வேதாசலம் ஒரு பிரபலமான கோவில் அர்ச்சகர். அவரது மனைவி சகுந்தலாவும் நல்ல குணவதி. வீட்டிலும் நல்ல வருமானம் வருவதால் செல்வச்செழிப்பு தான்.அவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தன. கமலினி, மாலினி, நளினி என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனாலும் தனக்கு கொள்ளி வைக்க ஒரு மகன் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் வேதாசலம் .
4 வதாக தனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று கனவு கண்டு வந்த சகுந்தலாவும் கருத்தரித்திருந்தாள்.
கருத்தரித்திருந்தது முதல் சகுந்தலா மிகவும் பயப்பட்டாள். அடுத்து பெண் பிறந்து விட்டால் என்ன செய்வது என்று கவலை பட்டாள். டாக்டரிடம் போக வேதாசலம் அனுமதிக்கவில்லை. அதனால் தனக்குத் தெரிந்த நாட்டு மருந்துகளைச் சாப்பிட்டாள். தினமும் 200 ஸ்கிப்பிங்கும் போட்டாள். எதற்கும் அந்த கரு மசியாமல் 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தையாகப் பிறந்தது.
பையன் பிறந்தால் அவனுக்கு நவநீதன் என்று பெயரிட நினைத்திருந்தார் வேதாசலம். பெண் என்றவுடன் நவநீதா என்று பெயிட்டார்.
அந்தக் குழந்தை மிகவும் அவலட்சணத்தின் மொத்த உருவமாக பிறந்திருந்தது. நசுங்கின செம்பு போல் தலை, இரட்டை மண்டை, பிதுங்கிய கண்கள், மேல் பற்கள் வெளியே நீட்டிக் துருத்திக் கொண்டிருந்தது. நல்ல இருட்டுக் கருப்பாக இருந்தாள். கை, கால்கள் அறிவு நன்றாகவே இருந்தது நவநீதாவுக்கு. அவளைப் பக்கத்திலிருந்த ஒரு அரசாங்கப் பள்ளியில் சேர்த்து விட்டிருந்தனர்.
எந்த ஆசிரியர்களும் உடன் படித்த மாணவியர்கள் யாரும் அவளை மதிப்பதே இல்லை. அவளை அழைப்பது, ஏய் பல்லி, ‘ஏய் குள்ளி’, கருவாய் கட்டை என்று தான் அழைப்பார்கள். இப்படி அழைப்பது அவளுக்கு வெறுப்பை அளித்தது. யாராவது அவளை பல்லி, குள்ளி என்று சொன்னால் கல்லைத் தூக்கி எரிவாள். மிகவும் கடுகடுப்பாகி விடுவாள். அம்மாவிடம் போய் சண்டை போடுவாள். எதற்கு என்னை இப்படி பெத்தாய் என்று கூட கேட்பாள். இதற்குத்தான் பெற்றேன் என்று மகள் நவநீதா முதுகில் பெரிய கம்பால் நாலு சாத்து சாத்தினாள் சகுந்தலா.
அப்பா வேதாசலம் அவளை ஒரு குழந்தையாக மதிப்பதே இல்லை. வேலை மட்டும் வாங்கி விடுவார்.
சகுந்தலாவும் 3 பெண்களுக்கும் திருமணம் செய்து சீர் செய்யவே தேவைகள் அதிகம் இருந்தது. கையிருப்பு அனைத்து செலவாகியிருந்தது.
வேதாசலமும் ஓய்வு பெற்று விட்டார்.
3வது அக்கா மாலினி மட்டும் சற்று இதமாக நவநீதாவிடம் பேசுவாள். நன்றாக படித்துக் கொண்டிருந்ததால் 12ம் வகுப்பு வரை படித்து விட்டாள். மாலினியின் கணவர் சிவக்குமார் அவளிடம் பாசம் அதிகம் காட்டினார்.
ஆஸ்பத்திரியில் மாலினியை பிரசவத்திற்கு சேர்த்திருந்தார்கள். வீட்டிலிருந்து அத்தான் சிவக்குமார் இரவில் அவள் மேல் கை வைத்தான். அது நாள் வரை ஆண் ஸ்பரிசம் அவள் மேல் படாததால் அவள் அதை விரும்பினாள். அவள் அதை விரும்பியதால் மேலும் அவளை மிகவும் தொந்தரவு செய்தான்.
மாலினி ஒரு நாள் தன் குழந்தையிடம் உன் சித்தி வந்திருப்பதை பார்த்தாயா என்றாள். அது நவநீதாவின் மனதை குளிர வைத்தது. பாசம் என்றால் என்னவென்று உணர்ந்தாள். அன்று வழக்கம் போல சிவக்குமார் சீண்டியதும் அவன் கையை விருட்டென்று தட்டியதும் கன்னத்திலும் பளார் என்று ஒரு அறை விட்டாள் நவநீதா.
அதன் பிறகு சிவக்குமார் மாலினியை கூட்டிக் கொண்டு ஊருக்குக் கிளம்பி வட்டான்.
ஒரு நாள் பள்ளி அதிகாரி ஒருவர் இன்ஸ்பெக்சனுக்கு வந்தார்.
நவநீதாவின் வகுப்புக்கு வந்தவர் அனைவரையும் ‘மழை நாள்’’ பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். ஒவ்வொருவரும் ஒரு மாதிரியாக எழுதினார்கள். நவநீதா ஒரு கவிதை எழுதினாள். அந்த அதிகாரி கவிதையைப் படித்துவிட்டு நவநீதாவின் கன்னத்தை தட்டிக் கொடுத்தார். கவிதையை தான் மிகவும் ரசித்ததாக அவளைப் பாராட்டினார். அவர் சேரை விட்டு எழுந்து வீல் சேரில் ஏறும்போது தான் நவநீதா கவனித்தாள்: அவரின் இரண்டு கால்களும் சூம்பியிருந்தது.
அவரின் படிப்புத் திறத்தால் முன்னேறியதையும் அவள் உணர்ந்தாள்.
நவநீதாவுக்கு ஒரு உண்மை புலப்பட்டது: ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை ஒளிந்திருக்கும் ; நம்மிடம் இருக்கும் கோபத்தை விட்டுவிட்டு அனைவருடனும் அன்புடன் பழகினால் நம் திறமையையும் உள்ளொளியையும் பெருக்கி முன்னேறலாம் என்பதே அது. அவள் தன் கோபத்தை குறைத்து விட்டாள். மற்றவர்களிடம் அன்பு காட்ட முயற்சித்து அன்பை வெளிபடுத்தி அன்பைத் திரும்பப் பெறுவதையும் கற்றுக் கொண்டாள்.
வீட்டிற்கு வந்ததும் அம்மாவுக்கு உதவியாக வேலை செய்தாள்.
நல்லறிவும் நற்பண்பும் உள்ள பெண் எனப் பேர் எடுத்தாள்.
நாட்கள் நகர்ந்தன.
12 ம் வகுப்பு இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாள். அதே ஊரில் உள்ள ஒரு காலேஜில் இடம் கிடைத்தது. அங்கேயும் அவளை கேலி தான் செய்தார்கள். இப்போதெல்லாம் அவள் யாரையும் லட்சியம் செய்வதே இல்லை.
ஒரு தடவை அந்த ஊருக்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்திருந்தது. அவர்களுக்கு ஒரு கோமாளி தேவைப்பட்டது. தனக்கு அதற்கு தகுதி உள்ளது என்று நினைத்து அவர்களிடம் வேலை கேட்டாள். அவர்களும் சம்மதித்து விட்டனர். அந்த வேலை எவ்வளவு கடினமானது என்றும் புரிந்து கொண்டாள். எல்லா நிகழ்ச்சிகள் செய்வதற்கும் அவளையும் பழக்கினார்கள். அனைத்தையும் கற்றுக் கொண்டாள். மேலே டிரபீலால் செய்தாலும் தடாலென விழ வேண்டும். உடம்பெல்லாம் வலிக்கும். ஆனால் அவள் சிரிக்க வேண்டும். வெளியேயும் அவளை அடிப்பார்கள் அழுவது போலும் சிரிப்பது போலவும் நடிக்க வேண்டும். அவர்களின் அவல நிலைமை புரிபட்டது. தன் படிப்பை மட்டும் விடாமல் படித்தாள். அவர்களின் கூலிப்பணம் வீட்டிற்கு மிகவும் உதவியாக இருந்தது.
திடீரென ஒரு சினிமாவில் நடிக்க சந்தர்ப்பம் வந்தது. அதையும் பயன்படுத்திக் கொண்டாள். அடிக்கடி பல படங்களில் நடிக்கக் கூப்பிட்டார்கள். எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொண்டாள். வீட்டின் நிதி நிலைமை முன்னேறியது. எனினும் அப்பா வேதாசலம் மட்டும் அவளிடம் அன்பு செலுத்தவே இல்லை.
ஒரு தடவை அம்மாவை கூட்டிப்போய் எல்லா உரல், குக்கர், மிக்சி அனைத்தையும் மாற்றினாள். ஒரு நாள் அம்மாவின் பீரோவை ஒதுக்கினாள். அந்த நைந்துபோன பழைய சேலைகளை குப்பையில் போட்டாள். ஒரு அடமானம் வைக்கப்பட்டிருந்த அவளின் சிவப்புகல் நெக்லஸ் சீட்டையும் எடுத்து வைத்துக் கொண்டாள். அந்த சீட்டிற்கும் கொஞ்சம் முதலில் பணம் கட்டினாள்.
பெரிய பட்டுச்சேலை கடைக்குஅம்மாவை ஆட்டோவில் அழைத்துச் சென்று நிறுத்தினாள். உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றாள் நவநீதா. சகுந்தலா இது குழந்தையின் ஆண்டு நிறைவுக்கு மாலினிக்கு எடுக்கலாம் என்றாள். உங்களுக்கு பிடித்ததை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றாள்.
மாலினிக்கு வேண்டியதை அவர்கள் வீட்டில் வாங்கிக் கொடுப்பார்கள் என்றாள். வரும் வழியில் ஒரு பெரிய ஓட்டலுக்கு அழைத்துச் சென்றாள் அம்மாவுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தந்தாள். சகுந்தலா இதெல்லாம் சாப்பிட்டு பல நாட்கள் ஆனதால் அவளும் பிரமித்து நின்றாள்.
அதுபோல் அப்பா வேதாசலத்தையும் அழைத்துச் சென்று அவர் வேண்டிய அனைத்தையும் வாங்கித் தந்தாள். ஒரு புன்முறுவல் மட்டுமே அவரிடமிருந்து வந்தது.
தாயிடம் அவளின் சிவப்புக்கல் அட்டிகையையும் திருப்பி வாங்கிக் கொடுத்தாள்.
நான் நானாகவே வாழ்வேன் என்று முடிவெடுத்தாள் நவநீதா. தன் குறைகளையே தனக்கு முதலீடாகவே மாற்றிக் கொண்டாள். திருமணம் என்பதையே நினைக்கவில்லை. தன் அவமானங்கள் தன்னுடனேயே போகட்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
வயது முதிர்வின் காரணமாக தந்தை வேதாசலம் மரணமடைந்தார். தன் கொள்ளிக்காக ஆண் பிள்ளையை நினைத்து தன்னைப் பெற்ற நவநீதா ஒரு வேட்டியையும் துண்டையும் அணிந்துகொண்டு புரோகிதர் சொன்ன எல்லா காரியங்களையும் நவநீதன் என்ற மகன் செய்வது போலவே செய்தாள்.
சுடுகாட்டில் மட்டும் தன் ஆண் உடைகளை கலைந்து விட்டு பெண் உடையிலேயே கொள்ளி வைத்தாள் நவநீதா ஐ.ஏ.எஸ்.