செய்திகள் நாடும் நடப்பும்

நாட்டின் பாதுகாப்பு சவால்


தலையங்கம்


இன்று சமர்ப்பிக்கப்பட இருக்கும் பட்ஜெட் முழுமையான பட்ஜெட் கிடையாது, மூன்று மாதங்களில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான செலவினங்களுக்கும், அரசு இயந்திரம் தொடர்ந்து நடைபோட வேண்டிய நிதி ஆதாரங்களுக்கும் ஒதுக்கீடுகள் மட்டுமே இருக்கும்.

பொதுமக்கள் விரும்பும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற சலுகைகள் இருக்குமா? என்று ஆவலோடு எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றம் பெறுவார்கள்.

ஆனால் பெட்ரோல் விலையும், வங்கிக்கடன் வட்டி விகித மாற்றமும் நிதி அமைச்சரின் முடிவாக இருப்பதில்லை. அவை அத்துறை சார்ந்த நிபுணர் குழுவே முடிவு செய்து அறிவித்து வருவதை அறிவோம்.

ஆக இந்த இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிப்பு ஒப்புக்காக நடத்தப்படும் ஒன்று என்பது தான் உண்மை, இதற்காக பலர் உழைப்பும், பாராளுமன்ற கூட்டத்தொடர் சார்பான செலவுகளும், எம்.பி.க்களின் நேரத்தை இப்படி ஒப்புக்கான பணிகளுக்கு செலவும் செய்வதும் தேவையா? என கேட்கலாம்.

கடந்த 20 ஆண்டுகளாக பாராளுமன்ற விவகாரங்களை உற்று நோக்கி வரும் நிபுணர்கள் அங்கு விவாதங்களும், முடிவுகளும் எடுக்கப்படும் பாணியை பாராட்டியதாக தெரியவில்லை.

எதிர்கட்சிகளின் கோஷமும், வெளிநடப்பும் ஏற்படுத்தும் அமளிதுமிளியில் ஆளும் கட்சியினர் தங்களது வாக்குப் பலத்தின் அடிப்படையில் திட்டங்களை அமல்படுத்துகிறார்கள். இந்நிலையில் பட்ஜெட் அறிவிப்புகளும் அதன் மீதான விவாதங்களும் ஏமாற்றங்களாகத் தான் இருக்கிறது.

ஆனால் நமது தேசத்தின் பாதுகாப்ப அம்சங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், முடிவுகள் மிக மிக அவசியமானது.

கடந்த மாதம் டிசம்பர் 13 அன்று நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் இருவர் கீழ்த்தளத்துக்கு தாவிக்குதித்து வந்து, இரு குப்பிகளை செயல்பட செய்து அதிலிருந்து மஞ்சள் நிற புகைகளை பரப்பினர்!

ஜனநாயகத்தின் கோயிலாக இருக்கும் பாராளுமன்றத்திலேயே இப்படிப்பட்ட சம்பவம் ஏற்பட்டால், நமது பாதுகாப்பு மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்குமா? இந்த சம்பவத்தின் பின்னணியில் யார், எதற்கு என்ற கேள்விகளுக்கு உரிய பதில் இதுவரை வெளியிடப்படவில்லை.

இது எதிர்க்கட்சிகளின் சதி என்று ஆளும்கட்சி தரப்பில் கருத்துக்களை வெளியிட்டாலும், ஆளும் கட்சியின் கையாளாகாத தன்மையை வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சியில் குற்றம் சாட்டினாலும், ஒருவேளை அதிர்ச்சி தரும் விபரீதமான ஒன்று அரங்கேறி இருந்தால்… என்ற கேள்வியை நாம் புறக்கணிக்கக்கூடாது.

ஆனால் மறுநாள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகள் ஏந்தி சபாநாயகரை தாக்குவது போல் முற்றுகையிட்டனர். அதை தொடர்ந்து எதிர்கட்சிகளை சேர்ந்த 13 எம்.பி.க்கள் அந்த கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மறுவாரமே நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் பதில் ஏதும் கூறாததைக் கண்டித்து மீண்டும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 18 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இதுவரை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதா? எப்படி பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது? போன்ற பல கேள்விகளுக்கு விடை ஏதும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பவத்திற்குப் பிறகு நாடெங்கும் பாதுகாப்பு வளையம் நடைமுறைக்கு வந்தது, பல தலைவர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதை மறந்துவிடக்கூடாது.

பாராளுமன்றத்தினுள் இரு இளைஞர்கள் அங்குள்ள பாதுகாப்பு வியூகத்தை கடந்து பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு எமனாக அல்லவா அச்சம்பவத்தில் தோன்றியுள்ளனர்.

இந்த முறை நடைபெறும் இடைக்கால பட்ஜெட் தொடரில் எல்லா எம்.பி.க்களும் உரிய முறையில் விவாதித்து இந்த அதிமுக்கிய சம்பவத்தை தடுப்பது பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணை உறுதி செய்வது போன்ற திட்டங்களை விவாதித்து செயல் வடிவம் பெற வைக்க வேண்டிய பொறுப்பு இருப்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *