செய்திகள் நாடும் நடப்பும்

‘நிதிச் சுரண்டல்’ மல்லையா: சிறை பிடிக்க திணறும் அதிகாரிகள்


ஆர். முத்துக்குமார்


17 இந்திய வங்கிகளிடமிருந்து ரூ.9 ஆயிரம் கோடியை பல்வேறு தில்லுமுல்லுகள் செய்து திருப்பித் தராமல் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்திருக்கும் ‘கிங் பிஷர் ‘ நிறுவனர் விஜய் மல்லையா மீண்டும் செய்தியாகி ஊடகங்களில் வந்துள்ளார். இம்முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரூ.2 ஆயிரம் அபராதமும் 4 மாத சிறை வாசமும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதைப் படிக்கும் சாமானியனுக்கு 2017 முதல் இந்திய அதிகாரிகளால் பிடித்து வரப்படாது சுதந்திரமாய் திரிந்து கொண்டிருக்கும் அவரை எப்படி இந்த சிறைவாசத்துக்கு கொண்டுவர முடியும்!

இந்தத் தீர்ப்பு பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளுக்கு கொடுத்த பணம் விரைவில் திரும்ப வரலாம் என்ற நம்பிக்கையை தந்துள்ளது.

மேலும் மல்லையாவை போன்ற மேலும் பல கோடீஸ்வர கில்லாடிகள் பல ஆயிரம் கோடிகளுடன் வெளிநாடுகளில் தஞ்சம் பெற்று உல்லாசமாக வாழ்கிறார்கள் அல்லவா? அவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணி போல் ஒலிக்கிறது.

ஆனால் உண்மையில் தஞ்சம் பெற்றுள்ள நாட்டிலிருந்து இவர்களை திரும்பக் கொண்டு வர முடியுமா? என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது. இதில் சமீபத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பெற்றுத் தந்திருக்கும் தண்டனையை நிறைவேற்றி மல்லையாவை நம் மண்ணுக்கு கொண்டு வர என்ன சாத்தியக் கூறு இருக்கிறது என்பதை யாரும் தெளிவாகக் கூறவே இல்லை.

சமீபத்து குற்றச்சாட்டு, டீ கோ நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 4 கோடி டாலர் தொகையை வாங்கி உத்தரவை மீறி தனது மகன் மற்றும் மகள்கள் பெயரில் மாற்றம் செய்ததாக விஜய் மல்லையா மீது எஸ்பிஐ வங்கி வழக்கு தொடர்ந்தது.

2017–ல் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவையும் மீறி விட்டார் என்றும் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் லலித், எஸ். ரவீந்திர பட், பி.எஸ். நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மீறி தனது மகன் மற்றும் மகள் பெயரில் 4 கோடி டாலர் ஏமாற்றியதற்காக அவருக்கு 4 மாத சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பளித்தனர். அபராதத் தொகையை 4 வாரங்களுக்குள் செலுத்தத் தவறினால் மேலும் 2 மாதம் கூடுதல் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் மல்லையா தனது மகன், மகள் பெயரில் பரிமாற்றம் செய்தது வேண்டுமென்றே நீதிமன்றத்தை அவமதித்துள்ளது தெரிகிறது. இந்தத் தொகையை 8% வட்டியுடன் 4 வாரங்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும். இவ்விதம் செலுத்த தவறினால் விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்கலாம் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதைத் திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார் விஜய் மல்லையா. அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்கத் துறையினர் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மல்லையா கூறுவது தனது சொத்துக்களை முற்றிலும் அமலாக்கத் துறையினரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் வங்கி கடனை எப்படி திரும்ப தருவேன்; அதாவது என்னிடம் பணமே இல்லை என்று சாதிக்கிறார்.

அப்படியே இவரிடம் சொத்துக்களை தந்துவிட்டால் அதை உடனடியாக விற்று கடனை திரும்ப தராமல் வெளிநாட்டு வங்கிகளில் வைத்துவிட்டு நம் சட்டதிட்டங்களுக்கு சவால் விடுவார் என்ற அச்சம் இருப்பதையும் மறந்து விடக்கூடாது!


Leave a Reply

Your email address will not be published.