செய்திகள்

நாளை விநாயகர் சதுர்த்தி: பூக்களின் விலை கடும் உயர்வு

Makkal Kural Official

சென்னை, ஆக. 26–

நாளை விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் வழக்கத்தைவிட இன்று பூக்களின் வரத்து அதிகமாக இருந்தாலும் விலை கடுமையாக உயர்ந்தது. குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இவற்றை வாங்கி செல்ல கேரளாவில் இருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும். பொதுவாக முகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். பிற நாட்களில் விலை குறைவாக இருக்கும்.

இந்த நிலையில், ஓணம் பண்டிகை தொடக்கம் மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.400-க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று ரூ.1,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதைபோல மல்லிகை, அருகம்புல், கேந்தி என அனைத்துப் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரை மல்லிகை பூ கிலோ ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யபடும் நிலையில் இன்று 4 மடங்கு விலை உயர்ந்து கிலோவுக்கு ரூ. 2,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 1 கிலோ மதுரை மல்லிகை ரூ.2,500, முல்லைப் பூ ரூ.1,000, செவ்வந்தி, பிச்சி பூ ரூ.1,000, கனகாம்பரம் ரூ.1,000, அரளி ரூ.600, ரூ.150க்கு விற்ற செவ்வந்தி ரூ.250-க்கும், பட்டன் ரோஸ் ரூ. 300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *