செய்திகள் நாடும் நடப்பும்

நாளை முதல் செஸ் ஒலிம்பியாட் : நான்கே மாதங்களில் சிறப்பு ஏற்பாடுகள், சபாஷ் ஸ்டாலின்!

பரபரப்பான போட்டிகளுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்


ஆர். முத்துக்குமார்


சென்னை 44–வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை நாளை முதல் நடத்த தயாராகி விட்டது தமிழக அரசு. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு சென்னையில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு போட்டி இது!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1995–ல் நடத்திய தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுக்கள், (SAF games) போட்டிகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெறும் மிக பிரபலமான போட்டி நாளை துவங்கும் சர்வதேச சதுரங்க போட்டிகள் ஆகும்.

சென்னையில் விளையாட்டுப் போட்டிகள் என்றால் சர்வதேச அரங்கில் சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் போட்டிகள் என்று இருந்தது.

SAF போட்டிகளை நடத்த ஏற்படுத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு கட்டுமானங்களில் எஸ்.டி.ஏ.டி. பல்துறை உள் விளையாட்டு அரங்கமும் கால் பந்தாட்ட மைதானமும் நுங்கம்பாக்கம் டென்னிஸ் ஸ்டேடியமும் சமீபமாக பரபரப்பான விளையாட்டுக்களை காணவில்லை என்றாலும் கொரோனா தொற்று பரவல் வரும்முன் பல இளைஞர்கள் விளையாட்டு துறைகளில் சாதிக்க பயிற்சி களமாக இருந்தது.

சர்வதேச தரப்பட்டியலில் ஸ்குவாஷ், டென்னிஸ் போட்டியாளர்களை உருவாக்கிய பெருமை சென்னைக்கு உண்டு.

விளையாட்டு துறையில் தூங்கி, பின்தங்கி இருந்த தமிழகத்தை தட்டி எழுப்பி விளையாட வைத்த பெருமை ஜெயலலிதாவுக்கு உண்டு.

ஆனால் இந்தியாவின் செஸ் தலைநகராக விளங்கும் சென்னையில் பரபரப்பான போட்டி இல்லை என்ற நிலையை மாற்ற வருகிறது நாளை துவங்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்.

2013 உலக செஸ் சேம்பியன்ஷிப்பை நடத்திய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இரு பெரிய ஜாம்பவான் ஆட்டக்காரர்கள் விஸ்வநாதன் ஆனந்தும், கார்ல்சன் மட்டுமே பங்கேற்று விளையாடியது நினைவிருக்கலாம். அதில் மண்ணின் மைந்தன் ஆனந்த் பரபரப்பான இறுதி கட்டத்தில் மயிரிழையில் தோற்றுப் போனார்.

செஸ் ஒலிம்பியாட் என்பது 4 வருடங்களுக்கு ஒருமுறை, செஸ் போட்டிக்கு ரசிகர்கள் நிறைந்த ஒரு நாட்டில் நடைபெறும். பல ஆயிரம் முன்னணி செஸ் வீரர்கள் சங்கமிக்க ஆட்டம் களைகட்டும்.

ஆக 4 வருடங்களாக திட்டமிட்டு நடைபெறும் இச்சிறப்பான போட்டியே நாளை மாமல்லபுரத்தில் துவக்குகிறது.

நான்கே மாதங்களில்…

உலகமே ஆச்சரியப்படும் வகையில் நான்கே மாதங்களில் முதல்வர் ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பில் இப்போட்டிகள் நடைபெற இருக்கிறது.

அவரது வேகம் செஸ் அமைப்புகளுக்கு புதிய உத்வேகத்தை தந்து இப்போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற எல்லா ஏற்பாடுகள் உரிய நேரத்தில் நடந்து போட்டிகள் துவங்க தயாராகி விட்டது.

தற்போது இந்தியாவில் 74 கிராண்ட் மாஸ்டர் தகுதி பெற்ற செஸ் விளையாட்டு வீரர்கள் உள்ளனர். 2018ல் தனது 16 வது வயதிலேயே பிரக்ஞானந்தா என்ற தமிழக சிறுவன் இந்த உயர்தகுதியை பெற்றான். 10 வயதிலேயே இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்தை வென்ற மிக இளவயது சிறுவன் அவன்.

முன்பு விஸ்வநாதன் ஆனந்த் செய்த சாதனைகளை புதிய தலைமுறை வீரர் சாதித்து காட்டுவது பெருமையான ஒன்றாகும்.

சென்னையில் உள்ள வீடுகளில் செஸ் விளையாட்டு உபகரணங்கள் நிச்சயம் இருக்கும். ஆண்டுக்கு ஆண்டு பல நூறு முன்னணி வீரர்களை உருவாக்கியும் வருகிறோம்.

நாடே தமிழகத்தை பாராட்டி வருவதுடன் உலகமே நம் தமிழகத்தை ‘செஸ் உலக தலைநகர்’ என்றே வர்ணிக்கிறது.

ஆனால் கிரிக்கெட் மற்றும் வீடியோ விளையாட்டுகளின் புதிய அவதாரங்களில் பாரம்பரிய செஸ் விளையாட்டு மறக்கப்படாமல் இருக்க இன்றைய தலைமுறைக்கு ஏற்ற நவீன உத்திகளை பயன்படுத்தி முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தி இருக்கும் விழிப்புணர்வு விளையாட்டு நிபுணர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டை பெற்று விட்டது.

மாமல்லபுரத்தில் ‘போர் பாயிண்ட்’ நட்சத்திர ஓட்டலில் 187 நாடுகளின் விளையாட்டு வீரர்கள் சங்கமித்து 343 அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாட இருக்கிறார்கள்.

இந்தியாவின் சார்பாக ஆண்கள் பிரிவில் 3 அணிகளும் மகளிர் பிரிவில் இரு அணிகளும் களம் இறங்க உள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த 7 வீரர்கள் போட்டிகளில் பங்கேற்பார்கள், இவர்களுக்கு ஆலோசகராக உலக சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

மேலும் முத்தாய்ப்பாய் தமிழகம் எங்கும் செஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஒலிம்பியாட் ஜோதி

இந்தியாவே பூரிப்புடன் போட்டிகளை கவனிக்க முக்கிய காரணம் இப்படி ஒரு ஒலிம்பியாட் நம் நாட்டில் முதல்முறையாக நடத்துகிறோம்.

ரஷ்யாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட அகில இந்திய செஸ் அமைப்பு இதை நாம் நடத்தினால் என்ன? என்ற யோசனையில் இருக்கும்போதே தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மிகப்பெரிய தொகையை ஒதுக்கி அந்த சர்வதேச போட்டியை நாங்கள் நடத்துகிறோம் என்று கூறியதை ஏற்று, அதை நடத்தும் வாய்ப்பை நழுவவிட்டு விடாமல் பிடித்து வந்து விட்டது.

மேலும் ஒலிம்பிக் விளையாட்டை போன்றே முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் ஜோதியை செஸ் மன்னனாக விளங்கும் ஆனந்த் பிரதமர் மோடியிடம் இருந்து பெற்று நாடெங்கும் இந்த ஜோதி ஓட்டம் வலம் வந்து சென்னைக்கு வந்து விடும்.

சென்னை நகரமே சதுரங்க அரங்கம் போல் வண்ணமயமாய் காட்சி தருகிறது. எங்கு பார்த்தாலும் செஸ் வீரர்களின் நகல் உருவங்கள், செல்பி எடுத்துக் கொள்ள வசதியாக ராஜா, ராணி பொம்மைகளும் காட்சி தருகிறது.

விமான நிலையம் முதல், கடற்கரை சாலைகள் போன்ற முக்கிய பகுதிகளில் சதுரங்க டிசைன்களில் ஓவியங்கள் என கோலாகலமாய் நாளை போட்டிகளுக்கு விழாக்கோலம் பூண்டு, பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் போட்டிகளை துவக்க தயாராகி விட்டனர்.

செஸ் ரசிகர்களுக்கு பரபரப்பான ஆட்டங்கள் துவங்க நேரம் வந்து விட்டது, ரசிக்கத்தக்க வகையில் ஏற்பாடு செய்து இருக்கும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டியே ஆகவேண்டும்.

வரலாற்று சிறப்பு

உங்களுக்கு தெரியுமா? நாளைய தினம் துவங்கும் இந்த உலக செஸ் ஒலிம்பியாட் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஜூலை 28 அன்று தான் – முதல் உலக யுத்தம் 1914ல் துவங்கிய நாளாகும். அன்று ஆஸ்திரிய பேராயர் பிரான்ஸ் பெர்டினாண்ட் படுகொலை செய்யப்பட அதற்காக சிரியா மீது யுத்தத்தை துவங்கினர். அது ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பெரும் யுத்தமாக வளர்ந்து 4 ஆண்டுகளாக ஒருவர் மீது ஒருவர் ரத்தவெறி தாக்குதல்கள் நடத்தி ஒருவழியாக கோபத்தை கட்டுப்படுத்தி சண்டை சச்சரவு நிறைவுக்கு வந்தது.

உலக நாடுகள் இப்படி போரில் குதித்த நாளை முதல் உலக யுத்தமாக வரலாறு வர்ணிக்கிறது. இறுதியில் அமெரிக்காவும் ஜெர்மனியும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நவ.11, 1918–ல் செய்து கொள்ள உலகெங்கும் அமைதி திரும்பியது.

இன்று ரஷ்யாவில் நடைபெற இருந்த 44–வது சர்வதேச செஸ் ஒலிம்பியாத்தை முதல்வர் ஸ்டாலின் ஏற்பாட்டில் சென்னை அருகே மகாபலிபுரத்தில் பரபரப்பான சதுரங்க வேட்டை, அதே முதல் உலக யுத்தகம் துவங்கிய நாளில் ஆரம்பமாகிறது.

முடிவில் யார் வெற்றி பெற்றாலும் உலக அமைதிக்கு ஆரம்ப விதையாய் இப்போட்டிகள் இருக்கிறது என்பதாக வரலாறு போற்றும்!

Leave a Reply

Your email address will not be published.