விழுப்புரம், ஜூலை 5–
நாட்டு வெடிகுண்டு தயாரித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட நான்கு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம், பர்கத் நகர்,வாட்டர் டேங்க் அருகே உள்ள தோப்பில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர்களிடம் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள், சணல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருந்தது.
விசாரணையில், அவர்கள் சின்ன கோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர் நகர் ராயர் மகன் அப்பு (எ) ஜவகர் (26); அய்யனார் கோவில் மேட்டை சேர்ந்த பக்கீர் முகமது மகன் அகமது அசேன் (28); ரகமத் நகர், மீரான் மகன் முகமது ஷெரீப் (25); புதுச்சேரி சாமிப் பிள்ளை தோட்டத்தை சேர்ந்த ரவி மகன் குட்டி (எ) சரவணன் (30) என்பதும், அவர்கள் நான்கு பேரும், நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிகுண்டு வெடிக்கச் செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டதும் உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த வெடிமருந்து உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். ரவுடிகளான அப்பு, அசேன், ஷெரீப் ஆகியோர் மீது கொலை வழக்குகளும், சரவணன் மீது அடிதடி வழக்கு இருப்பதும் தெரியவந்தது.