புதுடெல்லி, டிச.17-–
தற்போது நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜும்தார் கூறியதாவது:-– கடந்த 10 ஆண்டுகளில் 12 போலி பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. இருப்பினும், தற்போது நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அங்கீகாரம் பெறாதவை. அங்கு வழங்கப்படும் பட்டங்கள் செல்லாது.
எனவே, அந்த பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேரக்கூடாது. சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்படும் எம்.பி.க்கள், இதுதொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அந்த பல்கலைக்கழகங்கள் மூடப்படும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் நேரடியாக நடவடிக்கை எடுத்தால், கூட்டாட்சி முறை பற்றிய கேள்வி எழும்.
இவ்வாறு அவர் கூறினார்.
21 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலில், புதுச்சேரியில் வழுதாவூர் ரோடு திலாஸ்பேட்டையில் உள்ள ஸ்ரீ போதி அகாடமி ஆப் ஹையர் எஜுகேசன் என்ற நிறுவனமும் இடம் பெற்றுள்ளது.