செய்திகள்

நாளை எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியார் 103–வது பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர், அமைச்சர்கள் மரியாதை

சென்னை, செப்.15–-

சுதந்திரப்போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக முதல் குரல் கொடுத்தவருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாரின் 103–வது பிறந்த நாளை முன்னிட்டு, முதலமைச்சர், அமைச்சர்கள் படையாச்சியாரின் திருவுருவ சிலைக்கு, நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் 1918–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16–ந் தேதி பிறந்தார். இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, சுதந்திரம் பெற அரும்பாடுபட்டவர். இந்தியா விடுதலை அடைந்த பின்பு 1952–-ம் ஆண்டு தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். 1952–-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராமசாமி படையாச்சியார் உட்பட 19 உழைப்பாளர் கட்சி வேட்பாளர்கள் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவைக்கான தேர்தலில் 4 இடங்களில் இக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

பின்னர் 1954–-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக 1957–ம் ஆண்டு வரை பணியாற்றினார். பின்னர் 1980 மற்றும் 1984-ம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். முதன் முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு வழங்க குரல் கொடுத்தவர் படையாச்சியார்.

அவரது பணியினை சிறப்பிக்கும் வகையில் இவரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று 29.6.2018 அன்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும், ராமசாமி படையாச்சியாரின் பெருமைக்கும், புகழுக்கும் சிறப்பு சேர்க்கும் விதமாக, அவர் பிறந்த கடலூர் மாவட்டத்தில், அரசு சார்பாக ஒரு நினைவு மண்டபமும், அந்த நினைவு மண்டபத்தில் அவருக்கு முழுஉருவ வெண்கலச் சிலையும் அமைக்கப்படும் என்று 19.7.2018 அன்று மேட்டூரில் நடைபெற்ற அரசு விழாவில் அறிவித்தார்.

அதன்படி, கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 69 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கி நினைவு மண்டபம் அமைக்க, 24.8.2018 அன்று அரசாணை வெளியிடப்பட்டு, 14.9.2018 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. 2019–ம் ஆண்டு நவம்பர் 25 ந் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், கடலூர் பேருந்து நிலையம், ரெயில் பாதை, அரசு மருத்துவமனை, ஐடிஐ ஆகியவைகளுக்கு தனது சொந்த இடத்தை, அரசுக்கு வழங்கிய பெருமைக்குரியவர் எனவும் நினைவு கூர்ந்தார். சட்டப்பேரவை யிலும் அவரது உருவப் படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்த நாள் அரசு விழா வாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *