நல்வாழ்வுச் சிந்தனைகள்
நமது அறியாமையால் பயனற்று அழிவுக்கு ஆட்பட்டுக்கொண்டிருக்கும் பல்வேறு அற்புதத் தாவரங்களுள் சிவனார் வேம்பும் ஒன்று. “செவ்விய மேனி (தண்டு)… ஊதா நிறம் பூசிய சிவந்த இதழ்கள் (மலர்கள்)… பசுமையான சிறுசிறு கரங்கள் (இலைகள்)…” எனத் தகதகப்போடு ஒளிவீசும் மூலிகை ‘சிவனார் வேம்பு!’ ‘சிவனான வேம்புதனைச் செப்பக்கேளு செந்தணலின் மேனியாஞ்…’ -சிவனார் வேம்பு தாவரத்துக்கான அடையாளத்தைச் சுட்டிக்காட்டும் பாடல் வரி இது.
பெயர்க்காரணம்: ‘காந்தாரி’, ‘அன்னெரிஞ்சான் பூண்டு’, ‘இறைவன வேம்பு’ ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறது. தாவரத்தைப் பறித்த அன்றே உலர்த்தாமல் எரித்தாலும் புகையைக் கக்கும் மூலிகை இது.
இதன் காரணமாக அன்னெரிஞ்சான் (அன்றே எரிந்தான்) பூண்டு எனும் வழக்குப் பெயர் உருவாகியிருக்கிறது. சிவன் என்றால் ‘நெருப்பு’ என்ற ஆன்மிகத் தத்துவார்த்த அடிப்படையில், எரியும் தன்மையுடையதால் ‘சிவனார்’ வேம்பு எனும் தத்துவப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். வெப்பத்தை உண்டாக்கும் மூலிகையும்கூட!
இதன் தண்டில் வெள்ளி தூவியதைப் போன்ற ரோம வளரிகள் காணப்படும். மிகச் சிறிய அளவிலான முட்டை வடிவ இலைகளோடு செம்மண், மணற்பாங்கான இடங்களில் சாதாரணமாக வளரும். பனை மரங்கள் வாழும் பகுதியில் அதிக அளவில் தென்படும்.
முழுத் தாவரத்தையும் காயவைத்துப் பொடித்து, சம அளவு கற்கண்டு சேர்த்து அரைத் தேக்கரண்டி அளவு பாலில் கலந்து பருக, நாட்பட்ட நோய்கள் நீங்கி ஆயுள் கூடும் என்கிறது சித்த மருத்துவக் குறிப்பு. இதன் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வாய்ப்புண், பல்வலி மறையும். பல்வலிக்கு இதன் வேரைப் பயன்படுத்தும் வழக்கம் பழங்குடியினரிடம் இன்றளவும் தொடர்கிறது.