செய்திகள்

நாமக்கல், திருச்சியில் எடப்பாடி பழனிசாமி 3 நாள் தேர்தல் பிரச்சாரம்

சென்னை, டிச.27–

நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29–ந்தேதி முதல் 3 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19-ந்தேதி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

இந்த நிலையில் 2வது கட்டமாக நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

நாமக்கல்லில் இருந்து 29–ந்தேதி (செவ்வாய்கிழமை) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை துவக்குகிறார். அன்று காலை 8.30 மணி அளவில் நாமக்கல் அனுமார் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

ராசிபுரம் அருந்ததியர் காலனியில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து முதல்வர் வாக்கு சேகரிக்கிறார். அதனையடுத்து திருச்செங்கோடு டவுன் பஸ் நிறுத்தம் பகுதியிலும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

பிற்பகலில் குமாரபாளையத்தில் மாவட்ட நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு, பாசறைகள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். பரமத்திவேலூரில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் பேசுகிறார். மாலை 6.30 மணிக்கு நாமக்கல்லில் நடைபெறும் பேரணியில் பங்கேற்கிறார். அங்கு பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

30–ந்தேதி

30-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு சேந்தமங்கலத்தில் பழங்குடியினர் மற்றும் மலையாள கவுண்டர் சமூக தலைவர்களை சந்திக்கும் அவர், தொடர்ந்து திருச்சி மாவட்டம் துறையூரில் விவசாய தொழிலாளர்கள், முசிறியில் வெற்றிலை, பாக்கு மற்றும் வாழை விவசாயிகளை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். தொட்டியத்தில் வாழை பயிர்களை பார்வையிட்டு, அதை பயிரிடும் விவசாயிகளின் வீடுகளுக்கு அவர் செல்கிறார். தொடர்ந்து மணச்சநல்லூரில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் ஆலை பணியாளர்கள் சங்க நிர்வாகிகளையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

மறுநாள் 31-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு முதலமைச்சர் சென்று சாமி தரிசனம் செய்கிறார். மதியம் 1.30 மணிக்கு மணப்பாறை செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் வீதி வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.

மாலை 6.30 மணிக்கு திருச்சியில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார். மறுநாள் அவர் சென்னை திரும்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *