புதுடெல்லி, மே 23–
பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவரை தி.மு.க. எம்.பி.க்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான ‘நிதி ஆயோக்’ கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015ல் திட்டக்குழுவுக்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். இந்த ஆண்டுக்கான கூட்டம், டெல்லியில் நாளை (24–ந்தேதி) நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் மூலம் இன்று காலை 9.50 மணியளவில் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை தி.மு.க. எம்.பி.க்கள் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு முதல்வர் சென்று ஓய்வெடுக்கிறார். அதன் பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. தமிழகத்துக்கான நிதி தொடர்பாக சில மத்திய அமைச்சர்களையும் முதலமைச்சர் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
நாளை (24–ந் தேதி) காலை 9 மணிக்கு டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்ஷா), பேரிடர் நிவாரண நிதி உள்ளிட்ட நிலுவை நிதிகளை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்.
கூட்டம் முடிந்ததும் நாளை இரவு சென்னை திரும்புகிறார்.
முந்தைய ஆண்டுகளில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இன்று இரவு அல்லது நாளை பிரதமர் மோடியை தனியாக சந்தித்துப் பேச முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால், அவர் பிரதமரை சந்தித்து பேசுவார் என தி.மு.க.வினர் தெரிவித்தனர்.