மத்திய அரசு தகவல்
சென்னை, அக்.1-
2022–23ம் ஆண்டு அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலம் தமிழ்நாடு என்றும் நாட்டில் அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநில பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் தொழிற்துறை குறித்த 2022–23ம் ஆண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நாடு தழுவிய அளவில் ஒரு கோடியே 84 லட்சத்து 94 ஆயிரத்து 962 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் முன்னணியில் இருக்கும் முதல் 5 மாநிலங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில், 15 சதவீத பங்களிப்பினை வழங்கி தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
அதாவது 2022–23ம் ஆண்டு தமிழகம் 27 லட்சத்து 74 ஆயிரத்து 244 வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்துக்கு அடுத்தப்படியாக 12.84 சதவீத பங்களிப்பினை வழங்கி மராட்டியம் 2-வது இடத்திலும், 12.62 சதவீத பங்களிப்பினை கொடுத்து குஜராத் 3-வது இடத்திலும், 8.04 சதவீதத்துடன் உத்தரப்பிரதேசம் 4-வது இடத்திலும், 6.58 சதவீத பங்களிப்பினை தந்து கர்நாடகா 5-வது இடத்திலும் அங்கம் வகிக்கிறது.
இதேபோல நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலங்கள் பட்டியலில் 15.66 சதவீதம் பெற்று தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. 12.25 சதவீதத்துடன் குஜராத் 2-வது இடத்திலும், 10.44 சதவீதத்துடன் மராட்டியம் 3-வது இடத்திலும், 7.54 சதவீதத்துடன் உத்தரப்பிரதேசம் 4-வது இடத்திலும், 6.51 சதவீதத்துடன் ஆந்திரா 5-வது இடத்திலும் உள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
திராவிட மாடலுக்கு மற்றுமொரு மணிமகுடம். இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றும், அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதிலும் தமிழ்நாடு முதலிடம் என்றும் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழில் கொள்கையின் நீட்சியும், நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியும் இப்போது நல்ல விளைச்சலை தந்துக்கொண்டிருக்கின்றன. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியால் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக 2030-ம் ஆண்டுக்குள் உயர்த்திடுவதற்கான பணிகள் நம் திராவிட மாடல் அரசால் தொடரும், உயரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது பதிவில் கூறியுள்ளதாவது:-
நாம் கொண்டு வரும் லட்சக்கணக்கான கோடி முதலீடுகளில் ஒவ்வொரு ரூபாயும் நமது இளைஞர்களுக்கு தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டது என்று எங்களது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழுத்தமாக கூறி வருகிறார். தற்போது மத்திய அரசு வெளியிட்ட முடிவுகள் அதை பற்றி பேசுவதாக உள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட 2022–23 தொழில்துறை ஆண்டறிக்கையின்படி, இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து தொழில்துறை வேலைகளில் 15 சதவீத பங்களிப்பினை தமிழகம் வழங்கியிருக்கிறது. தொழில்துறையில் நாம் நாட்டின் தலைசிறந்த வேலை கொடுப்பவராக மாறியிருப்பதை இது காட்டுகிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியில் நாம் இடைவிடாமல் கவனம் செலுத்தி வருவதற்கு இது ஒரு சான்றாகும். இதுதான் திராவிட மாடலின் செயல்பாடு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.