சிறுகதை

நித்தம் ஒரு வானவில் – ராஜா செல்லமுத்து

இத்தனை அழகான பெண்ணை அந்தத் தெருவில் இதுவரை சதீஷ் கண்டதில்லை.

காலில் இருந்து தலைவரை பலவண்ணத்தில் அச்சடித்தது போன்ற அழகில் வார்க்கப்பட்டிருந்தாள் அபிராமி. அவள் பெயரை கேட்டதும் அபிராமி அந்தாதி பாடி விட வேண்டும் போல சதிசுக்குத் தோன்றியது.

அபிராமியே அவளாக இருக்க அவளைத் திரும்பத் திரும்பப் பார்க்கும் அந்தாதியாகவே சதீஷ் இருந்தான்.

மௌனமே மொழியானாள்.சதீஷின் சத்தங்கள் தான் அவளைப் பார்க்க வைத்தது.

சதீஷைச் சிறிதும் அவள் சட்டை செய்யவில்லை . அந்த அழகில் யார் இருந்தாலும் அவர்களுக்கு திமிர் இமயமலை வரை ஏறி இருக்கும்.

ஆனால் அவள் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளலாமல் இருந்தாள்.

சதீஷ் அவளை பார்ப்பதும் அவள் செல்லும் இடத்திற்கெல்லாம் பின் தொடர்வதுமாய் இருந்தான்.

தன் இருசக்கர வாகனத்தில் அபிராமி செல்லும் அழகு அலாதியாக இருக்கும் . அந்த வனப்பில் அவளை பார்ப்பதற்கு தெருவில் கூட்டம் கூடி இருப்பார்கள்.

அந்த இளம் சிட்டு என்ன செய்கிறாள்? என்று தெரிந்து கொள்வதற்கு சதீஷ் ஆவலாக இருந்தான்.

ஆனால் அவள் சிறிது கூட பிடி கொடுக்கவில்லை .

என்னதான் செய்கிறாள் என்று கேட்டு விடலாம் என்று ஒருநாள் சதீஷ் முனைந்த போது ,

அவள் முறைத்து பார்த்துவிட்டு சென்றாள்.

அந்தப் பார்வையின் வெப்பம் அவன் பாதி ஆயுளைத் தின்று தீர்த்தது .

என்ன இது சூரியனை கருக்கி விழிகளில் கொட்டி வைத்திருக்கிறாள் இவள்…

பார்வையே இவ்வளவு சூடாக இருக்கிறதே அவள் பேசினால் என்ன ஆகும்.

அவளுடன் பேசாமல் இருப்பது மேல். கோயிலில் இருக்கும் சிலைகள் எல்லாம் பக்தர்களிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறதா? ஆனால் கும்பிடுவர்களுக்கு வரம் கிடைக்கிறதே . அதே போல தான் நான் அபிராமியை வணங்குகிறேன்.

அவள் தூரத்திலிருந்து எனக்கு வரம் கொடுக்கிற சாமி என்று அந்த நினைப்பிலேயே வாழ்ந்து வந்தான் சதீஷ்.

அந்தச் சின்னப் பறவை தன் தலை கூந்தலை முட்டிக்கு கீழே பரப்பி விட்டு அவள் பந்தாவாகச் செல்லும் பயணம் சதீசுக்கு பெரிய சலனத்தை ஏற்படுத்தியது.

அவளைப் பற்றி விசாரித்தால் யாராவது தவறாக நினைத்து விடுவார்களோ? என்று எண்ணியவன் அவளை பின்தொடர்ந்தான்.

சரி அவளுடன் பேசுவதில்லை தான் .இதுவரை பாதி வழி வரைக்கும் தான் அவளை பின்தொடர்ந்து இருக்கிறோம். அவள் எங்கே படிக்கிறாள் அல்லது வேலை செய்கிறாள்? என்று தெரிந்து கொண்டால் நாம் அவள் இருக்கும் இடத்திற்கு சென்று விடலாமே? என்று நினைத்த சதீஷ் ஒரு நாள் அவளைப் பின்தொடர்ந்தான்

குறுக்கும் நெடுக்குமாகப் போன பாதையில் அவளுக்காக சிரமப்பட்டு வளைந்து நெளிந்து சென்றான்.

திருப்பத்தில் இருந்த வீட்டில் இருந்து அவள் எங்கு சென்றாள் என்பது அவனுக்கு புலப்படவில்லை. சற்றும் முற்றும் பார்த்தான்.

இந்தப் பக்கம் தானே வந்தாள். அதற்குள் எப்படி காணாமல் போய்விட்டாள்.

இன்னும் மாயம். பெண்கள் என்றாலே மாயம் தான் பாேல. இந்தப் பிஞ்சு நம் கண்களை விட்டு எங்கே அகன்று இருக்கக்கூடும்? என்று சற்று முற்றும் பார்த்தபோது அங்கே இருந்த ஒரு வயதான பெண்மணி சதிஷை விசாரித்தாள்.

தம்பி ரொம்ப நேரமா இங்க நின்னுக்கிட்டே இருக்கியே? யாரைப் பாக்கணும்? என்று அதட்டல் கலந்த குரல் கேட்டாள்.

இல்ல சும்மா இந்த பக்கம் வந்தேன் என்று உளறலானான் சதீஷ் .

எனக்கு தெரியும் தம்பி. நீ எதுக்கு நிற்கிற?

என்ன சாேலியா வந்தாய்?

ஏன் இப்படி தடுமாறுற? எனக்கு தெரியாதா என்ன? நான் வயசு புள்ளையா இருக்கும்போது என்னை ஆயிரம் பேர் சுத்தி வருவான். அவன்க எதுக்கு வர்றான்க? என்ன செய்றதுக்காக இப்படி சுத்துறாங்கன்னு எனக்கு தெரியாம இருக்காது. அதெல்லாம் கடந்து வந்தவள் தானே நான். ‘

அந்த அபிராமி பிள்ளையைத் தானே நீ தேடி வந்திருக்க? என்று பசக்கென்று அந்தக் கிழவி சொன்னபோது

இப்படி உடைத்து விட்டாளே இந்த கிழவி ? மானம் போவது போல் தலையைக் கவிழ்ந்தான் சதீஷ்.

எனக்கு தெரியும் தம்பி. இந்த வீட்டு கிட்ட நின்னு ஏன் பார்க்கிறான்னு; அது எதுக்கு தெரியும்.

அந்தப் பொண்ணு பாவம்பா தாய் தகப்பன் இல்லாத பிள்ளைப்பா அது. ஏதோ வீட்டு வேலை செஞ்சு வயித்த கழுவிக்கிட்டு இருக்கு. இந்த வெட்டி பசங்க அந்த பொண்ண விடாம துரத்தி துரத்தி அவ வாழ்க்கை கெடுத்து விட்டுருவாங்க போல . சுத்துறவன் அந்த பொண்ணக் கடைசி வரைக்கும் காப்பாற்றுவது மாதிரி கால்கட்டு போட்டாலும் பரவாயில்ல. கடிச்சு தின்னுட்டு தூக்கி வீசிட்டு போயிடுவாங்கப்பா. என்ன ஏதுன்னு கேக்க கேப்பாரு யாருமில்ல. நாதியத்த மகள ஏதாவது பண்ணி போடுவாங்கன்னு தான் அந்தப் பொண்ணு பயந்து பயந்து போகுது.

ஏதோ இந்த வீட்ல வேலை செஞ்சு தன்னுடைய வாழ்ந்திட்டு இருக்கு அதையும் இந்த பயக கெடுத்து விட்டுருவானுக போல . உன்னப் பாத்தா நல்ல பையனா தெரியுது. அந்தப் புள்ளையை ஒன்னும் செய்யாத. உனக்குன்னு ஒருத்தி எங்கயாவது பிறந்திருப்பா ; போய் பாரு. இவள விட்டுடு என்றாள் அந்தக் கிழவி

என்ன என் அபிராமி வீட்டு வேலை செய்கிறாளா? அந்த அழகு பதுமையை யார் அடுப்படியில் வைத்தது. ஐயோ அவள் அழகுக்கும் அவள் செய்யும் வேலைக்கும் பொருத்தமில்லையே? என்று வருத்தம் கொண்டான் சதீஷ்.

இருந்தாலும் ஆதரவற்ற அந்த பெண்ணை தொந்தரவு செய்வது இனியும் தகாதென்று அந்த இடத்தை விட்டு வெளியேறினான் சதீஷ் .

அவன் எண்ணம் முழுவதிலும் அந்தப் பெண்ணின் அழகே ஆக்கிரமித்துக் கிடந்தது.

அவளின் வண்ணப் படங்கள் தான் அவன் கண்களில் வந்து வந்து போயின.

இனியும் அவளைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று அவன் மனம் முடிவெடுத்துக் கிளம்பியது.

அதுவரை அவன் சென்று விட்டானா என்று ஊர்ஜிதப்படுத்திய அபிராமி வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தாள்.

சதீஷ் உடன் பேசிய பாட்டியைக் கட்டிப்பிடித்துக் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

ரொம்ப நன்றி பாட்டி. இந்த வெட்டிப்பயக கிட்ட இருந்து என்னைய காப்பாத்திட்ட

என்று கட்டிப்பிடித்து மேலும் ஒரு முத்தம் கொடுத்தாள்

என்ன பண்றது ஒருத்தன அடிச்சு திருத்துறத விட அன்பா பேசினால் திருத்திருவான் .

எப்பவுமே பெண்களுக்கு ஒரு வருத்தம்னா ; ஆம்பள வர்க்கமே வருத்தப்படுவாங்க.

சும்மா ஒரு சரடு விட்டேன். உண்மைதான்னு நினைச்சு ஒதுங்கி போயிட்டான்.

இனிமே அவன் உன் பக்கத்துல வர மாட்டான். நீ தைரியமாக வேலையை பாரு. என்ன பண்றது தாயி, ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம் அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு.ஈராயிரம் பொய் சொல்லி கூட ஒரு பொண்ண காப்பாத்தலாம்ன்னு நான் நினைக்கிறேன்.

நீ வருத்தப்படாத. உன்ன சுத்தி வர்ர யாரா இருந்தாலும் அவன சுத்த விடுறேன்.நீ வீட்டுக்குள்ள போ என்று ஆறுதல் சொன்னாள் அந்தக் கிழவி

இன்னைக்கு இந்தப் பொய் சொல்லி இருக்க. நாளைக்கு என்ன செய்யப் போற ?என்று கேட்டாள் அபிராமி

அத நாளைக்கு யோசிப்போம் என்ற படியே அபிராமிக்கு கை கொடுத்து அனுப்பினாள் அந்தக் கிழவி.

மறுநாள் அபிராமியை பின்தொடர்ந்து வந்த ஒரு வாலிபனை இடைமறித்து பேசினாள் கிழவி.

தம்பி உங்கள பாத்தா நல்ல பயனா இருக்கு. இங்க எதுக்கு வந்தீங்க ?

என்று கேட்டபோது

அவன் வாயில் வார்த்தைகள் வராமல் தடுமாறினான்.

எனக்கு எல்லாம் தெரியும் தம்பி. அந்த அபிராமி பொண்ண தானே பார்க்க வந்திங்க? பாவம் அவ பேச முடியாத ஊம. அப்படிப்பட்ட பொண்ணவா துரத்திட்டு வந்திருக்க? பாவம்யா. ஏதோ வீட்டு வேலை செஞ்சு வாழ்க்கை நடத்துவது என்று புதுக்கதை சொல்ல ஆரம்பித்தாள் கிழவி. அதைக் கேட்டுக் கொண்டிருந்த வாலிபன் கண்ணீர் விட ஆரம்பித்தான்.

கிழவி அந்த வாலிபனுக்கு கதை சொல்ல ஆரம்பித்தாள்.

வாலிபன் நடையக்கட்டினான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *