சிறுகதை

நாட்டு மருந்துக் கடை – ராஜா செல்லமுத்து

முன்பெல்லாம் காற்று ஓடிக்கொண்டிருக்கும் நாட்டு மருந்துக் கடையில் இப்போதெல்லாம் கூட்டம் களை கட்டி நின்றது.

பிரண்டை, திப்பிலி, கடுக்காய் மருதாணி, சுக்கு ,மிளகு என்று நாட்டு மருந்துகளின் பெயர்களை சொல்லியபடியே கூடி நின்றார்கள் மக்கள்….

மக்கள் கேட்ட பொருள்களையெல்லாம் எடுத்து வரிசைப்படுத்தி கொடுத்துக்கொண்டே இருந்தார் கடையின் முதலாளி சிகாமணி. அவர் அந்த நாட்டு மருந்துக் கடையின் உரிமையாளர்.

கடந்த ஒரு வருடமாக அவரின் முகத்தில் சந்தோஷ ரேகைகள் சரசரவென்று ஓடிக்கொண்டிருந்தன .அதற்கு காரணம் .வியாபாரம் .ஒருவரையும் திட்டாமல் எந்தப் பொருளும் இல்லை என்று சொல்லாமல் மக்கள் கேட்கும் பொருள்களையெல்லாம் பொறுமையாக எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் சிகாமணி.

கூடவே அவரின் மனைவியும் இருந்தார்.

சிந்தாமணிக்கு ஒரு பக்கம் வியாபாரம் என்றாலும் மறுபக்கம் சந்தோஷம் தலை முட்டியது. காரணம் 2,3 வருடங்களுக்கு முன்பெல்லாம் நாட்டுமருந்து கடைப் பக்கமே தலை வைத்துப் பார்க்காத மக்கள் கடந்த இரண்டு வருடமாக நாட்டுமருந்துக் கடையே கதி என்று கிடப்பதுதான்.அது அவருக்கு ஆச்சரியத்தை தந்தது.

காலை முதல் மாலை வரை இடைவிடாது வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.

நோய் காலமென்பதால் எத்தனையோ தடைகளை கடைகளுக்கு போட்டாலும் , நாட்டு மருந்து கடைக்கு மட்டும் எந்த கடிவாளமும் போடாமல் இருந்தது அரசு.

அதனால் வாங்கி வைத்த பொருட்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விற்றுத் தீர்ந்ததில் சிகாமணிக்குச் சிறப்பு சந்தோசம்.

அன்று வியாபார முடித்து மதியவேளையில் அமர்ந்தார் சிகாமணி. காலையிலேயே வீட்டில் தயார் செய்த உணவை பரிமாறினாள் மனைவி.

அப்போதும் இரண்டுபேர் கடையில் நின்று கடுக்காய் கேட்டுக்கொண்டிருந்தார்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த சிகாமணி எழுந்ததும்.நீங்க உட்காருங்க நான் கொடுக்கிறேன் என்று மனைவி எழுந்து கடுக்காயை எடுத்துக் கொடுத்தாள்.

அப்போது சிகாமணி தனக்குத்தானே சிரித்துக் கொண்டார்.

ஏன் இப்படி சிரிக்கிறீங்க? என்று மனைவி கேட்க

இல்ல கொஞ்ச நாளைக்கு முன்னாடி எல்லாம் நம்ம கடைக்கு யாரும் வர மாட்டாங்க . நம்மள பார்க்கிறதே ஒரு மாதிரியாப் பாப்பாங்க.

ஆனா இன்னைக்கு பாரு சாப்பிட கூட நேரம் இல்லாம நாம சேவை பண்ணிட்டு இருக்கோம். இதை ஏன் நான் வியாபாரம்னு நான் சொல்லலன்னா. நாம விக்கிற ஒவ்வொரு நாட்டு மருந்துக்கும் லாபம் இல்லாமதான் வித்துக்கிட்டு இருக்கோம். தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் குணமாக நீங்க தான் காரணம்னு மக்கள் சொல்லும்போது சந்தோசமா இருக்கு. நம்முடைய நோக்கம் தெரிய இந்த மக்களுக்கு நூறு வருஷத்துக்கு மேல ஆச்சு. அவங்களுக்கு எல்லாம் பெரிய மருத்துவமனை தெரியுது . நாட்டு மருந்து கடை கிட்ட எல்லாம் வர மாட்டான்க. இன்னிக்கி நம்ம மருந்துக்கு அவ்வளவு மவுஸ். எது எப்படியோ மனுசங்க நல்லா இருந்தா போதும் என்று சிகாமணி சொல்லிக்கொண்டு இருக்கும்போது….

ஒருவர் ஆடுதொடா இலை வேண்டும் என்று கேட்டார்.

சிகாமணி எந்திரிக்க எத்தனிக்க மனைவியே மறுபடியும் பொருளை எடுத்துக் கொடுத்தார்.

இந்த நம்பிக்கை. நம்ம மருந்து மேலேயும் இந்த நாட்டு மேலயும் இருந்தா இங்க நோயே வராது. நம்ம நாட்டு மருந்துக்கு அவ்வளவு சக்தி இருக்கு என்று சொல்லிய சிகாமணி சாப்பிட்டு முடித்து விட்டு வியாபாரத்தில் மும்முறமாக கடையில் குவிந்த மக்கள் ஆளுக்கு ஒரு பெயரைச் சொல்லி நாட்டுமருந்து கேட்டுக்கொண்டிருந்தனர்.

சிகாமணி மருந்துகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *