முழு தகவல்

நாட்டின் இணைப்பில் இரும்பு மனிதரின் இதயமாகவே செயல்பட்ட வி.பி.மேனன்!

1947 ஆம் ஆண்டில் நேரடி ஆட்சியின் கீழ் இருந்த பிரிட்டீஸ் இந்தியாவுக்கு விடுதலை அளித்த ஆங்கிலேயர்கள், ஆங்கிலேய ஆட்சியின் கீழ், அவர்களுக்கு கப்பம் கட்டும் மன்னர் ஆட்சியில் செயல்பட்ட 565 சமஸ்தானங்கள் என்று அழைக்கப்படும் சிற்றரசுகளை, தங்கள் விருப்பம் போல் யாருடனும் இணைந்து கொள்ளலாம் என்று அறிவித்து விட்டது. மன்னர்களால் ஆளப்பட்ட பல சிற்றரசுகள் இந்தியாவுடன் இணைந்தது. அதேபோல் வேறு பல சிற்றரசுகள், தங்கள் அருகில் இருந்த பெரிய சமஸ்தானங்களுடன் இணைந்து 56 மாகாணங்களாக உருப்பெற்றது.

இந்நிலையில், பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருவுக்கு அடுத்த நிலையில் துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லபாய் படேல், சிற்றரசுகளை இந்தியாவுடன் இணைக்கும் பணியை, பேச்சுவார்த்தைகள் மூலமும், சில இடங்களில் மிரட்டியும் மேற்கொண்டார். அவருக்கு துணையாக, அரசு செயலாளராக இருந்த வி.பி.மேனன் செயல்பட்டார். இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சியின் போது கடைசியாக வந்த மூன்று ஆளுநர்களுக்கு ( லின்லித்கோ பிரபு , வேவெல் பிரபு மற்றும் மவுண்ட்பேட்டன் பிரபு ) அரசியலமைப்பு ஆலோசகராகவும், அரசியல் சீர்திருத்த ஆணையராகவும் இருந்தவர் வி.பி. மேனன்.

இரும்பு மனிதரின் இதயம்

கேரளாவைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியரின் மகனான வி. பி. மேனன் என்று அழைக்கப்பட்ட வப்பாலா பங்குண்ணி மேனன், சர்தார் வல்லபாய் பட்டேலின் கீழ் மாநில அமைச்சகத்தில் இந்திய அரசின் செயலாளராகவும் பின்னர் அமைச்சரவை செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். பட்டேல் எண்ணியதை உடனடியாக செயல்படுத்துவதில் வல்லவரான வி.பி.மேனனை இரும்பு மனிதரின் இதயம் என்றே விவரித்தனர். காரணம், வல்லபாய் படேல் சிந்திக்கும் முன்பே அவருடைய சிந்தனையை செயல்படுத்துவதில் மூளையாக செயல்பட்டவர் வி.பி.மேனன் என்பார்கள்.

இந்த செயல்பாட்டின் மூலமாக மன்னராட்சி நடைபெற்ற பெரும்பாலான 562 சமஸ்தான பகுதிகளை வெற்றிகரமாக இந்தியாவுடன் ஒருங்கிணைத்த போதும் சில மன்னராட்சி பகுதிகளில் இதனை வெற்றிகரமாக நிகழ்த்த இயலவில்லை. இதில் குறிப்பிடத்தக்கவை இப்போதைய குஜராத் மாநிலத்தின் ஜுனாகத், காஷ்மீர் மற்றும் ஐதராபாத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மன்னராட்சி பகுதிகள் ஆகும். ஜூனாகத் மற்றும் ஐதராபாத் சமஸ்தானங்களின் இணைப்பில் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு இணைப்பில் ஈடுபட்டனர்.

மாறுபட்ட காஷ்மீர்–ஐதராபாத்

காஷ்மீரில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால் அதனை ஆண்ட மன்னர் ஹரிசிங் இந்துவாக இருந்தார். அதற்கு மாறாக ஐதராபாத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால் ஐதராபாத் சமஸ்தானம் முஸ்லீம் மன்னரான நிஜாமால் ஆளப்பட்ட நாடாக இருந்தது. இந்த இரண்டு மன்னர்களும் இந்த நாடுகள் பாகிஸ்தான் அல்லது இந்தியாவுடன் இணையாமல், சுதந்திரமாக நீடிக்க முடிவு செய்தனர். ஆனால், காஷ்மீரின் ஒரு பகுதியான ஆசாத் பகுதியை பாகிஸ்தான் தன்னோடு இணைத்துகொண்டதன் தொடர்ச்சியாக, ஹரிசிங் காஷ்மீரை இந்தியோவோடு இணைக்க, ஜவகர்லால் நேருவுடன் நிபந்தனையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஐதராபாத் மன்னராட்சியின் கீழ் இருந்த பகுதி 82,000 சதுர மைல் பரப்பளவு கொண்டது. எனவே இந்தியாவோடு ஒன்று சேராது என்றார். ஜெனரல் சௌத்ரி தலைமையில் பெரும் படையை ஐதராபாத் மீது ஏவிய நிலையில் 4 நாட்களில் ஐதராபாத் நிஜாமின் படை அடிபணிந்தது. இப்படியாக, 565 மன்னராட்சியின் கீழான மாநிலங்களும், இந்தியாவுடன் இணைக்கப்பட்டு, இந்தியா என்ற பெரிய நாடு உருவாக்கப்பட்டது. சர்தார் வல்லபாய் படேல் மற்றும் வி.பி.மேனன் ஆகியோர், இந்தியாவுடான இந்த இணைப்புக்கு பெரும் பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருங்கிணைப்பின் கதை

இதன் மூலம், 565 க்கும் மேற்பட்ட சுதேச அரசுகளும் இந்தியாவின் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டன. மாநில அமைச்சகத்திற்கும் பல்வேறு இந்திய இளவரசர்களுக்கும் இடையிலான இராஜதந்திரத்தை நிர்வகிக்க பட்டேலின் தூதராக செயல்பட்டார். மேலும் இந்தியாவுடன் இணையத் தயங்கிய இளவரசர்கள் மற்றும் ஆட்சியாளர்களை பணிய வைத்தார். பாகிஸ்தானுடனான உறவுகள் மற்றும் காஷ்மீர் மோதல்கள் குறித்து, நேரு மற்றும் சர்தார் பட்டேலுக்கு வி.பி. மேனன் ஆலோசனைகளும் வழங்கினார்.

சர்தார் பட்டேலின் உத்தரவின் பேரில், வி.பி. மேனன் பின்னர் “இந்திய மாநிலங்களின் ஒருங்கிணைப்பின் கதை” என்ற புத்தகத்தை எழுதினார். அதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தாங்கள் கடைப்பிடித்த செயல்முறையை விவரிக்கிறார். பட்டேலுக்கும் மேனனுக்கும் இடையிலான கூட்டு ஒரு அரிய வகையாகத் திகழ்ந்தது. சர்தார் பட்டேலின் வலது கையாக இருந்து சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.


மா. இளஞ்செழியன்


Leave a Reply

Your email address will not be published.