சிறுகதை

நாய்ச் சண்டை | ராஜா செல்லமுத்து

எவ்வளவோ பொறுத்துப் பார்த்த ,பக்கத்து வீட்டு அகிலா அம்மா எதிர் வீட்டு சரசு வீட்டில் இன்று சண்டை போட்டு விட்டார்.

எவ்வளவு நாளைக்குங்க இந்த இம்சை பொறுத்துக்டடு வாழ்றது.உங்களுக்கு நாய் வளக்கணும்னா எங்கேயாவது போய் வளங்க. வெளியே போக முடியல…, வர முடியல… ஓடி ஓடி கடிக்க வருது. அதுமட்டுமில்லாம ராத்திரியெல்லாம் குழைச்சு எங்களத் தூங்க விட மாட்டேங்குது. என்ன நினைக்கிறீங்க? நீங்க மத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாம வாழ்றதுதான். உண்மையான வாழ்க்கை. நீங்க இந்த தெருவில் இருக்கிற அத்தனை பேருக்கும் பெரிய பெரிய இம்சை கொடுத்துவிட்டு இருக்கீங்க என்று சரஸ்வதி வீட்டில் தைரியமாக சண்டை போட்டார் அகிலா.

அகிலா பேசுவதற்கு துணையாக பக்கத்து வீட்டுக்காரர்களும் சேர்ந்து கொண்டார்கள் . அதுவரையில் வாய் திறக்காதவர்கள் அகிலா அம்மா ஆரம்பித்து வைக்கவும் எல்லோரும் அடுத்து அடுத்து சேர்ந்து கொண்டார்கள்.

ஆமாங்க நாங்களும் பார்த்துட்டு தான் இருக்கம். எவ்வளவு நாளைக்குத்தான் இந்த நாய் தொந்தரவு தாங்குறது. ராத்திரியில தூங்க விடாம கொலச்சிட்டு இருக்கு. நோய்வாய்ப்பட்ட ஆளுக, படிக்கிற பிள்ளைங்க. அப்படின்னு எதுவுமே செய்ய முடியல. அதுவும் ஒரு மாதிரியா கெட்ட சகுனம் மாதிரி ஊளையிடுவது. இது எப்படி அவங்கிட்ட சொல்றதுன்னு நினைச்சுட்டு இருந்தோம் . நீங்களே கேட்டுச் சொல்லுங்க. இதுக்கு ஒரு வழி பண்ணாம விடக்கூடாது என்று மொத்த வீட்டுக்காரர்களும் சேர்ந்து சரசுவிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். தன்னைத்தான் புகார் செய்கிறார்கள், தான் இந்த வீட்டில் இருந்து கொண்டு மற்றவர்களுக்கு இம்சை செய்து கொண்டு இருக்கிறது இந்த நாய் என்று அவர்கள் புகார் செய்து கொண்டிருப்பது தன்னைத் தான் என்பது தெரியாமல் தன் வீட்டு எஜமானியை ஏதோ திட்டுகிறார்கள் என்று முன்னைவிட மிகவும் உக்கிரமாக குரைக்க ஆரம்பித்தது அந்த நாய்.

இல்லங்க நான் வந்து கொஞ்சம் வீட்டுக்குள்ளே வச்சு வளக்கிேறேன்.தயவுசெஞ்சு போங்க என்று சொன்னாள் சரசு.

வீட்டுக்குள்ள வச்சாலும் குலைக்கிற சப்தம் வெளியே வருமே? இதுக்கு ஒரு முடிவு சொல்லுங்க. இல்ல நாங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியிருக்கும் என்று அந்தத் தெரு முழுக்க சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த நாய் குரைத்துக் கொண்டே இருந்தது.

டாமி சும்மாயிரு, டாமி சும்மா இரு என்று சரசு நாயை திட்டிக் கொண்டிருந்தாள்.

ஆனால் அந்த நாய், தன் எஜமானர என்ன செய்கிறார்களோ என்று மறுபடியும் மறுபடியும் அவர்களை பார்த்து குரைத்துக் கொண்டே இருந்தது.

அந்தத் தெருவில் வாழும் அத்தனை பேர்களும் டாமியை குறை சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அதனுடைய வலி, அதனுடைய உக்கிரம்? அது எதற்காக அழுகிறது ? என்பது சரசுக்கும் தெரியாது. அந்த தெருவில் இருப்பவர்களுக்கும் தெரியாது. ஏதோ ஒன்றைக் கேட்டு தினமும் குரைத்துக் கொண்டிருக்கிறது என்பதை அறியாதவர்கள் டாமி பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள்

இல்லங்க, நான் இந்த நாயே புள்ள மாதிரி வக்கிறேன். ஒன்றும் செய்யாது என்று சரசு சொன்னாள்.

நீங்க புள்ள மாதிரி வளங்க. இல்ல புருஷன் மாதிரியும் வளங்க. அதைப் பத்தி,எங்களுக்கு கவலை இல்ல. அந்த நாய் தெரு வழியாக வரும்போது, எல்லாரையும் கடிக்கப் போகுது. நைட் எல்லாம் எங்கள தொந்தரவு செய்யுது.அது மட்டும் இல்லாம, இருந்தா உங்களுடைய நாய தாராளமாக நீங்க வளரக்கலாம். அது உங்களுடைய சந்தோசம் . மத்தவங்கள தொந்தரவு பண்ணுறது ஏன்? நீங்க நினைக்க மாட்டேங்கிறீங்க என்று அந்தத் தெருவில் இருந்த மொத்த நபர்களும் புகார் செய்தபோது, அவர்களைப் பார்த்து குரைத்துக் கொண்டு இருந்த டாமி ஏதோ தன்னை காட்டிக் காட்டி சொல்கிறார்கள் என்பதை ஓரளவுக்கு உணர்ந்து கொண்டது

மேலே ஏறி மாடியிலிருந்து கீழே பார்த்தது. மொத்த நபர்களும் டாமியை பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏதோ முறையில் உணர்ந்த டாமி மேலே இருந்து தனனை குறை சொல்லிக் கொண்டு இருப்பவர்களை உற்றுக் கவனித்ததில் குற்றம் எஜமானர் மீது இல்லை, நாம் தான் குற்றம் செய்து இருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டது. அதன் பிறகு குரைக்காமல் மனிதர்களை – சண்டை போடும் மனிதர்களை பார்த்துக் கொண்டே இருந்தது.

அப்போது தான், அதற்கு தெரிந்தது, நாம் தான் ஏதோ தவறு செய்திருக்கிறோம் என்று? அதிலிருந்து அது வாய் திறப்பதே இல்லை.

அன்றைய சண்டை ஒரு முடிவுக்கு வந்தது. சரசு நாையை வெகுதூரத்தில் கொண்டு போய் விட முடிவு செய்தாள். இதை புரிந்துகொண்ட டாமி அன்றிலிருந்து வாய் திறப்பதேயில்லை. கூப்பிடும் போதும் வாய் திறக்காமல் வந்து முன்னாடி நின்றது.

சண்டை போட்ட மனிதர்கள் நாய் பற்றிய அத்தனை புகாரையும் தெரிவித்து விட்டு சென்று விட்டார்கள்.

அன்றிலிருந்து அவர்களும் எந்தப் புகாரையும் டாமி மீது செல்வதில்லை.

என்ன நினைத்ததோ தெரியவில்லை, அந்த டாமி அதிலிருந்து வாய் திறப்பதே இல்லை.

நாய்க்கு நன்றி மட்டுமல்ல. அறிவும் இருக்கிறது என்பதை அந்த தெருவில் உள்ளவர்கள் அறிந்து கொண்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *