வாழ்வியல்

நாட்டின் வளம் பெருக்கும் இந்தியக் கடல் ஆராய்ச்சி

திட்டமிட்டுத் திண்ணிய முறையில் செயற்படுத்தப்படுவது இந்தியக் கடல் ஆராய்ச்சி. ஆகவே, அதனால் உண்டாகக்கூடிய சிறந்த பயன்கள் பலவாகும். இந்தியாவின் பொருள் வளம் இந்தியக் கடல் ஆராய்ச்சியினால் பெருக வழிகள் பல உள்ளன. இந்தியக் கடலின் உயிர்கள் யாவும் முறையாக ஆராயப்படுமானல், அதனால் இருவகையில் நன்மைகள் கிட்டும். முதலாவதாகக் கடல் உயிர்கள் தொடர்பான அறிவு பெருகும். இதனால் கடல் உயிர் நூல் வளரும். இரண்டாவதாக உண்ணத் தக்க மீன் வகைகள் முழு அளவுக்குப் பயன்படுத்தப்படுமானல் பொருள் வளமும் வருவாயும் பெருகும். உணவுப் பற்றாக்குறையும் நீங்கும்.

இந்தியக் கடலின் அருகில் வாழும் நாடுகளிலுள்ள மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் கால் பங்கு ஆகும். இவர்களது உணவுப் பற்றாக்குறை நீங்கிப் பொருள் வளம் பெருக, இந்தியக் கடலின் மீன்வளம் நன்கு பயன்படுத்தப்பட வேண்டும். இதற்கு விஞ்ஞான முறைகளில் மீன்பிடித்தல் நடைபெறுதல் வேண்டும். மீன் பண்ணைகளையும் அவ்வாறே அமைக்க வேண்டும். மீன் தொழில் விஞ்ஞானக் கலையாகவே மாற வேண்டும்.

இந்தியக் கடலின் கனி வளங்களைத் தீர ஆராய்ந்து, அவற்றைப் பயன்படுத்த, இந்தியாவின் பொருள் வளம் பெருகும். இதற்கு இந்தியக் கடல் ஆராய்ச்சி வழிவகை செய்யும் என நாம் நம்பலாம். உண்மையில் இந்தியக் கடலின் கனி வளங்கள் அளவிடற்கரியனவாகும். சிக்கனப் பயண வழிகளை இந்தியக் கடலில் மேற்கொள்வதால், அதிகமாகும் பணச் செலவை எல்லா நாடுகளும் ஓரளவுக்குக் குறைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *