செய்திகள்

நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி, மார்ச்.15-

நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மட்டும் 1,317 கிலோ தங்கம் பிடிபட்டு இருப்பதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.

தங்கத்தின் தேவை இந்தியாவில் அதிகமாக இருப்பதால் துபாய், சிங்கப்பூர் போன்ற தங்கம் விலை குறைவாக உள்ள நாடுகளில் இருந்து கடத்தல்காரர்கள் தங்கத்தை இந்தியாவுக்கு கடத்தி வருகிறார்கள்.

இப்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படும் தங்கத்தை சுங்க அதிகாரிகள் அவ்வப்போது பறிமுதல் செய்து வருகிறார்கள். சில நேரங்களில் விமான நிலையத்தில் இருந்து தங்கம் வெளியேறினாலும் ரெயில் நிலையங்களில் பிடிபட்டு விடுகிறது.

இதுபோன்ற கடத்தலில் கடந்த 3 ஆண்டுகளில் பிடிபட்ட தங்க விவரங்களை பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர், பத்ம விபூஷண் விருது பெற்ற நடனக்கலைஞர் சோனல் மான்சிங் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்டு இருந்தார்.

இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில், ‘கடந்த 3 ஆண்டுகளில் (2020 முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை) நாடு முழுவதும் சுமார் 9 ஆயிரம் கிலோ, அதாவது 8 ஆயிரத்து 956 கிலோ 490 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டிலேயே அதிக அளவு கடத்தல் தங்கம் கடந்த 3 ஆண்டுகளில் கேரளாவில்தான் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு ஆயிரத்து 869 கிலோ 290 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஆயிரத்து 317 கிலோ 430 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதனையடுத்து மராட்டிய மாநிலத்தில் ஆயிரத்து 125 கிலோ 380 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

வழக்குகளை பொறுத்தவரை நாடு முழுவதும் 9 ஆயிரத்து 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் 2,237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

தங்கம் கடத்தலை தடுக்கும் பணிகளை புலனாய்வு அமைப்புகள் ரகசிய தகவல்களின் அடிப்படையில் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன’ என்று மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *