செய்திகள்

நாளை மருத்துவர்கள் தினம்: மேற்கு வங்கத்தில் அரசு விடுமுறை

நாளை மருத்துவர்கள் தினம்: 

மேற்கு வங்கத்தில் அரசு விடுமுறை

மம்தா அறிவிப்பு

 

கொல்கத்தா, ஜூன் 30-

மருத்துவர்கள் தினமான ஜூலை 1 ந்தேதியை (நாளை) அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வரும் நிலையில் உலகில் அதிகம் மதிக்கப்படுபவர்களாக மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போற்றி பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 1–ம் தேதி இந்தியாவில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

பிகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பாங்கிபோர் என்ற ஊரில் 1882 ஜூலை 1ம் தேதி பிறந்தவர் பிதான் சந்திரா ராய். ஏழைகள் மேல் அன்புகொண்ட பி.சி.ராய், மருத்துவப் பணிக்கே தன்னை அர்ப்பணித்தவர். அத்துடன் மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்து மக்கள் சேவையாற்றியவர்.

தன் வீட்டையே ஏழைகளுக்கான மருத்துவமனை கட்ட கொடுத்த டாக்டர் பி.சி.ராய் முதலமைச்சராக இருந்த காலத்தில்கூட ஏழைகளுக்குத் தினமும் இலவச மருத்துவம் செய்தவர். இவர் தான் பிறந்த தேதியான ஜூலை 1ம் தேதியிலே (1962ம் ஆண்டு) மரணம் அடைந்தார்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மார்ச் 30ம் தேதி டாக்டர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்ற போதிலும், டாக்டர் பி.சி.ராயின் நினைவாக இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஜூலை 1ம் தேதி மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் நாளை மருத்துவர்கள் தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில்,“கொரோனா வைரஸிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர முன்கள வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாளை தேதியை மாநில அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளோம்.

முன்கள வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மருத்துவர்கள் தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *