செய்திகள்

நாடெங்கும் தொற்று அதிகமுள்ள 150 மாவட்டங்களில் ஊரடங்கா?

டெல்லி, ஏப். 29–

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக இருக்கும் 150 மாவட்டங்களில், மீண்டும் முழு ஊரடங்கைக் கொண்டு வரலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவல் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் வெகு வேகமாகப் பரவி உச்சத்தைத் தொட்டு வருகிறது.

இந்நிலையில், புது டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், “நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக இருக்கும் 150 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கைக் கொண்டு வரலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட அந்த மாவட்டங்களில் தற்போது 15% அளவுக்கு மேலாக கொரோனா பரவல் இருக்கிறது என்றும் இது போகப் போக மிக வேகமாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் இந்த மாவட்டங்களில் முழு லாக் டவுன் கொண்டு வருவதன் மூலம் பரவலைக் கட்டுப்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய அரசுகள் மாநிலங்களில் முழு ஊரடங்கை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடு முழுதும் 150 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. இதன் மீது மத்திய அரசு மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி, அதன் பிறகே முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்த 150 மாவட்டங்களில் தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயமுத்தூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *