போஸ்டர் செய்தி

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: மசூதிகளில் சிறப்பு தொழுகை

புதுடெல்லி,ஆக.12–

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மசூதிகள் மற்றும் மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சிறப்பு தொழுகைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

டெல்லி ஜமா மசூதி, போபால் ஈத்கா மசூதி, மும்பை ஹமிதியா மசூதி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல லட்சம் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளிலும், சென்னையில் உள்ள பல்வேறு மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

காஷ்மீரில் அமைதியான முறையில் பக்ரீத் கொண்டாட்டங்கள் நடைபெற்றதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அனந்த்நாக், பாராமுல்லா, புட்காம், பந்திபுரா ஆகிய பகுதிகளில் எந்த அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் பக்ரீத் தொழுகை நடைபெற்றது. பாராமுல்லாவில் உள்ள பழமையான ஜாமியா மசூதியில் 10,000 பேர் தொழுகை நடத்தி உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சகமும் இதனை உறுதி செய்துள்ளது. காஷ்மீரில் முழு அமைதியுடன் பக்ரீத் நடந்ததாகவும், எவ்வித வன்முறையும் இல்லை என்றும் இந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *