பாஜகவுக்கு பப்பு யாதவ் எம்பி பதிலடி
சென்னை, ஜூன் 26–
நான் 4 முறை சுயேட்சையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன், கட்சி ஆதரவுடன் வென்ற நீங்கள் எனக்கு பாடம் நடத்தாதீர்கள் என்று பீகார் சுயேட்சை எம்பி பப்பு யாதவ் நாடாளுமன்றத்தில் பதிலடி தந்துள்ளார்.
கடந்த மே மாதம் நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக நாடு முழுவதிலிருந்தும் புகார்கள் குவியத் தொடங்கின. அதிலும், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்த புகார்களில் உண்மை இருக்கிறது என்பது தெரியவந்தது. அதனால், நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டம் சூடுபிடித்திருக்கிறது.
அதனால், அண்மையில் நடந்த தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், பதவியேற்கும் நிகழ்வு நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அப்போது, பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு உறுப்பினரும், பல்வேறு பிரச்னைகளை அடையாளப்படுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பப்பு யாதவ் பதிலடி
அந்த வரிசையில் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற, எம்.பி பப்பு யாதவ் பதவிப்பிரமாணம் மேற்கொள்ளும்போது, தனது சட்டைக்குள் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் #RENEET என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. மேலும், பதவி பிரமாணத்தின்போது ‘பீகார் ஜிந்தாபாத்’ என்று தனது உறுதிமொழியை ஆரம்பித்து, நீட்-யுஜி மறுதேர்வு நடத்தவேண்டும் மற்றும் பீகாருக்கு சிறப்புப் பிரிவு அந்தஸ்து கோரிக்கை முழக்கங்களுடன் முடித்தார்.
அவரது முழக்கங்களுக்கு பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “நான் என்ன சொல்ல வேண்டும்’ என்ற உங்களின் பாடம் தேவையில்லை. நீங்கள் ஒரு கட்சியின் ஆசிர்வாதத்தால் வெற்றி பெற்றீர்கள். நான் தனித்து 4 முறை சுயேட்சையாக வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு நீங்கள் பாடம் நடத்த வேண்டாம் எனக் காட்டமாகத் தெரிவித்தார்.