செய்திகள்

நாளை சேலத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்

Makkal Kural Official

* பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் * டிரோன்கள் பறக்க தடை

சேலம், மார்ச் 18–

சேலத்தில் நாளை நடைபெறும் பா.ஜ.க.வின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, தூத்துக்குடி, சென்னை நந்தனம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.இந்த நிலையில் இன்று மாலை கோவையில் பிரதமர் மோடி ரோடு ஷோ (வாகன பேரணி) செல்கிறார். கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே புறப்படும் இந்த வாகன பேரணி ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே முடிவடைகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் இருந்து விமானம் மூலம் மாலை 5.30 மணிக்கு கோவை வருகிறார். பின்னர் கார் மூலம் சாய்பாபா காலனிக்கு சென்று வாகன அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். வாகன அணிவகுப்பு நடைபெறும் பகுதியில் சாலையின் இருபுறத்திலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி இரவு கோவையில் தங்குகிறார்.

பின்னர் நாளை (19-ந் தேதி) கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 11.40 மணியளவில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதனை தொடர்ந்து சேலம், நாமக்கல், கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான பிரச்சாரக்கூட்டம் சேலத்தில் நாளை மதியம் 1.30 மணியளவில் நடக்கிறது. இதற்காக சேலம் அருகே உள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் 44 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். பொதுக்கூட்ட மேடையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டி, மக்களையும் சந்திக்கிறார்.

இந்த கூட்டத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.

பிரதமர் மோடி வருகையையொட்டி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.மேலும் பிரதமரின் தனி பாதுகாப்பு படையினரும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் மைதானம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் சேலம் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும் 2 நாட்கள் டிரோன்கள் மற்றும் ஆள் இல்லாத விமானங்கள் பறக்க தடை விதித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் உத்தரவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *