செயல் தலைவராக அன்புமணி நியமனம்
விழுப்புரம், ஏப். 10–
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தானே செயல்படப் போவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும், கட்சியின் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் பேசியதாவது:–
பா.ம.க. நிறுவனரான நான் கட்சியின் தலைவர் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். நான் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி பெறும் ஆசையும் எனக்கு இல்லை.
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழி நடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவெடுப்போம்.
தேர்தலுக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில், கட்சியின் தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாசை கட்சியின் செயல் தலைவராக நியமிக்கிறேன். நிர்வாகக் குழு, செயற்குழு, மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களை கூட்டி அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும். தலைவர் பதவியை நானே எடுத்துக் கொண்டதற்கு பல காரணங்கள் உண்டு. அதனை உங்களுடன் தற்போது பகிர முடியாது என்றார்.
பா.ம.க.வின் இளைஞரணித் தலைவராக பேரன் முகுந்தனை டாக்டர் ராமதாஸ் நியமித்ததை, அக்கட்சியின் சிறப்பு பொதுக் குழுவிலேயே கட்சித் தலைவரான அன்புமணி ராமதாஸ் மிக கடுமையாக எதிர்த்தார். அத்துடன், பாமகவினர் தம்மை சந்தித்து ஆலோசனை நடத்த பனையூரில் தனி அலுவலகமும் திறந்தார் அன்புமணி ராமதாஸ். இதனைத் தொடர்ந்து தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இதனால் அப்பாவும் மகனும் சமாதானமாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தான் இன்று கட்சித்தலைவராக தானே செயல்படபோவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இது அப்பா–மகன் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருப்பதை காட்டியிருக்கிறது.