போஸ்டர் செய்தி

நாளை நமதே; நாற்பதும் நமதே: தேனியில் மோடி முழக்கம்

தேனி, ஏப்.13–
‘தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு ஒரே குரல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாளை நமதே, நாடும் நமதே, நாற்பதும் நமதே என்று தான் தெரிகிறது’ என்று பிரதமர் மோடி இன்று காலை தேனி ஆண்டிபட்டி கரிசல்பட்டி விளக்கில் அண்ணா தி.மு.க. – பாரதீய ஜனதா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உறுதிபட கூறினார்.
‘‘இந்தியாவில் ஊழல் மிகுந்த குடும்ப ஆட்சியை உருவாக்க நாம் அனுமதிக்க மாட்டோம்’’ என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
‘ஆண்டிபட்டி தொகுதி எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா ஆகிய இருவரின் தொகுதியாகும். இந்த மண் அவர்களுடைய மண். இந்நிலையில் இங்கு களத்தில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளரால் எதையும் செய்ய முடியாது. இந்த மண்ணிற்கு சொந்தமான ஒருவரை கூட தேர்தல் களத்தில் அவர்களால் நிறுத்த முடியவில்லை’ என்று தாக்கினார்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் மக்களுக்கு செய்தது அநியாயமும், அநீதியும் தான் என்று காட்டமாகத் தாக்கினார்.
புதிய இந்தியாவை கட்டமைக்கும் இயக்கத்தில் இணையுங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் மோடி.
பார்லிமெண்ட் தேர்தலையொட்டி இன்று நடைபெற்ற மாபெரும் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி உணர்ச்சிகரமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நாளை பிறக்கும் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு மக்கள் அனைவருக்கும் என்னுடைய இதயப்பூர்வ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல நாளை அம்பேத்கார் பிறந்த நாள். பாபாசாகிப் அம்பேத்காருக்கு என்னுடைய இதயப்பூர்வமான மரியாதையை செலுத்துகிறேன்.
ஜாலியன் வாலியாபாக் படுகொலையில் உயிர் இழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துறோம்.
இந்த பிரச்சார கூட்டத்திற்கு வருகிற போது ஹெலிகாப்டரில் இருந்து தரையில் பார்த்தேன். மைதானம் முழுவதும் மக்கள் திரண்டிருந்தார்கள். அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் உற்சாகத்தோடு பெருமளவில் திரண்டு இருப்பதை பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி.
இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே குரல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது நாளை நமதே, நாடும் நமதே, நாற்பதும் நமதே என்று தான் தெரிகிறது.
வறுமையை எதிர்த்து
போராடியவர்கள்…
வறுமைக்கு எதிராக போராடியவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும். அவர்கள் இருவரையும் நினைத்து இன்றைக்கு தேசமே பெருமைப்பட்டு கொண்டிருக்கிறது. ஏழை எளிய மக்களின் நலன்களுக்காகவே அவர்கள் இருவரும் வாழ்ந்தார்கள்.
2014–ம் ஆண்டில் ஒரு உறுதிமொழியோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்றேன். இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வதாக உறுதி அளித்தேன். அதை வட்டியும் முதலுமாக திருப்பி தருவேன் என்றும் அன்றைக்கு அறிவித்து இருந்தேன்.
புதிய இந்தியாவுக்கான கனவோடு நிற்கிறேன். இந்தியாவில் அதிமுக்கியமானவர்களான ராணுவ வீரர்கள், விவசாயிகள். இவர்கள் நலனில் உறுதியோடு இருக்கிறேன்.
எதிரிகளின் ஊழல்கள் பற்றி நான் கணக்கு வைத்திருக்கிறேன். வளரும் நாடாக இந்தியாவை முன்னுக்கு கொண்டு வருவதில் அதற்கான வளர்ச்சி நடவடிக்கைகளை ஏற்க காங்கிரசும் தி.மு.க.வும் விரும்பவில்லை. ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்த காங்கிரசும் தி.மு.க.வும் இன்று நண்பர்களாக இருக்கிறார்கள்.
‘2ஜி’ விவகாரத்தில்
விமர்சித்தார்கள்
2ஜி விவகாரத்தில் தி.மு.க.வை கடுமையாக காங்கிரஸ் விமர்சித்து வந்தது. அதுவே இன்றைக்கு தி.மு.க.வோடு கைகோர்த்து இருக்கிறது. 1979–ல் தி.மு.க.வை காங்கிரஸ் எப்படி அவமதித்தது என்பது என்கு நன்றாகவே தெரியும். காங்கிரசும் தி.மு.க.வும் ஒன்றாக இணைந்து இப்போது மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று தி.மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை அவருடைய கூட்டணி கட்சியினர் யாரும் ஏற்கவில்லை. அக்கூட்டணியில் இருப்பவர்களில் மம்தா உள்ளிட்ட பலரும் பிரதமராக வர துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ராகுல் பிரதமர் வேட்பாளர் என்று தி.மு.க. முன்மொழிந்ததை கூட்டணி கட்சிகள் எதுவம் ஏற்கவில்லை.
தந்தை–மகன்
கூட்டுக் கொள்ளை
தந்தையும் நிதியமைச்சர் மகனும் நாட்டை கொள்ளையடித்திருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தை ஏடிஎம் ஆக்கி தங்களுக்காக பயன்படுத்தி மோசடி செய்திருக்கிறார்கள். துக்ளக் சாலை ஊழல் என்று மக்கள் இப்போது பரவலாக பேச துவங்கி விட்டார்கள். எப்போது எல்லாம் அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்களோ, அப்போது எல்லாம் கொள்ளையடித்து வருகிறார்கள்.
நாட்டு மக்களை யாரும் முட்டாள் ஆக்கி விடாமல் நான் காவலாளியாக இருக்கிறேன். முட்டாளாக முயற்சிப்பவர்களை உங்கள் காவலாளியாக இருக்கும் நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். ஊழல் மிகுந்த குடும்ப ஆட்சி உருவாகவும் அனுமதிக்க மாட்டோம்.
இலங்கை தமிழர்கள் வளர்ச்சிக்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டும். ஆனால் அவர்களின் வளர்ச்சிக்கு எதிர்க்கட்சியினர் உறுதுணையாக செயல்பட மாட்டார்கள். ராணுவ வலிமையை கேள்வி கேட்பவர்களை என்ன செய்யவேண்டும்? ராணுவத்தை பலவீனமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களை எப்படி கையாளப் போகிறோம்? என்பதை நாம் யோசிக்க வேண்டும்.
தேச பாதுகாப்பில்
சமரசம் கிடையாது
தேசப்பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் என்பது கிடையாது. இதுவிஷயத்தில் நீங்கள் தான் ஒரு சரியான முடிவை சொல்ல வேண்டும். தேச பாதுகாப்பை அரசியல் ஆக்கி ராணுவ வீரர்களையும், ராணுவத்தையும் காங்கிரஸ் அவமதித்து வருகிறது.
நேர்மையற்றவர்கள் தான் இந்த காங்கிரஸ்காரர்கள். 60 ஆண்டுகளாக எதுவும் செய்யாதவர்கள் இப்போது மக்களுக்கு இயன்றதை செய்வோம், அவர்களுக்கு நியாயம் வழங்குவோம் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள். அதை அவர்களால் எப்படி செய்ய முடியும்.
1984–ம் ஆண்டில் டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கு காங்கிரஸ் நியாயம் வழங்குமா? 1980–ல் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். அரசை காங்கிரஸ் கலைத்தார்களே, அதற்கு என்ன காரணம் சொல்வார்கள். போபால் விஷ வாயு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு என்ன நியாயம் வழங்கப்போகிறார்கள்?
ஆனால், காங்கிரஸ் – திமுக இணைந்துகொண்டு நமது நோக்கத்தை திசை திருப்புகின்றன. அவர்கள் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே ஒன்று சேர்த்திருக்கின்றனர். கடந்த கால கசப்புகளை எல்லாம் மறந்து காங்கிரஸ் – திமுக கூட்டணி அமைத்திருக்கிறது.
விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குப் பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ளது. முதல் தவணை செலுத்தப்பட்டு விட்டது. இரண்டாம் தவணைக்கான காலமும் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரின் விருப்பங்களையும் பாஜக அரசு நிறைவேற்றும். வாக்கு வங்கி
அரசியல்
வாக்கு வங்கி அரசியலுக்காக தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டுள்ளது. வைகை ஆற்றை கங்கை மாதிரி சீரமைக்க நினைக்கிறேன்.
தமிழக விவசாயிகளுக்காக எதிர்க்கட்சியினர் நீலிக் கண்ணீர் தான் வடிக்கிறார்கள். தமிழகத்திற்கு தண்ணீர் விடாமல் தடுப்பது யார்? என்பது எங்களுக்கு தெரியும்.
சபரிமலை பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தர அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இதை செய்திருக்க முடியும். ஆனால் முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் இதை ஏன் செய்யவில்லை?
புதிய இந்தியா:
இணையுங்கள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் தொகுதி இந்த மண்ணில் காங்கிரஸ் வேட்பாளரால் எதுவும் செய்யமுடியாது. இந்த மண்ணிற்கு சொந்தமான ஒருவரை கூட வேட்பாளராக அவர்களால் தேர்வு செய்யமுடியவில்லை.
புதிய இந்தியாவை கட்டமைக்கும் இயக்கத்தில் இணையுங்கள். எங்கள் கூட்டணி வெற்றி பெற வாக்களியுங்கள்.
இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *