
ஏதாவது விழா என்று யாராவது வெளியூர் போனால் அவர் வீட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஊரில் ஒரு விழா என்றால் நால்வரும் தங்களது மனைவியுடன் சென்று வருவார்கள். ஊர் மக்களோடு மக்களாக இணைந்து வாழ்வதில் இவர்களுக்கு அலாதி மகிழ்ச்சி. உடல் ஆரோக்கியம் பேணுவதில் நால்வரும் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். தங்களது மனைவியர்களில் உடல் நலத்திலும் அதிக கவனம் செலுத்துவார்கள்.
காலையில் நால்வரும் சந்திப்பார்களோ இல்லையோ மாலை 4.30 மணியளவில் தங்களது மனைவி சகிதமாக ஊருக்கு வெளியில் உள்ள ஒரு இடத்தில் கூடுவார்கள். ஆண்கள் ஒரு இடத்திலும் பெண்கள் ஒரு இடத்திலும் அமர்வார்கள். ஆண்கள் பெரும்பாலும் அன்றைய நிகழ்வுகள், சந்தித்த அனுபவங்கள் பற்றி கலந்துரையாடுவார்கள்.
பெண்கள் ஆன்மீக அனுபவங்களை பகிர்ந்து கொண்டும், பக்திப் பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள். சரியாக மாலை 5.45 மணியளவில் கிளம்பி மாலை 6.30 மணிக்குள் அவரவர் வீடுகளுக்கு வந்து சேருவார்கள். இவர்கள் நால்வரில் ஏதாவது ஒருவர் வீட்டில் விழா என்றால் மற்ற மூவரும் விழா ஆரம்பம் முதல் முடிவு வரை அங்கேயேயிருந்து உதவி செய்தும் கல கலவென பேசியும் மகிழ்வார்கள். இவர்கள் நால்வரைப் பார்த்து ஊர் மக்கள் ஒற்றுமையின் இலக்கணம் என்று கூறுவார்கள்.
வேலை தேடுபவர்கள் மற்றும் ஆலோசனை வேண்டி வருபவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வார்கள்.
நால்வரும் நாளாக நாளாக ஊர் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து வந்தது கண்டு ஊர்த் தலைவர் சற்று கலக்கமடைந்தார். எனினும் அவர்கள் தான் செய்யும் வேலைகளில் இடையூறு செய்யாததால் ஊர்த் தலைவர் சற்று நிம்மதியடைந்தார். இருந்தாலும் அவர்கள் மேல் ஒரு கண் வைத்திருந்தார். நால்வரும் ஊர்த் திருவிழா என்றால் பணம் தந்து மேற்கொண்டு எதிலும் தலையிட மாட்டார்கள். விழா முடிந்து கணக்கு அறிக்கை வாசிக்கும் அன்று இவர்கள் மறந்தும் செல்ல மாட்டார்கள். எதற்கு நமக்கு அது என்று கேட்பவரிடம் கூறி விடுவார்கள்.
ஊரில் ஏதாவது செய்ய வேண்டுமென அபிப்பிராயம் கேட்டால் நால்வரும் கூடி பேசி முடிவு செய்ததைக் கூறி விடுவார்கள். ஏதாவது ஒரு பொதுக் காரியம் பொறுப்பேற்கச் சொன்னால் நால்வரும் எங்களுக்கு வயதாகி விட்டது. இளைஞர்களை இணையுங்கள் என்று கூறி நழுவி விடுவார்கள்.
அன்று மாலை நடைபயிற்சிக்கு வந்த நால்வரில் சேரன் தான் கல்லூரியில் படிக்கும் போது இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் இசையும் கதையும் நிகழ்ச்சிக்கு தான் எழுதி அனுப்பிய கதை இது தான் என்று காட்டினார். ஏதோ ஒரு பெட்டியை சுத்தம் செய்த போது கிடைத்தது என்றார்.
இந்தக் கதையை இலங்கை வானொலி ஒலி பரப்பச் செய்தது என்றார். நான் அதை அந்த வானொலியில் கேட்ட போது அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை என்றார். எனக்கு இரட்டிப்பு ஆனந்தம் என்ன வென்றால் இதை வாசித்தது எனது மனங்கவர்ந்த அறிவிப்பாளர் திரு. கே.எஸ்.ராஜா என்றார். அவரைப் பற்றி நான் சேகரித்ததைக் கூற ஒரு நாள் போதாது என்றாலும் சிலவற்றை நான் கூறுகிறேன் என்றார் சேரன்.
திரு. கே.எஸ்.ராஜா கண்டிக்கு அருகில் உள்ள ஊரில் பிறந்தார். நான் அவர் தேன் மதுரக் குரலைக்கேட்டு அனுபவித்ததை உங்களுடன் பகிர்கிறேன் என்றார் சேரன். அவரது அறிவிப்பு மழையில் நனைந்த முத்தான வரிகள் என்னவென்றால் தூங்க வைப்பதல்ல வானொலி அறிவிப்பு, உற்சாகம் பொங்க வைப்பது தான் உயிர்த்துடிப்பான அறிவிப்பு, வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில் ஆவலுடன் கூடியிருக்கும் எங்கள் வானுயர்ந்த நிகழ்வை மகிழ்வுடன் கேட்கும் நேயர்களே, மின்னல் வேக அறிவிப்பு, வார்த்தைக்கு வார்த்தை விளங்கும்படியான உச்சரிப்பு, பேசாதவர்களை பேச வைத்த, கேட்காதவர்களை கேட்க வைத்த மதுரமான குரல் திரு. கே.எஸ்.ராஜாவுடையது, நிகழ்ச்சியில் புதிதாக செய்யும் ஒட்டு வேலைகள், விளம்பர சாதுர்யங்கள், நேயர்கள் சலிக்காத வண்ணத் தொகுப்பு,குரலில் அன்பு குழைவு காட்டுதல், படங்களில் உள்ள வசனங்களை தனியே பிரித்தெடுத்து தக்க இடத்தில் சேர்ப்பது, காந்தச் சிரிப்பில் கவரும் அழகு, ஈர்ப்புத் தமிழை முன்னிருத்தல், உழைப்பிலும் கடமையிலும் தமிழன் என்ற துடிப்பு, தகரம் வேய்ந்த திரை அரங்குகளின் பெயர்களை தனித்தன்மையாக சொல்லுதல்,பாட்டுக்குப் பாட்டு, இரவின் மடியில், உமாவின் வினோத வேளை, இசையும் கதையும், சென்னை விவித் பாரதியில் இசைமலர் போன்றவைகளில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் திரு. கே.எஸ்.ராஜா.
ஊஞ்சல் போன்று ஆடும் தமிழ் வார்த்தைகளை தனது குரல் வளத்தால் மிளரச் செய்தவர். பணியில் தூய ஈடுபாடு, நேரத்துக்கு தனது யுக்தியை புகுத்துதல் இவருக்குப் பணியில் என்றும் நீங்கா இடத்தைப் பொற்றுத் தந்தது என்றால் மிகையாகாது. இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி விளம்பரம் பற்றி அறிவிப்பில் இந்தியன் கடல் மிசை வங்கி என்று தூய தமிழில் கூறி வங்கிக்கு ஏற்றம் தந்தார். இப்பேர்பெற்ற திரு. கே.எஸ்.ராஜா ‘‘ அச்சம் என்பது மடையமடா , அஞ்சாமை திராவிடர் உடைமையடா ..’’ என்ற பாடலை ஒலிபரப்பியதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டது வேதனையே என்றார் சேரன்.
பிறகு ரவி சேரன் உன் கதை நன்றாகவே உள்ளது. ஆனால் இதை இலங்கை வானொலி ஒலிபரப்பினார்கள் என்ற செய்தி தான் நம்ப முடியவில்லை என்றார்.
உடனே மற்றவர்களும் ஆமாம் சேரன் எங்களுக்கும் நம்ப முடியவில்லை என்றார்கள்.
ஏனெனில் இலங்கை வானொலிக்கு நிறையக் கடிதங்கள் வருமாம். அதில் எப்படி உனது கதை தேர்வானது என்பது தான் நம்ப முடியவில்லை என்றார்கள்.
சேரன் ஏதும் பதில் கூற முடியாமல் இருந்த போது மற்றவர்கள் மீண்டும் ஒரு சிரிப்புடன் அவர்கள் கூறியதைக் கூற, சேரன் சற்று யோசனையில் ஆழ்ந்தார்.
என்ன சொல்வதென்று அவர் யோசித்த வேளையில் உள்ளுக்குள் அழுத்தம் ஏற, திடீரென மயங்கி விழ, பதறிய மூவரும் அவரை நிலைப் படுத்தவதில் முனைந்தார்கள். அப்போது அந்தப் பக்கம் வந்த இவர்களுக்குத் தெரிந்த மருத்துவரை அழைத்துக் காண்பிக்க அவர் பரிசோதனை செய்து விட்டு சற்று சோர்வு தான் என்றதும் நிம்மதியடைந்ததர்கள்.
. அப்போது மருத்துவர் சேரன் தற்போது எப்படியுள்ளீர்கள் என்று கேட்க,அவர் என்ன நடந்தது என்று கேட்ட வேளையில், அவரது கையிலிருந்த ஒரு தாள் தரையில் விழுந்து பறக்க, அதை மருத்துவர் எடுத்து சற்று உரக்கப் படித்தார்.
அந்தக் கடிதம் திரு கே.எஸ்.ராஜா கைப்பட எழுதியது.
அன்பு வாசகரே, நீங்கள் அனுப்பிய இசையும் கதையும் தொகுப்பு நன்றாக உள்ளது. உங்களது சமுதாயச் சிந்தனை கதையில் மிளிர்கிறது. கதைக்கு நீங்கள் தேர்வு செய்த பாடல்கள் மிக அருமை. தாய் நாட்டுப் பற்று, உங்கள் தமிழ் ஆர்வம் நன்கு தெரிகிறது. பாராட்டுக்கள். இன்னும் நிறைய எழுதுங்கள். உங்கள் அன்பு அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா என்று அதை படித்து விட்டு மருத்துவர் நானும் ராஜாவின் பரம ரசிகன் என்றார்.
சேரன் இப்போதாவது நம்பிக்கை வந்ததா என்றார். மருத்துவருக்கு நன்றி தெரிவித்த சேரன், மற்றவர்களிடம் உங்களை சிரமப்படுத்தியதோடு பயத்தையும் உண்டாக்கி விட்டேன் என்றதும் மூவரும் ஒட்டு மொத்தமாக நினைவலைகள் ஓயாது என்றார்கள்.
ரவி திறமை எங்கிருந்தாலும் ஒளி மிளிரும் என்று கூறி விட்டு நாம் இன்று கே.எஸ்.ராஜாவின் நினைவலையில் திளைத்ததோடு சேரனின் இசையும் கதையும் படிக்கும் வாய்ப்பைப் பெற்றோம் என்றார்.
சேரன் நல்ல வேளை நம்மை திரு கே.எஸ்.ராஜா கடிதம் காப்பாற்றியது என்று மனதில் நினைத்தார்.
அப்போது அங்கு வந்த சேரனின் மனைவி என்ன இலங்கை வானொலி நினைவலைகளில் திளைத்தது போதுமா என்றார்.
நினைவலைகள் ஓயாது என்று சேரன் சென்னபோது நெஞ்சம் நெகிழ்ந்தது.
#சிறுகதை