காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி
மகளிருக்கு இலவச பேருந்து பயணமும் அறிவிப்பு
ஐதராபாத், செப். 18–
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பின்பற்றி தேர்தல் வாக்குறுதியாக, 3 வது மாநிலமாக தெலங்காவிலும் காங்கிரஸ் கட்சி மாதம் ரூ.2500 வழங்குவதாக அறிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக சந்திரசேகரராவ் உள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் தெலங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியின் 2 நாள் கூட்டம் தெலங்கானாவில் நடந்தது. இந்த கூட்டம் முடிந்த நிலையில் நேற்று ரங்கரெட்டி மாவட்டம் துக்குகூடா என்ற இடத்தில், காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட பல மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் அதிரடி
இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே பேசியபோது, 6 உத்தரவாத திட்டங்களை அறிவித்தனர். அதன்படி முதல் திட்டம் என்பது காங்கிரஸ் ஆட்சி வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் 2வதாக அனைத்து பெண்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயணம் செய்யலாம் எனவும், சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதுதவிர 4 வது திட்டமாக வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 5வது திட்டமாக விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 6வது திட்டமாக பயிலும் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வித்யா பரோசா கார்டுகள் கல்வி (உதவித்தொகை) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என திமுக அறிவித்தது. இந்த திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தை பின்பற்றி கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என அறிவித்து காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மத்தியபிரதேசத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1500 வழகப்படும் என அண்மையில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதே பாணியில் தெலங்கானாவிலும் தற்போது காங்கிரஸ் ஆட்சி வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்குவதாக அக்கட்சி அறிவித்து வாக்காளர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.