செய்திகள்

நாளை மறுநாள் வளைகாப்பு: ரெயிலிலிருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி பரிதாப மரணம்

விருத்தாச்சலம், மே 3–

விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரெயிலில் சென்ற கர்ப்பிணி கஸ்தூரி என்பவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவிலைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மனைவி கஸ்தூரி என்ற 7 மாத கர்ப்பிணி பெண் தவறி விழுந்து விட்டார். கஸ்தூரியின் வளைகாப்புக்காக சென்னையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு உறவினர்களுடன் சென்று கொண்டு இருந்தபோது இந்த விபத்து நடந்ததாக, உறவினர்கள் கண்ணீரோடு கூறியுள்ளனர்.

வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரெயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அவர் விழுந்தது அறிந்து கதறிய உறவினர்கள், அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ஆனால் அபாய சங்கிலி வேலை செய்யவில்லை. இதனையடுத்து, அடுத்த பெட்டிக்கு சென்று அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தினர். ஆனால், அதற்குள் ரெயில் 8 கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்று விட்டது.

8 கிலோ மீட்டர் சென்று மீட்பு

கர்ப்பிணி விழுந்தவுடன் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பிறகும் ரெயில் நிற்கவில்லை என குற்றம் சாட்டிய உறவினர்கள், சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை தண்டவாளத்தில் நடந்து சென்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ மாம்பாக்கத்தில் கஸ்தூரி சடலமாக கிடந்தார். போலீசார் உதவியுடன் கர்ப்பிணியான கஸ்தூரியின் உடலைத் தேடி மீட்டதாகவும், உடலை தேடி எடுப்பதற்கு 3 மணி நேரமானது என கண்ணீர்மல்க கூறுகின்றனர்.

நாளை மறுநாள் அவருக்கு சங்கரன்கோவிலில் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில், இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்திற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், விரைவு ரயில்களில் பாதுகாப்பு குறைப்பாடா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக, ரயிலில் மருத்துவ அவசரம், விபத்து ஏற்படும் பொழுது, அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தலாம். ஆனால், கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணியை மீட்க அபாயச் சங்கிலியை பலர் இழுத்த போதிலும் ரயில் நிற்கவில்லை.

இந்நிலையில், ரெயில்களின் பாதுகாப்பு குறித்து பலரும் சந்தேகம் எழுப்பிய நிலையில், விபத்து குறித்து உயர்மட்டக்குழு உரிய விசாரணை நடத்த திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *