சிறுகதை

நாய் குரைத்தது! | சின்னஞ்சிறுகோபு

அது பொன்செய் என்ற கிராமத்தின் அக்கிரஹாரம்.

அருகிலேயே பூம்புகாரை நோக்கி ஓடும் காவிரியாறு. கரையில் ஒரு பழைய அரசமரம். எப்போதோ கட்டிய படித்துறை. அந்த அரசமரத்தில் அதுவும் இந்த ஆடி மாதத்தில் அக்காக்கா குருவிகள் எங்காவது உட்கார்ந்துக் கொண்டு

‘அக்காக்கா… அக்காக்கா…’ என்று கூவிக்கொண்டேயிருக்கும்.

காவிரிக்கு கிழக்கு கரையில் திருநாங்கூரை நோக்கி செல்லும் ஒரு தார்சாலை. அதை சேர்ந்தாற்போல் திருவைகுந்த பெருமாள் கோயில் என்னும் ஒரு பழைய கோயில். மிகச் சிறிய கோயில்தான். அந்தக் கோயிலின் பட்டாச்சாரியாரின் வீடு பக்கத்திலேயே இருந்தது.

அந்த கோவில் கிழக்கு பக்கம் பார்த்தபடி அந்த அக்கிரஹாரத்தின் தெரு முனையில் இருந்தது. அந்த தெரு கிழக்கே சென்று ஒரு திடலில் முடிவடையும். அதன்பிறகு வயல்வெளிதான்!

அந்த அக்ரஹாரம் மிகப் பழமையாக இருந்தது. இரண்டு பக்கமும் ஓட்டு வீடுகள். வீடுகளின் கொல்லைகள் பலவித மரங்களுடன் ஒரே பசுமையாக இருந்தது.

தெருவில் இரண்டு பக்கமும் இருபது வீடுகள்தான் இருக்கும். அதிலும் சில வீடுகள் பூட்டிக் கிடந்தன. இன்னும் சில வீடுகள் கவனிப்பாரின்றி இடிந்துக் கொண்டிருந்தன.

இப்போதைய தலைமுறையை சேர்ந்தவர்கள் எல்லாம் சென்னை, பெங்களூரு, மும்பை, வெளிநாடுகள் என்று போய்விட அந்த அக்கிரஹாரத்தில் நடுத்தர வயதைத் தாண்டியவர்களும் ஓய்வு பெற்றவர்களுமே அதிகமிருந்தனர்.

அந்த தெருவின் கிழக்கே கடைசி வீட்டில் அரங்கநாத அய்யங்கார் இருந்தார். அந்த வீட்டில் அவரும் அவர் மனைவியும் மட்டுமே இருந்தனர்.

அரங்கநாயகம் போலீஸ் இலாகாவில் ஒரு பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்.

கடைசி காலத்தை நிம்மதியாக கழிக்க இந்த சொந்த ஊருக்கே வந்து விட்டார். எண்பது வயதிலும் அவரும் அவர் மனைவியும் நல்ல திடகாத்திரமாக இருந்தனர்.

அரங்கநாதன் ஒரு பசுமாடு வளர்த்தார். அவர் வீட்டுக்கு அடுத்து இருக்கும் திடலில் ஒரு வைக்கோல்போர் இருக்கிறது. அது அவருடையதுதான். அந்த பெரிய திடல் சும்மா கிடக்கிறதேயென்று அந்த இடத்தில் தனது மாட்டுக்கான வைக்கோல் போரை போட்டிருந்தார். அந்த திடலுக்கு பக்கத்திலிருந்து வெகு தூரத்திற்கு வயல்கள்தான். மிகத்தொலைவில் தெரியும் சில பனைமரங்களைத் தவிர கண்ணுக்கெட்டிய தூரம்வரை மரங்களே இல்லை!

உங்களுக்கு கறுப்பனைத் தெரியுமா?

யாரவன் என்கிறீர்களா?

அந்த அக்ரஹாரத்திலேயே சர்வநேரமும் உலாவரும் அந்த தெருவுக்கு சொந்தமான நாய்தான் கறுப்பன்!

உடல் முழுவதும் கொஞ்சம்கூட வெள்ளை நிறமேயில்லாமல் ஒரே கறுப்பாக இருந்ததால் அதற்கு கறுப்பன் என்ற பெயர் காரணப் பெயராயிற்று!

அந்தக் கறுப்பன் மூன்று வருடங்களுக்கு முன் தனது தாயைப் பிரிந்து, இந்த அக்ரஹாரத்திற்கு தஞ்சம் வந்து இங்கேயே தங்கிவிட்டது.

குட்டியிலிருந்து இப்போதுவரை அது சோனியாகவே இருந்தது. அந்தத் தெருவில் யார் வீட்டிலிருந்தாவது மிச்சம் மீதி, மீந்தது அதற்கு கிடைத்து விடும். ஓரளவு சாப்பாடு கிடைத்தும் கூட அது சோனியாகவேதான் இருந்தது. அதன் உடல்வாகே இதுதான் போலிருக்கு!

அந்தத் தெருவுக்கு வேறெந்த நாயும் வராததால் அதற்கு ஒரு நிம்மதியும் தனிச் சுதந்திரமும் இருந்தது.

கறுப்பன் சரியான பயந்தாங்கொள்ளி. அது குட்டியிலிருந்து ஒரு வயதுவரை அது தன் நிழலைப் பார்த்துக் கூட பயந்து ஓடிக் கொண்டிருந்தது!

பயப்படுமே தவிர, அது குரைக்கவே குரைக்காது. நாய் என்றால் அது குரைக்க வேண்டும், அல்லது கடிக்க வேண்டும்! அந்த இரண்டு பழக்கமும் அதற்கு இல்லை! சொல்லப் போனால் அது குரைத்து யாருமே பார்த்ததில்லை!

அது காலையிலிருந்து இரவுவரை இரண்டு மூன்று தடவை அந்த அக்கிரஹாரத்திலேயே கிழக்கும் மேற்குமாக நடந்துச் செல்லும்.

யாராவது ஒரு வீட்டிலாவது அதைப் பார்த்து, “தோ…தோ…” யென்று கூப்பிட்டு, இட்லி, உப்புமா என்று ஏதாவது போட்டுவிடுவார்கள்.

இரவு ஆனதும் கிழக்கே கடைசியிலிருக்கும் அரங்கநாதன் வீட்டு திண்ணையில் போய் படுத்து விடும்.

அரங்கநாதனும் அதை அதட்டி விரட்டுவதில்லை. வீட்டுக்கு ஒரு காவல்போல இருந்துவிட்டு போகட்டுமேயென்று விட்டுவிட்டார். சில நாள் அவரும் அதுக்கு இட்லி, தோசையென்று ஏதாவது போடுவார்!

அன்று இரவு திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. இரவு ஒரு மணியிருக்கும். இடியுடன் கூடிய பலத்த மழை! அப்போது மின்சாரமும் நின்று அந்த கிராமமே இருட்டாகி விட்டது.

திடீரென்று அந்த தெருநாய் கறுப்பன் சத்தமாக குரைக்க ஆரம்பித்தது.

அந்தக் குரைக்காத நாய் அன்று அதிசயத்திலும் அதிசயமாக குரைத்தது! குரைத்தது…..குரைத்துக் கொண்டேயிருந்தது!

முதலில் வீட்டுக்குள் படுத்திருந்த அரங்கநாதன் நாய் குரைத்ததை சரியாக உணரவில்லை! மழை சற்று ஓய்ந்து தூறலாக தொடர்ந்தபோதுதான்,

“என்னது, நம்ம கறுப்பன் இப்படி குரைக்குது? அதிசயமாக இருக்கே! அதுவா இப்படி குரைக்கிறது?” என்று கையில் டார்ச் லைட்டுடன் கதவைத் திறந்துக்கொண்டு வெளியே வந்தார்.

‘அது புதுசா எதையாவது பார்த்திருக்குமா?’ என்று யோசித்துக் கொண்டே வந்தார்.

அது அரங்கநாதனைப் பார்த்தவுடன் ஓடிப்போய் வைக்கோல் போருக்கு அருகே நின்று குறைத்தது!

அரங்கநாதன் டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தபோது, அவர் கண்ணுக்கெட்டிய தூரம்வரை நடவு செய்யப்பட்ட வயல்கள்தான் தெரிந்தது.

அரங்கநாதனுக்கு வயதாகி விட்டதே தவிர, போலீஸ்துறையில் இருந்தவர் என்பதால் பயமில்லாமல் வைக்கோல்போரை சுற்றிப் பார்த்தார்!

அவருக்கு வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை.

ஆனாலும் ‘குரைக்காத இந்த நாய் குரைக்கிறது என்றால் அதற்கு காரணமில்லாமல் இருக்காது. காலையில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று நினைத்துக் கொண்டார்.

அப்போது மீண்டும் மழை பலமாக பிடித்துக் கொண்டதால் அவர் வீட்டுக்குள் சென்று படுத்துவிட்டார். அப்போதும் அந்த நாய் அந்த வைக்கோல்போரைப் பார்த்து குரைத்துக் கொண்டேயிருந்தது!

மறுநாள் காலையில் அரங்கநாதன் திடலுக்குப் போய், வைக்கோல் போரை சுற்றி சுற்றி வந்து ஆராய்ந்தார். அவருடன் கூடவே அந்த தெருநாய் கறுப்பனும் பின்னாலேயே சுற்றிவந்தது.

வீட்டுக்கு வந்தபோது, அவர் மனைவி,

“நேற்று இரவு ஏன் கறுப்பன் குரைத்துக் கொண்டே இருந்தது? அது கூட குரைக்குமா?” என்றார்.

“ஏன் நாயின்னா குரைக்காதா? சரி, நான் டவுனுக்குப் போய் மாட்டுக்கு தீவனம் வாங்கிட்டு வருகிறேன்!” என்று புறப்பட்டார்.

அன்று இரவு வழக்கம்போல கறுப்பன் அரங்கநாதன் வீட்டுக்கு வந்து திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தது.

இரவு பத்து மணியிருக்கும் வீட்டுக்குள் இருந்து வந்த அரங்கநாதன், அந்த நாயைப் பார்த்து “நேற்று மாதிரி இன்று நீ குரைக்கக் கூடாது” என்று சொல்லியபடி அதன் முகத்தில் மயக்க மருந்தை ஸ்பிரே செய்தார்!அது எந்த சத்தமும் இல்லாமல் மயக்க நிலைக்குப் போய்விட்டது!

“இன்னும் நாலு மணி நேரத்திற்கு இதுக்கு சுயநினைவு திரும்பாது.இன்னைக்கு அது குரைக்காது!” என்று தனக்குள் சொல்லிக்கொண்டே, தனது செல்போனை எடுத்து யாரிடமோ மெல்லிய குரலில் பேசினார். பிறகு வீட்டிற்குள் போய்விட்டார்.

சிறிது நேரத்தில் தெருவிளக்குகள் அணைந்தன. அதேசமயத்தில் ஒரு ஐந்து முரட்டு உருவங்கள் எங்கிருந்தோ வந்து, அரங்கநாதன் வீட்டுத் திண்ணையில் பதுங்கின!

இரவு ஒரு மணியிருக்கும். அந்த பொன்செய் அக்ரஹாரத்தின் கிழக்கு பக்கத் திடலில் ஒரே விசில் சத்தங்கள். டார்ச் லைட்டுகளின் வெளிச்சங்கள். நிறைய மனிதர்களின் ஓடும் சத்தங்கள். அதே சமயம் எங்கிருந்தோ ஒரு போலீஸ் வேன் வந்து நின்றது!அந்த தெருவிலிருந்தவர்கள் எல்லாம் விழித்துக்கொண்டு என்னவோ எதுவோ என்று தெருவுக்கு ஓடோடி வந்துப் பார்த்தார்கள்!

நடந்தது இதுதான்!

‘நேற்று இரவு இரண்டு சிலைத் திருடர்கள் இரண்டு மைல் தூரத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் கோதண்டராமர் கோவிலிருந்த ஒரு பஞ்சலோக சிலையை திருடிக்கொண்டு வந்திருக்கிறார்கள். வரும்போது இடியுடன் கூடிய மழை மிகக் கடுமையாக பிடித்துக் கொண்டதால் சிலையை வெகு தூரத்தில் தங்கள் கார் நிறுத்தியிருக்கும் மெயின் ரோட்டுக்கு எடுத்து செல்ல முடியாத காரியம் என்பதை உணர்ந்து, யாருமே இல்லாத இந்தத் திடலில் இருந்த இந்த வைக்கோல் போரின் மேல் பாகத்தில் போட்டு நன்றாக உள்ளே மறைத்து வைத்துவிட்டு மறுநாள் இரவு வந்து எடுத்துச் செல்லலாம் என்று முடிவு செய்து செயலில் இறங்கியிருக்கிறார்கள். காலையில் மாட்டுக்கு வைக்கோல் பறித்தாலும் வைக்கோல் போரின் கீழாகத்தான் பறித்து எடுப்பார்கள், சிலை அவர்களுக்குத் தெரியாது என்று நினைத்தார்கள்.

அப்படி அவர்கள் செய்தபோதுதான் கறுப்பன் என்ற நம்ம நாயும் இதுவரை இப்படி ஒரு வித்தியாசமான காட்சியை பார்க்காத அது மிகவும் பயந்துப்போய், தன்னுடைய இயல்பான நாய் குணம் பீறிட்டு வெளிப்படக் குரைக்க ஆரம்பித்திருக்கிறது. என்ன இருந்தாலும் அதுவும் நாய்தானே!

ஆனாலும் அந்தக் கடும் மழையில் அந்தச் சிலை திருடர்களுக்கு அது கேட்கவில்லை. சிலையை வேகம் வேகமாக வைக்கோல் போரில் பத்திரப்படுத்திவிட்டு, மறுநாள் இரவு வந்து எடுத்துக் கொள்ளலாமென்று ஓடிவிட்டார்கள்.

ஆனால் அரங்கநாதனோ குரைக்காத நாயே திடீரென்று அந்த வைக்கோல் போரைப் பார்த்து அப்படி குரைக்கிறது என்றால் அதிலே ஏதோ மர்மம் இருக்கிறது என்று இரவே முடிவு செய்து விட்டார்.

காலையில் வைக்கோல்போரை ஆராய்ந்து, அதன் உச்சியிலிருந்த வித்தியாசத்தைப் பார்த்து அங்கே வைக்கோல்களை கலைத்து அந்த பஞ்சலோக சாமி சிலையைக் கண்டுப்பிடித்து எடுத்து அதை யாருக்கும் தெரியாமல் வேறு இடத்தில் மறைத்து வைத்து விட்டார். சும்மாவா போலீஸ் மூளையாயிற்றே!

இது பற்றி முழுவிபரத்தையும் போலீஸின் மேலிடத்தில் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி, மறுநாள் இரவு வந்து பதுங்கியிருந்தால், அந்த சிலைத் திருடர்கள் சிலையை எடுக்க இங்கே வரும்போது பிடித்து விடலாம் என்று திட்டமும் தயாரித்துக் கொடுத்து விட்டார்.

அதனால் முதல்நாள் இரவைப் போல இன்றும் குரைக்காமலிருக்க கறுப்பனுக்கு மயக்க மருந்து ஸ்பிரேயும் அடித்து விட்டார்!’

இதுவரை மயக்கத்திலிருந்த அந்த தெருநாய் கருப்பன் மயக்கம் தெளிந்து எழுந்தது. ஆங்காங்கே வெளிச்சமும் சத்தமுமாக, ஒரே கூட்டமாக இருப்பதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தது. இந்த சிலைத்திருடர்கள் சிக்க, தான்தான் முக்கிய காரணமென்று அதற்கு தெரியாது. ஆனால் மற்றவர்களுக்குத் தெரியுமே!

அப்போது தகவல் தெரிந்து தங்கள் தங்கள் வாகனங்களில் பத்திரிகை, டிவி நிருபர்கள் வந்து சேர்ந்தனர்.

கறுப்பன் சுற்றும் முற்றும் பார்த்தபடி, அந்தக் கூட்டத்தில் தனக்கு நன்கு தெரிந்த அரங்கநாதம் பக்கத்தில் போய் விழித்தபடி நின்றது. அடுத்த நிமிடமே அந்த இடத்தில் புகைப்பட, வீடீயோக்களின் வெளிச்சம் பாய்ந்தது. இந்த சிலைத் திருடர்கள் சிக்கிய விதத்தையும் அதற்கு இந்தக் கறுப்பன் நாய் எப்படி முக்கிய காரணமாக இருந்தது என்பதை பற்றி அரங்கநாயகம் எல்லோருக்கும் விளக்கிக் கொண்டிருந்தார்!

மீடியா வெளிச்சம் பாய்ந்ததும் கறுப்பன் நாய்க்கு ஒரே கூச்சம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *