செய்திகள்

நிதி நிறுவனங்கள் ரூ. 20,000-க்கு மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது: ஆர்பிஐ உத்தரவு

புதுடெல்லி, மே 16–

நிதி நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 20,000-க்கும் மேல் கடனை பணமாக வழங்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில நாள்களாக வங்கித் துறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. அந்த வகையில் வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு(என்பிஎஃப்சி) புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில், “வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 269 எஸ்எஸ் விதியின்படி, ஒரு நபர் ரூ.20,000-க்கும் மேல் கடனை பணமாக பெற முடியாது. அதனால், வாடிக்கையாளர்களுக்கு ரூ.20,000-க்கு மேல் கடன் தொகையை ரொக்கமாக வழங்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரொக்க பரிமாற்ற முறையில் வருமான வரித்துறையின் உத்தரவுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வங்கியில்லா நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நகைக் கடன், வணிகக் கடன் உள்ளிட்டவை வழங்கும் ஐஐஎஃப்எல் நிதி நிறுவனம் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியும், வெளிப்படைத்தன்மை இல்லாமலும் கடன் வழங்குவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அந்த நிறுவனம் நகைக் கடன் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அனைத்து வங்கியில்லா நிதி நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான நடுத்தர மக்கள் தங்களிடம் இருக்கும் நகைகளை அருகாமையில் உள்ள நிதி நிறுவனங்களில் வைத்து கடன் பெற்று வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், நகைக் கடனாக ரூ.20,000-க்கும் மேல் தேவைப்படுபவர்கள் தங்களின் வங்கிக் கணக்கின் மூலம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *