சண்டிகர், ஜூன் 30–
நாளை முதல் எந்த விதமான பொருளாதார கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைவருக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், முன்னாள் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தோற்கடித்து ஆட்சியை பிடித்தது. ஆட்சியை பிடித்ததும், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, வீடு தேடி ரேசன் பொருட்கள் வினியோகிக்கும் திட்டத்தை கடந்த மார்ச் மாதத்தில் அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் டெல்லி முதலமைச்சரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறும் போது, ”பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி அமைந்தால், மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
300 யூனிட் இலவசம்
அதேவேளை, கடந்த 2016ம் ஆண்டு முதல் காங்கிரஸ் ஆட்சியில், ஏழைகளுக்கான இலவச மின்வினியோகம் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் இத்திட்டத்தின்படி, எஸ்.சி., பி.சி. பிரிவினர் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழுள்ளோர் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற்று பயன் அடைந்து வருகின்றனர். ஆம் ஆத்மியின் இலவச மின் வினியோக திட்ட உறுதிமொழியின்படி, அனைத்து வீடுகளுக்கும் எந்த விதமான பொருளாதார வேற்றுமையின்றி, 300 யூனிட் வரை இலவச மின்சாரம் நாளை முதல் வழங்கப்பட உள்ளது.
300 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் குறிப்பிட்ட வகையினர் மட்டும் கூடுதல் யூனிட்டுக்கு பணம் செலுத்த வேண்டி இருக்கும். பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், ‘நாளை ஜூலை1 ந்தேதி முதல் இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்று அறிவிப்பு வெளியிட்டதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.