போஸ்டர் செய்தி

நாளை மறுநாள் மோடி, சீன அதிபர் முக்கிய பேச்சு

Spread the love

சென்னை,அக்.9–

மாமல்லபுரம் சுற்றுலா தலத்தில் நாளை மறுநாள் பிரதமர் மோடியும், சீன அதிபரும் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். இந்த சந்திப்பையொட்டி விஷேச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 ஆயிரம் கலைஞர்களும், 48 ஆயிரம் மாணவர்களும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அண்ணா தி.மு.க.வினரும் தலைவர்களுக்கு 60 கி.மீ. தூரம் வழிநெடுக வரவேற்பு அளிக்கிறார்கள்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக நாளை மறுநாள் சென்னை வருகிறார். பிரதமர் மோடியும் அன்று சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் மதியம் 1.30 மணி அளவில் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் பின்னர் சீன அதிபர் கிண்டியில் உள்ள சோழா கிராண்ட் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் தங்குகிறார். பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்க உள்ளார்.

சிறப்பு ஏற்பாடுகள்

11 -ந் தேதி பிற்பகலில் 2 தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார்கள். அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் ஆகிய இடங்களை பார்வையிடுகிறார்கள். பின்னர் கடற்கரை கோவில் அருகே நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இதற்காக மாமல்லபுரத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சீன அதிபரின் வருகைக்கு நாளை ஒருநாள் மட்டுமே இருப்பதால், சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து வந்துள்ள அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளும், டெல்லியில் இருந்து வருகை தந்துள்ள மத்திய பாதுகாப்பு குழுவினரும் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

50 கி.மீ. காரில் பயணம்

கடலோர பகுதிகள் முழுவதிலும் கடலோர பாதுகாப்பு படையினரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கிண்டியில் இருந்து மாமல்லபுரத்துக்கு சுமார் 50 கி.மீ. தூரம் காரிலேயே சீன அதிபர் பயணம் செய்கிறார். இதற்காக அவர் செல்லும் சாலைகளில் வழி நெடுக போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

விமான நிலையத்தில் இருந்து சோழா கிராண்ட் ஓட்டல் மற்றும் அங்கிருந்து மாமல்லபுரம் வரை 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையில் இரண்டு பக்கமும் நின்று உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

சீன அதிபரின் பாதுகாப்புக்காக தனித்தனியே போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சீன அதிபருக்கு பல்வேறு பயங்கரவாத அமைப்பினர் மிரட்டல் விடுத்து கடிதம் எழுதி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலீசார் உஷார்நிலை

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். சீன பாதுகாப்பு அதிகாரிகளும், மத்திய பாதுகாப்பு குழுவினரும் தங்களது கண்காணிப்பை பல மடங்கு அதிகரித்துள்ளனர்.

இதையடுத்து மாமல்லபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜுகளில் சோதனை நடத்த கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் தங்கியுள்ள திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

திபெத்தியர்கள் கைது

இது தொடர்பாக 2 நாட்களுக்கு முன்னர் சேலையூரில் 8 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று திபெத் பேராசிரியர் ஒருவரும் கைதானார். திபெத்தியர்களின் எதிர்ப்பால் சீன அதிபரின் வருகையின் போது எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனமுடன் செயல்படுகின்றனர்.

இந்த நிலையில் பயங்கரவாதிகள் பெயரில் வந்துள்ள மிரட்டல் கடிதம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரில் இந்த கடிதம் எழுதப்படவில்லை. இருப்பினும் பாதுகாப்பு அதிகாரிகள் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. சீன அதிபரின் பாதுகாப்பு வி‌ஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

800 கேமிராக்கள்

இதற்காக மாமல்லபுரத்தில் 800 கேமராக்களை நிறுவி அதன் மூலமும் கண்காணித்து வருகிறார்கள். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதத்தை எழுதிய நபர்கள் திபெத்தியர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை பிடிப்பதற்கும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர். இவர்களுடன் 200-க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். 24 மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.

விசாரணைக்கு பின்னரே அனுமதி

பிரபல சிற்பக்கூடங்கள், பூங்கா, குடவரை கோயில்கள் இருக்கும் மலைப்பகுதி, கடற்கரை, மேம்பாலம் மற்றும் புலிக்குகை, பிடார ரதம் என அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதணை நடத்தி வருகிறார்கள். மாமல்லபுரம் நகரின் உள்ளே வரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களும் விசாரணைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா கிராண்ட் நட்சத்திர ஓட்டலில் இருந்து மகாபலிபுரத்துக்கு காரில் செல்லும் சீன அதிபருக்கு தமிழக பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், ஒயிலாட்டம், மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்காக 48 ஆயிரம் பள்ளி மாணவர்கள், 5 ஆயிரம் கலைஞர்கள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுதவிர சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அண்ணா தி.மு.க.வினர் மகாபலிபுரம் வரை சாலையின் இரு பக்கம் நின்று வரவேற்பு அளிக்கிறார்கள்.

கடந்த வாரம் முதலே…

பிரதமர் மற்றும் சீன அதிபரின், வருகையையொட்டி சென்னை விமான நிலையம் மற்றும் அவர் செல்லும் பாதை, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சீன அதிபர் வரும் அறிவிப்பு வந்ததுமே மாமல்லபுரம் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையை பொருத்தவரையில் சீன அதிபர் தங்கும் நட்சத்திர ஓட்டலில் துவங்கி முட்டுக்காடு வரை அங்குலம் அங்குலமாக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் கடந்த வாரம் முதலே பாதுகாப்பு பணியில் இறங்கி விட்டனர்.

டிஜிபி திரிபாதி உத்தரவின் பேரில், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் மேற்பார்வையில் நான்கு டிஐஜிக்கள் தலைமையில் 16 துணை ஆணையர்கள் கீழ் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

கண்காணிப்பு வளையத்தில்

சென்னை விமானநிலையம்

சீன அதிபர் வந்திறங்கும் சென்னை விமான நிலையத்தை சுற்றி 3 துணைக்கமிஷனர்கள் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சீன அதிபர் தங்கும் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டல் பகுதியில் மூன்று துணைக்கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் சீன அதிபர் இறங்கியது முதல் மகாபலிபுரம் உள்ள கிழக்கு கடற்கரைச்சாலை பயணப்பாதைகளில் 8 துணை கமிஷனர்கள் மற்றும் 2 கூடுதல் துணை கமிஷனர்கள் தலைமையில் பல மையங்களாக பிரித்து தீவிர பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. சீன அதிபர் விமான நிலையத்திலிருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் செல்லும் சாலைகள், மற்றும் நட்சத்திர ஓட்டலில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலைகள் பல மையங்களாக பிரித்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்குக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாற்றுப்பாதை

மேலும் திட்டமிட்டபடி சீன அதிபர் செல்லும் பயண பாதையில் எதுவும் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்பட்டால் மாற்று பாதையில் அழைத்துச் செல்வதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர். அந்த வழிகளும் செல்வதற்கு ஏற்றபடி வசதியாக ஏற்படுத்தப்பட்டுள்ளனன.

சீன அதிபரும், பிரதமர் மோடியும் தங்கும் கிண்டி நட்சத்திர ஓட்டலில் இருந்து மாமல்லபுரம் வரை உள்ள பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாடு மற்றும் கடலோர காவல்படை, கப்பற்படை மற்றும் கடலோர காவல்குழுமத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் ஆளில்லா குட்டி விமானங்கள், நவீன தொலை தொடர்பு கருவிகள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

சுழற்சி முறையில் பாதுகாப்பு

நேற்று டில்லியில் இருந்து பிரதமர் தனிப்பாதுகாப்புப்பிரிவு அதிகாரிகள் வந்து சீனப்பிரதமர் தங்குமிடங்களை பார்வையிட்டனர். உயர்ந்த கட்டடங்களிலும் காவலர்கள் அமர்த்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னை, காஞ்சிபுரம் போலீசார் உள்பட தமிழகம் முழுவதிலுமிருந்து மொத்தம் 5000 காவலர்கள் சுழற்சி அடிப்படையில் மூன்று ஷிப்ட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கடற்படையை சேர்ந்த 2 கப்பல்களும் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை

இரு தலைவர்கள் சந்திப்பு குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், இரு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு அதிகாரப்பூர்வமற்றது என்பதால், இரு நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தம், கூட்டறிக்கை ஆகியவை ஏதும் இருக்காது. இந்தியா வரும் சீன அதிபருடன், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மற்றும் பொலிட்பீரோ உறுப்பினர்களும் உடன் வருகின்றனர்.

சீன அதிபருடன் பிரதமர் மோடி தனியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பின்னர் இரு நாட்டு தலைவர்களும் அதிகாரிகள் குழுவுடன் இணைந்து பேசுகின்றனர். இரு தரப்பு இடையே பேச்சுவார்த்தையில், குறிப்பிட்ட திட்டம் ஏதும் இருக்காது. இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பை மேம்படுத்துவது, எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

பயங்கரவாதம், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, ஆதரவு குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர். இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் சந்தித்து பேசும் தேதி குறித்தும் இரு தலைவர்களும் முடிவு செய்கின்றனர். சீன அதிபர் இந்தியா வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீனா சென்றதை மிகைபடுத்த விரும்பவில்லை. இம்ரான் பயணம் குறித்து இந்தியாவிற்கு கவலையில்லை. காஷ்மீரில் சிறப்பு சட்டம் நீக்கப்பட்டது இந்தியாவின் உள்விவகாரம் என்பதை சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தெளிவாக கூறிவிட்டன. இதில் விவாதிக்க ஒன்றும் இல்லை. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறப்பு கார்கள் வந்தன

மாமல்லபுரத்தில் நடக்கும் இந்த சந்திப்பில் பங்கேற்க பிரதமர் மோடி விமானம் மூலம் சென்னை வருகிறார். அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்கிறார். சென்னைக்கு விமானம் மூலம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், தனது பிரத்யேக கார் மூலமாகவே மாமல்லபுரம் செல்கிறார். சீன அதிபரின் வருகையை முன்னிட்டு, ஜின்பிங் பயன்படுத்தும் சீனாவிலேயே மிகவும் விலை உயர்ந்த, அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கறுப்பு நிறத்தில் 4 கார்கள், பொருட்கள் ஆகியவற்றுடன், போயிங் 747 விமானம் நேற்று மாலை சென்னை விமான நிலையம் வந்தது.

சீன அதிபர் பயணிப்பதற்கு என்றே, சீனாவில் பழமையான, மிகப்பெரிய உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான எப்ஏடபிள்யூ நிறுவனம் (FAW) ‘ஹாங்கி எல்-5’ ரக கார்களை தயாரித்துள்ளது. இந்த கார் தான் சீனாவிலேயே மிகவும் விலை உயர்ந்த கார் ஆகும். இதன் விலை 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் என தெரிகிறது. உருவத்தில் மிகப்பெரியது, சொகுசானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *