இன்று ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு
சென்னை, மார்ச் 29–
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.51 ஆயிரத்து 120க்கு விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குறைந்த தங்கம் விலை, அக்டோபர் 4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்ததங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிசம்பர் 4–ந்தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.
இதைத் தொடர்ந்து நடப்பாண்டில் தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
ஒரே அடியாக ஏற்றம்
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து புதிய உச்சமாக ரூ.51,120க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை நேற்று ரூ.6,250க்கு விற்பனையான நிலையில், இன்று 140 ரூபாய் உயர்ந்து ரூ.6,390க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசு உயர்ந்து ரூ.80.80-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 உயா்ந்து ரூ.80,800-க்கும் விற்பனையாகிறது.
கடந்த திங்கள்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.49,640-க்கும். செவ்வாய்க்கிழமை சற்று குறைந்து ரூ. 49,600-க்கும் விற்பனையானது. புதன்கிழமை கிராமுக்கு ரூ.15 உயா்ந்து ரூ. 6,215-க்கும், சவரனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ. 49,720-க்கும் விற்பனையானது.
100 ஆண்டுகளுக்கு முன்
ஒரு சவரன் ரூ.20
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சரவன் தங்கம் ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர், 1980-ம் ஆண்டில் ஒரு சவரன் ரூ.1,000 என்ற நிலையை கடந்தது. அதன் தொடர்ச்சியாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயேதான் இருந்து வருகிறது. 2009-ம் ஆண்டில் ரூ.10 ஆயிரத்தையும் தாண்டியது. அதிலும் கொரோனா தொற்றுக்கு பிறகு, அதாவது, 2021-ம் ஆண்டில் இருந்து தங்கம் விலையில் அதிரடி மாற்றத்தை பார்க்க முடிந்தது. 2020-ம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் ரூ.30 ஆயிரம் என்று இருந்தது. அது 2021-ம் ஆண்டில் ரூ.35 ஆயிரமாக அதிகரித்தது. அதன் பின்னர், 2022-ம் ஆண்டில் ரூ.40 ஆயிரம் என்ற அளவுக்கு வந்தது. கடந்த ஆண்டில் (2023) ரூ.45 ஆயிரம் என்ற நிலையையும் அடைந்தது.
இந்த விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில், தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வருகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி, தொடர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 5 ஆண்டுகளில் பவுனுக்கு ரூ.25 ஆயிரமும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.4 ஆயிரத்து 600ம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக மெட்ராஸ் தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமாரிடம் கேட்டபோது, ‘சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீது பெரும் முதலீட்டாளர்களின் கவனம் இருந்து வருகிறது. இதனால் அதன் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்து வருகிறது. வரக்கூடிய நாட்களிலும் விலை அதிகரித்து காணப்படும். இடையில் ஓரளவுக்கு விலை குறையும். ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தையும் கடக்கவே வாய்ப்பு அதிகம் உள்ளது’ என்றார்.