சிறுகதை

நாற்காலி சத்தம்- ராஜா செல்லமுத்து

அரசு பொது நூலகம் . அங்கு யார் வேண்டுமானாலும் போகலாம் படிக்கலாம் .

அத்தனையும் இலவசம் என்பதால் சிலர் அந்த நூலகத்தை அரசு தேர்வு எழுதுவதற்கு பயன்படுத்துகிறார்கள் .சிலர் பொது அறிவு வளர்த்துக் கொள்வதற்கு புத்தகங்கள் படிக்கிறார்கள் .தினசரி நாளிதழ் படிக்கிறார்கள். மாத இதழ்கள் பத்திரிகைகள் என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அறிவை பெருக்கிக் கொள்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலான மனிதர்கள் அங்கு வருவது உண்மையில் அறிவை வளர்க்கத் தானா? என்பது சந்தேகம் .

சில நூலகங்கள் காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும் வழக்கத்தை கொண்டிருப்பதால் சிலர் காலையில் கையெழுத்து போட முதல் ஆளாக வந்து, இரவு கதவு சாத்தும் போது திரும்பும் ஆட்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

ஆனால் ஒரு சில மனிதர்கள் அந்த நூலகத்திற்கு வருவது ஒப்புக்கு இரண்டு செய்தித் தாள்களை புரட்டி விட்டு மதிய நேரம் மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு தூக்கம் போடுவதற்கு தான் அங்கு வருகிறார்கள். அதைவிட இன்னொரு விஷயம் கொடுமையாக இருக்கும் குசு குசு என்று பேசும் மனிதர்கள். செல்போனில் பேசும் மனிதர்கள். இதைவிட ஜோடி ஜோடியாக வந்து பார்க் போல அமர்ந்து படிக்கும் மனிதர்களுக்கு அந்த நூலகம் ஒரு விதமான பூங்கா சாயலில் மாறத் தொடங்கியது .

ஆனால் அந்த மனிதர்கள் தூங்குவதைப் பார்த்து பால்ராஜ் ரொம்பவே வருத்தப்பட்டான்.

பால்ராஜ் ஒரு அரசு தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு கல்லூரிப்படிப்பை முடித்த மாணவன். எப்படியாவது அரசாங்க வேலையில் சேர்ந்து அரசாங்கச் சம்பளத்தை வாங்கி விட வேண்டும் என்ற உழைப்பில் இருக்கிறான்.

அதனால் தினந்தோறும் நூலகத்திற்கு வந்து படிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தவன் ஆரம்பத்தில் மேலே சொன்ன அத்தனையும் பார்த்து கேட்டு கோபமாக இருந்த பால்ராஜ் இப்போதெல்லாம் கோபப்படுவதே இல்லை .

யாரும் எக்கேடுகெட்டு போகிறார்கள் என்று விட்டு விடுவான். ஆனால் இன்னொரு விஷயம் தான் அவனை உறுத்தி கொண்டே இருந்தது .

சிமெண்ட் தரையில் போடப்பட்ட பிளாஸ்டிக் நாற்காலியை சர் சர் என்று இழுக்கும் மனிதர்களை பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு கடுமையான கோபம் வரும் . என்ன மனிதர்கள் இவர்கள் ? ஏன் இப்படி இந்த நாற்காலியை இவ்வளவு சத்தமாக இழுக்கிறார்கள் என்று மனதிற்குள் திட்டுவான் .

இப்படி பொறுப்பில்லாத மனிதர்களைக் கேட்டு விடலாமா? என்று கூட நினைப்பான்.

இது என்ன இரும்பு தட்டும் இடமா? அல்லது கல்யாண மண்டபமா? இது நூலகம் அமைதியாக இருக்க வேண்டும் என்று இங்கிதம் கூடத் தெரியவில்லை இவர்களுக்கு என்று பால்ராஜ் அவனுக்குள்ளே புழுங்கிக் கொண்டான் .கேட்டால் எதுவும் தவறாக நினைத்து விடுவார்களோ? என்ற அச்சம் வரும் மனதில் இருந்து இருந்தாலும் ஒரு நாள் இதைக் கேட்டு விட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான்.

ஒரு குறிப்பிட்ட நபர் என்று இழுத்துக் கொண்டே இருப்பார். எதற்காக அந்த நாற்காலியை இப்படி இழுக்கிறார்? என்று அவனுக்கு தெரியாது .

ஆனால் ஒரு நாள் கேட்டு விட வேண்டும் என்று முடிவு செய்தான்.

ஒருநாள் அவரிடம் கேட்டே விட்டான்.

சார் இது லைப்ரரி ஏன் இப்படி சத்தமா சேரை இழுக்கிறீங்க? அமைதியாக இருக்கக் கூடாதா? என்று கேட்டபோது

அவர் பதில் ஏதும் சொல்லாமல் புன்முறுவல் பூத்தபடியே பதில் பேசாமல் போனார் . பால்ராஜுக்கு வருத்தம் இருந்தது. மறுநாளும் கேட்டான் பால்ராஜ்.

அந்த நாற்காலியை இழுக்கும் பெரியவர் கொஞ்சம் படித்தவராக இருந்தார் .

பால்ராஜ் கேட்ட கேள்விக்கு இரண்டு நாளில் பதில் சொன்னார்.

தம்பி நாற்காலியில் இழுக்கிறது உங்களுக்கு தொந்தரவுல்ல. ஆனால் நான் செய்றதுல ஒரு அர்த்தம் இருக்கு. இங்க வர்ற பாதிப்பேர் தூங்கிக்கிட்டு இருக்காங்க. இது லைப்ரேரி எப்படி இருக்கணும்னு உங்களுக்கு தெரியல்

நம்ம சொன்னா, நீ யாருன்னு கேட்பாங்க.. அதனால் அதை உணரவும் அவருடைய தூக்கம் கலைக்கவும் தான் இந்த நாற்காலியை சத்தமா இழுக்கிறேன் என்றார்.

இது ஒருவிதமான டெக்னிக் தம்பி என்றார் அந்த பெரியவர்.

இப்படிப்பட்ட மனிதரை தவறாக நினைத்து விட்டோமே ? என்று வருத்தப்பட்டான் பால்ராஜ்.

மறுநாள் சில பேர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். சிலபேர் பேசிக்கொண்டிருந்தார்கள். அது நூலகம் மாதிரி தெரியவில்லை. ஒரு பூங்கா மாதிரி தெரிந்தது பால்ராஜுக்கு.

இப்போது அந்தப் பெரியவர் நாற்காலியை இழுப்பதற்குப் பதிலாக

சர் என்று பால்ராஜ் நாற்காலியை இழுத்தான்.’ இதைச் செய்த பால்ராஜை பார்த்து அந்தப் பெரியவர் மெல்லச் சிரித்தார்.

Leave a Reply

Your email address will not be published.