முழு தகவல்

நாட்டின் வளங்களை மக்கள்மயப்படுத்தி இந்தியாவை உயர்த்திய ஜவகர்லால் நேரு!

நாடு விடுதலைப் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தியடிகளின் தலைமையை ஏற்று பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று 3259 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து, 1947 இல் இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்று 17 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார். இவரை நவஇந்தியாவின் சிற்பி என்று வரலாறு அழைத்து மகிழ்ந்தது.

1947 இல் இந்தியா விடுதலை பெறும்போது, வறுமையும் பஞ்சம் பசியுமே அன்றைய இந்தியாவின் நிலை. இந்த நாட்டின் கல்வியறிவு வெறும் 12 சதவீதம் மட்டுமே. பெண்கள் கல்வியறிவு வெறும் 2 சதவீதம்தான். 10,000 பேரில் ஒருவர் மட்டும்தான் 8 ஆம் வகுப்பு கடந்த காலம். இந்த நாட்டின் சராசரி மனித வாழ்நாள் 32 ஆண்டுகள் தான். நாட்டில் 90 சதவீத மக்கள் ஏழ்மை, பசி, பட்டினி, நோய் என்று துன்பப்பட்டு கொண்டிருந்த நேரம். கல்வியறிவு, மருத்துவம், தொழில் வளர்ச்சி இப்படி எல்லாவற்றிலும் உலக தரவரிசையில் கடைசி 10 இடத்திற்குள் இருந்த நாடு.

திட்டமிட்ட கட்டமைப்புகள்

உலகத்தில் மக்கள் வாழ தகுதி இல்லாத நாடு என்று உலக பத்திரிகைகள் ஏளனமாக விமர்சித்த நிலையில் இருந்த நாடுதான் நமது இந்தியா. இன்று இந்தியாவின் சாதனைகள் என்று நாம் குறிப்பிடும், எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஎம் (AIIMS, IIT, IIM) முதல், நிலவுக்கு, செவ்வாய்க்கு விண்கலன் அனுப்பிய இஸ்ரோ வரைக்கும் அடிக்கல் நாட்டி, அடித்தளம் போட்டுகொடுத்தவர் ஜவகர்லால் நேருதான். பல முகம் கொண்ட இந்தியா போன்ற நாட்டுக்கு, அருமையான ஜனநாயக கட்டமைப்பை உருவாக்கியவர் நேரு.

திட்டமிட்ட பொருளாதாரத்தின் மூலமாக வளர்ச்சியை நோக்கி இந்தியா அவரது தலைமையில் பீடுநடை போட்டது. அன்றைய விடுதலைபெற்ற இந்தியாவின் நிலையை அடிப்படையாக வைத்து தான் அவரது சாதனைகளை பார்க்க வேண்டும். 1947-48 இல் சமர்ப்பிக்கப்பட்ட முதல் பட்ஜெட் தொகை ரூபாய் 178.77 கோடி. இந்த வருவாயை வைத்துக்கொண்டு திட்டமிட்டு இந்தியாவை திறம்பட கட்டமைத்தவர்தான் நேரு. அவரது ஆட்சியின் இறுதியில் 1964-65 இல் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் தொகை ரூபாய் 2095 கோடிதான். இப்போது இந்திய பட்ஜெட் ரூ.30,000,000,000,000 (ரூ.30 லட்சம்) கோடியை கடந்து தாக்கல் செய்யப்படுகிறது.

தொழில் துறை வளர்ச்சி

நேருவின் 17 ஆண்டு ஆட்சிகாலத்தில், அவர் உருவாக்கிய கட்டமைப்புகள் ஏராளம். 1948 ஆம் ஆண்டில், தொலைபேசி சாதனங்களைத் தயாரிக்க பெங்களூரில் இந்தியத் தொலைபேசி தொழிலகம் (The Indian Telephone Industries) அமைக்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டு நவம்பர் 1 ந்தேதி, சித்தரஞ்சன் ரயில் எஞ்ஜின் தொழிற்சாலை. 1952 ஆம் ஆண்டில் சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை (ICF) நிறுவப்பட்டது. 1953 ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (HMT) உருவாக்கப்பட்டுப் பலவிதமான தொழில் கருவிகளை உற்பத்தி செய்யத் தொடங்கியது.

1954 ஆம் ஆண்டு அரசுக்கு சொந்தமான பிம்ப்ரி ஆலையிலிருந்து பென்சிலின் மருந்து தயாரிக்கப்பட்டது. பின்னாளில் இந்த ஆலைக்கு இந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடெட் என்று பெயர் சூட்டப்பட்டது. 1955 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று, இரும்பு, எக்கு அமைச்சகம் உருவானது. அதே ஆண்டில் இந்தியாவின் முதல் பத்திரிகை காகித ஆலை (News Print), மத்தியப் பிரதேசத்தில் நேபா நகரில் ஜனவரி 11 அன்று உற்பத்தியைத் தொடங்கிற்று.

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயுவை (LPG) பாரத் பெட்ரோலியம் லிமிடெட் இந்தியாவில் முதன்முதலில் சந்தைப்படுத்தியது. போபாலில் பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) லண்டன் தொழில் நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்டது. தற்போது அமெரிக்காவிற்கு வெளியில் உள்ள 500 பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இது பட்டியலிடப்பட்டுள்ளது.

வேளாண்மை மேம்பாடு

விவசாய உற்பத்திப் பொருள்களைப் பாதுகாக்க, 1957 ஆம் ஆண்டில் மத்திய பொருள் கிடங்குக் கழகம் தொடங்கப்பட்டது. 1964 இல் இந்திய உணவுக் கழகம் (FCI) அமைக்கப்பட்டது. நீர்ப் பாசனத்துக்காக, அமெரிக்காவில் உள்ள டென்னசி பள்ளத்தாக்கு ஆணையம் போல,1948 இல் தாமோதர் பள்ளத்தாக்குக் கழகம் உருவாக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு ஜூலை 8 அன்று உலகின் மிகப்பெரிய பக்ரா நங்கல் கால்வாய் கட்டமைப்பை நேரு தொடங்கி வைத்த நேரு,‘அணைகள் என்பது, வழிபடவேண்டிய ஆலயங்கள் என்று குறிப்பிட்டார்.

உள்கட்டமைப்பு துறையில் 1951 ஆம் ஆண்டு, தில்லி – மாஸ்கோ நேரடித் தொலைபேசித் தொடர்பு தொடங்கப்பட்டது. கிராமப்புற அஞ்சலகங்களில் தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. 1952 இல் இந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனம் உருவாக்கப்பட்டது. இது ஒரு முழுமையான பொதுத்துறை நிறுவனமாக 1961இல் மாற்றம் கண்டது.

1962 இல் ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited) நிறுவனம், ஆசியாவிலேயே முதலாவதாக முழுவதும் தானாகவே இயங்கும் தன்மைகொண்ட 1,400 கிலோ மீட்டர் நீள குழாய் அமைப்பினை, நாட்டின் பல பகுதிகளில் குறுக்கும் நெடுக்குமாக அமைத்து உருவாக்கியது. 1961 இல் இயற்கை எரிவாயுமூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையத்தை ஆசியாவிலேயே முதன்முறையாக அசாமின் தூலியாஜானில் ஆயில் இந்தியா லிமிடெட் நிர்மாணித்தது.

கல்வி, போக்குவரத்து

உயர்கல்விக்காக, 1947 ஆம் ஆண்டில் பஞ்சாப், ராஜஸ்தான் பல்கலைக்கழகங்கள் அமைந்தன. 1948 அக்டோபரில், பம்பாயில் விமானப் பொறியியல் கல்லூரி அமைந்தது. குவஹாட்டி, காஷ்மீர் பல்கலைக்கழகங்கள் உருவாயின. 1951 இல் அகமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகம், 1952 இல் பீகார் பல்கலைக்கழகம், 1953 இல் பல்கலைக்கழக மானியக் குழுவும் அமைக்கப்பட்டது (University Grant Commission – UGC). 1954 இல், திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் உருவானது. சர்தார் படேல் பல்கலைக் கழகம், ஜாதவ்பூர் பல்கலைக் கழகங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

1958 ஆம் ஆண்டு ஜூலை 25இல் பம்பாயில் இந்தியத் தொழில் நுட்பக்கழகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. 1959 இல் சென்னை கிண்டியில் இந்தியத் தொழில் நுட்பக்கழகம் (IIT) மேற்கு ஜெர்மனி அரசின் கூட்டுறவுடன் அமைக்கப்பட்டது. 1960 இல் கான்பூரில் இந்தியத் தொழில் நுட்பக்கழகம் (IIT), 1961 இல் டெல்லியில் இந்திய தொழில் நுட்பக்கழகம் (IIT) பிரிட்டிஷ் அரசின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டது.

போக்குவரத்து துறையில்1953 இல் ஏர் இந்தியாவும் இந்தியன் ஏர்லைன்சும் உருவாக்கப்பட்டன. எட்டு உள்நாட்டு விமான நிறுவனங்கள் இணைக்கப்பட்டு இந்தியன் ஏர்லைன்ஸ் உருவாக்கப்பட்டது. இதில் 99 வகைப்பட்ட வானூர்திகள் செயல்பட்டன. 1957 ஆம் ஆண்டில் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் முதலாவது பயணியர் மற்றும் சரக்குக் கப்பல் எம்.வி. அந்தமான் கட்டப்பட்டது.

தொழில்நுட்பம்–ஆராய்ச்சி

ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பத் துறையில், 1947 இல் மத்தியக் கடல் மீன்கள் ஆராய்ச்சி நிறுவனமும், மத்திய உள்நாட்டு மீன்கள் ஆராய்ச்சி நிறுவனமும் கல்கத்தாவில் அமைக்கப்பட்டன. 1950 ஆம் ஆண்டில் தேசிய வேதியியல் ஆய்வகத்தை பிரதமர் நேரு தொடங்கி வைத்தார். நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இத்தகைய 11 ஆய்வகங்களில் இது முதலாவதாகும்.

மேலும் 1952 இல் டெல்லியில் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (Central Road Research Institute), 1953 இல் மத்திய கட்டட ஆராய்ச்சிக் கழகம், 1954 இல் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், 1963 ஆம் ஆண்டில் தானே வழியறிந்து பறந்து செல்லும் ராக்கெட், தும்பாவில் உள்ள ஏவு மையத்தில் இருந்து செலுத்தப்பட்டது.

உலகிலேயே மிக அதிக லாபம் ஈட்டும் வெற்றிகரமான பொதுத்துறை நிறுவனமாக இருக்கும், ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation – LIC) 1956 ஆம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்டது. 1954 இல் சாதி மறுப்பு , மதமறுப்புத் திருமணங்களை, சிறப்புத் திருமணச் சட்டம் 1954இல் சட்டபூர்வமாகச் செல்லுபடியாக்கியது. பரஸ்பர ஒப்புதலின் பேரில் விவாகரத்து பெறுவதையும் அறிமுகப்படுத்தியது.

நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடையும் இந்நாளில், ஏழ்மை, வறுமை, படிப்பறிவின்மை, மதவாதம், மூடநம்பிக்கைகள், சாதியம் இவற்றில் ஊறிக் கிடந்த நாட்டை தனது நவீன, அறிவியல் சிந்தனை மூலம் அருமையான சமூகமாக கட்டமைக்க முனைந்தவர் நேரு. நம்மோடு சுதந்திரம் அடைந்த மற்ற நாடுகளின் இன்றைய நிலைமையை சிந்தித்தால் நமது நாட்டில் உள்ள மக்களாட்சியின் அருமையை உணர்ந்து கொள்ள முடியும். இதனை எவரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.


மா. இளஞ்செழியன்


Leave a Reply

Your email address will not be published.