செய்திகள்

நாளை நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம்

இணைய நேரலையில் காணலாம்

சென்னை, ஜூன் 9–

நாளை மதியம் நிகழும் நடப்பாண்டின் முதல் சூரிய மறைப்பு நிகழ்வை, லடாக், அருணாச்சல பிரதேசத்தில் இருப்பவர்கள் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம், மே 26 ந்தேதி நிகழ்ந்தபோது, வழக்கத்திற்கு மாறாகப் பெரிதாகவும், வெளிச்சமாகவும் நிலவு காட்சியளித்தது. உலகின் பல மூலைகளில் இருந்து அந்த நிகழ்வை மக்கள் பார்த்து ரசித்தார்கள். அன்று காட்சியளித்த நிலவின் அழகிய புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது. ஆனால், அது இந்தியாவில் தெரியவில்லை.

அதேபோல், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழவிருக்கிறது. இந்த நிகழ்வையும் உலகின் சில பகுதிகளில் இருப்பவர்களால் மட்டுமே பார்க்க முடியும் என நாசா குறிப்பிட்டுள்ளது.

சூரிய மறைப்பு

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வரும்போது, அது சூரிய மறைப்பு அல்லது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. நாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின் போது சூரியனை முழுமையாக மறைக்கும் அளவுக்கு, தூரத்தில் நிலவு இருக்காது என்பதால், சூரியன் நிலவை மறைக்கும் அந்த நேரத்தில், சூரியன் நெருப்பு வளையம் போன்று காட்சியளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த சூரிய மறைப்பையும் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலானவர்களால் பார்க்க முடியாது. லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இருப்பவர்களால் மட்டும் பகுதியாக இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்குத் தொடங்கி மாலை 6.41 மணி வரை சூரிய கிரகணம் நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கனடாவின் சில பகுதிகள், வடக்கு ரஷ்யா மற்றும் கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் இருப்பவர்கள் இந்தச் சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடியும். கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா, கரீபியனின் சில பகுதிகள், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பகுதியாகப் பார்க்க முடியும் என நாசா இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து சூரிய கிரகணத்தை, நேரடியாகப் பார்க்க முடியவில்லை என்றாலும் இணையத்தில் காணலாம். Timeanddate.com இணையத்தில், https://www.timeanddate.com/live/eclipse-solar-2021-june-10 இணைய முகவரியில் நேரலை ஏற்பாடுகளை பகிர்ந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *