சிறுகதை

பார் | ராஜா செல்லமுத்து

மதியம் 12 மணிக்கு கடை திறப்பதற்கு முன்னால் 11 மணியிலிருந்து டாஸ்மாக் கடையை சுற்றியே கிடந்தது ஒரு கூட்டம்.

கோயில் திறப்பை கூட அவ்வளவு எதிர்பார்ப்போடு காத்திராத மனிதர்கள் டாஸ்மாக் கடையின் திறப்பை ரொம்பவே எதிர்பார்த்து நின்றிருந்தனர்

அங்கே இருந்தவர்களில் சிலர் நண்பர்கள், சிலர் வேற்று மனிதர்கள். ரத்தினம் மட்டும் எப்போதும் கடைவாசலில் நின்றிருப்பான். கடை திறந்ததும் ஓடிப் போய் முதலில் சரக்கு வாங்குபவன் ரத்தினம் தான்.

அவன் சரக்கு வாங்குவது மட்டும்தான். அங்கு இருக்கும் நண்பர்களுக்கு தெரியும்.

ஆனால் அந்தச் சரக்க எங்கே கொண்டு போய் அடிக்கிறான்? என்பது யாருக்கும் தெரியாது. சரக்கு வாங்கிக்கொண்டு டாஸ்மாக் கடையில் இருக்கும் பாரில் அமர்ந்து குடிப்பார்கள் . அந்த சமயத்தில் ரத்தினம் மட்டும் எஸ்கேப் ஆகி விடுவான். ரொம்ப நாளாக நோட்டம் விட்டுக்கொண்டிருந்த நண்பர்கள் இன்று எப்படியாவது கண்டு பிடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள்.

அன்று 12 மணி ஆனதும் முதல் ஆளாக பாட்டிலை வாங்கிய ரத்தினம் குடுகுடுவென ஓடினான். அவன் பின்னாலேயே நின்று கொண்டிருந்த வெற்றி ரத்தினம் எங்கே செல்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

ரத்தினம் வா இங்கே தான் பார் இருக்கே! நீ எங்க போற? இங்கே வா குடிக்கலாம் என்று வெற்றி கூப்பிட்டான்.

இல்ல நா வீட்ல போய் குடிக்கிறேன் என்றான் இரத்தினம்.

வாப்பா, மொத்தமா நண்பர்களோட சேர்ந்து குடிக்கிறதில ஒரு சுகம் இருக்கு. வா ரத்தினம் என்று வெற்றி கூப்பிட , ரத்தினம் வர மறுத்தான்.

இந்த விஷயத்தை வெற்றி தன் நண்பர்களிடம் சொல்ல

ரத்தினம் எங்கே போகிறான்? என்று அவன் பின்னாலேயே பின்தொடர்ந்தனர் .இடுப்பில் சொருகிய பாட்டிலை பத்திரமாக அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான் ரத்தினம்.

அவன் வீட்டுக்குப் போவது போல போய், ஒரு யூ டர்ன் போட்டு விடுவிடுவென வேறு ஒரு இடத்திற்கு நடந்தான் .

நண்பர்களுக்கு ஆச்சரியம் அதிகரித்தது.

இந்த ரத்தினம் எங்கே போறான்? நம்மகிட்ட வீட்டுக்கு போறேன் தானே சொன்னான்.? வேறு எங்கேயோ போறானே? என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

முன்னால் சென்று கொண்டிருந்தான் ரத்தினம்.

நண்பர்கள் அவன் கவனிக்காத வாறு அவன் பின்னாலேயே சென்று கொண்டிருந்தார்கள். ஒருவழியாக ரத்தினம் போய் சேரும் இடம் வந்து சேர்ந்தது.

சுற்று முற்றும் திரும்பி பார்த்தான். யாரும் இல்லை என நினைத்துக் கொண்டு,

“பொதுக் கழிப்பிடம்” என்று எழுதிய அந்த கழிப்பிடத்திற்கு நுழைந்தான் .

இங்கே எங்க போறான்? மது பாட்டில் வாங்கிகிட்டு என்று சந்தேகித்த நண்பர்கள். அவன் பின்னாலேயே போனார்கள் அந்த பொதுக் கழிப்பறைக்குள் நுழைந்த ரத்தினம் கதவை சாத்திக்கொண்டு இடுப்பில் சொருகி இருந்த பாட்டிலை எடுத்தான். கடகடவென குடிக்கும் சத்தம் வெளியே இருக்கும் நண்பர்களுக்கு கேட்டது.

அடச்சீ என்னடா கொடுமை இது? அவனவன் ஏசி பார்ல, எதை எதையோ தொட்டு சாப்பிட்டுட்டு இருக்கான். இந்த கருமம் புடிச்ச பய இங்க வந்து சாப்பிடுகிறான் பாரு என்று ரத்தினத்தை சந்தேகித்தார்கள்.

முழு பாட்டிலையும் குடித்து முடித்த ரத்தினம் வெளியே வந்தான். இவருக்காகவே தயாராக நின்றிருந்த நண்பர்கள் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.

என்னடா… ஏன் இங்கே வந்து குடிக்கிற? எல்லாரும் வேற எங்கேயோ குடிக்கிறாங்க. நீ என்னடான்னா இந்த பாத்ரூம்ல வந்து குடிக்கிறியே என்ன விசேஷம் என்று நண்பர்கள் கேட்க

திருதிருவென விழித்தான் ரத்தினம்.

என்ன தப்பா நினைச்சுக்காதீங்க டா. அது என்னமோ தெரியல பாத்ரூம்ல வச்சு சரக்கு அடிச்சா தான், எனக்கு கிக்கு வருது. அதனாலதான் எப்போவுமே நான் சரக்கு வாங்கினா வீட்ல வந்து குடிக்கிறேன் என்று பொய் சொல்லிட்டு, தினமும் இந்த கக்கூஸில் தான் வந்து குடிப்பேன். எனக்கு என்னமோ தெரியல இங்க குடிச்சா தான் நல்லா இருக்கு என்று சொன்ன போது…..

கூடியிருந்த நண்பர்கள் குடிக்காமலேயே வாந்தி எடுத்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *