புதுடெல்லி, ஜூலை24-–
நாட்டை வளர்ச்சியின் புதிய உயரத்துக்கு இட்டுச்செல்லும் பட்ஜெட் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பட்ஜெட்டுக்கு பாராட்டு தெரிவித்தார்.
அவர் பேசியதாவது:-
2024–-2025 பட்ஜெட், கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோரை வளமையான பாதைக்கு அழைத்துச் செல்லும். புதிய நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் தொடர் நடவடிக்கையாக இந்த பட்ஜெட்டை பார்க்கலாம். இளைஞர்களுக்கு எண்ணற்ற புதிய வாய்ப்புகளை அளிக்கும்.
நாட்டை வளர்ச்சியின் புதிய உயரத்துக்கு இட்டுச்செல்லும், இந்த முக்கியமான பட்ஜெட்டுக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினருக்கும் அதிகாரம் அளிக்கும் தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்டாக திகழ்கிறது. அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்துக்கு பாதை அமைக்கும்.
கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு புதிய உயரம் அளிக்கும். நடுத்தர வர்த்தகத்துக்கு புதிய பலம் அளிக்கும். பழங்குடியினர், தலித், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கும் வலிமையான திட்டங்களை கொண்டுள்ளது.
பெண்களுக்கு பொருளாதார பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது. மத்திய நிதி மந்திரிக்கும், அவரது குழுவுக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், சாைல போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோரும் பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.