செய்திகள்

நாய்கள் வளர்க்க உரிமம் பெறுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: சென்னை மாநகராட்சி கமிஷனர் பேட்டி

Makkal Kural Official

சென்னை, மே 9–

நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம். அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம் என சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை கடந்த 5ம் தேதி 2 நாய்கள் கடித்து குதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பலத்த காயமடைந்த அச்சிறுமி ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல பரங்கிமலை காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவரை நாய் கடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கமிஷனர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

“நாய்கள் வளர்க்க உரிமம் பெறுவது கட்டாயம். ஆனால் அது குறித்த விழிப்புணர்வு தற்போது மக்களிடம் கிடையாது. அதனால் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம். செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் அமைக்கப்படும்.

அனைத்து தரப்பினரும் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும். விலங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியாது. மதுரைக்கு அப்புறப்படுத்தப்பட்ட ராட்வீலர் நாய்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தை உரிய சட்டப்பிரிவுகள் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாய் கடிக்கு ஆளான சிறுமிகள் இன்று பகல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுமியின் உடல்நிலை குறித்து பல தவறான தகவல் பரப்பப்படுகிறது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கான செலவு குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பிளாஸ்டிக் அறுவை சிகிச்கைக்கு ரூ.5 லட்சம் வரை செலவாகும்.

நாய் கடிக்கு ஆளான குழந்தையைப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. நாய் கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை நாய் வளர்ப்பவர்கள் புரிந்து செயல்பட வேண்டும். மதுரைக்கு அப்புறப்படுத்தப்பட்ட ராட்வீலர் நாய்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.

முன்னதாக, செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது கழுத்துப் பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். அச்சமூட்டும் தன்மை கொண்ட நாயாக இருந்தால் வாய் கவசம் கட்டாயம். வாய் கவசம் இல்லாமல் வெளியே கொண்டு செல்லக்கூடாது. இத்தகைய நாய்களின் உரிமையாளர்கள் பற்றி பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்திருந்தார்.

மேலும் பேட்டியின் போது அண்ணா பல்கலைக்கழகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி செயலிழந்தாக கூறுவதில் உண்மையில்லை. வழித்தடத்தில் உள்ள சிசிடிவி மட்டும் பழுதானது அதுவும் உடனடியாக சரிச் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

––––––

ராசிபுரம் அருகே வெறி நாய் கடித்ததில்

3 குழந்தைகள் படுகாயம்

––––––––––––––––––––––––

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வடுகம் பகுதியில் இன்று காலையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று 3 குழந்தைகளை கடித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் குழந்தைகளை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய் கடித்ததில், முகத்தில் படுகாயம் அடைந்த சிறுவனுக்கு தையல் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நாய்க்கடி சம்பவங்கள் தொடரும் நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் ராசிபுரம் பகுதியில் உள்ள தெருநாய்களை பிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *