செய்திகள்

நாடு முழுவதும் செப்டம்பர் 12ந்தேதி ‘நீட்’ தேர்வு

இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி, ஜூலை.13-

நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு செப்டம்பர் 12ந்தேதி நடைபெறும் என்றும், இதற்கு இன்று (13–ந்தேதி) மாலை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ என்ற நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டிலும் ‘நீட்’ தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் தேர்வு மையங்களை அதிகரித்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேசிய தேர்வு முகமை மூலம் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு தாமதமாக நடத்தப்பட்டதால், கடந்த ஆண்டில் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கையும் சற்று தாமதமானது.

நாடு முழுவதும் நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வந்ததால், நடப்பு கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வு குறித்து தேதி எப்போது அறிவிக்கப்படும்? என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் நோய்த்தொற்று அதிகமாக இருந்ததால் தொடர்ந்து தேதி அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இதற்கிடையில் பள்ளிகளில் பிளஸ்–2 பொதுத்தேர்வுகள் கூட ரத்து செய்யப்பட்டன. அதற்கான மதிப்பெண் வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடைய இருக்கின்றன.

பொதுவாக ‘நீட்’ தேர்வு தேதி குறித்த அறிவிப்பு, தேர்வுக்கு விண்ணப்பிக்க தொடங்கும் நாட்களுக்கும், தேர்வு நடைபெறும் நாட்களுக்கும் இடையே 60 நாட்கள் அவகாசம் இருக்கவேண்டும். அந்தவகையில் நீட் தேர்வு எப்போது நடைபெறுகிறது? என்பது பற்றி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்துள்ளார்.

தேர்வு மையங்கள் அதிகரிப்பு

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:–

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 12-ந்தேதி ‘நீட்’ தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை இன்று மாலை 5 மணியில் இருந்து https://nta.ac.in/என்ற தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில் தொடங்கும்.

சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கையை 155லிருந்து 198 ஆக அதிகரித்து இருக்கிறோம். இதேபோல், கடந்த ஆண்டு 3 ஆயிரத்து 862 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. அதன் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை உறுதிசெய்யும் வகையில், தேர்வு எழுதுவதற்காக ஒவ்வொரு மையங்களுக்கும் வரும் மாணவர்களுக்கு முககவசம் வழங்கப்படும். தேர்வு மையங்களுக்கு வரும் நேரங்கள், வெளியேறும் நேரங்கள், அங்கு எந்தவித தொடர்பும் இல்லாத பதிவு, ‘சானிடைசர்’ கொண்டு சுத்தம் செய்வது, சமூக இடைவெளியுடன் மாணவர்களை அமரச்செய்வது போன்றவையும் உறுதி செய்யப்படும்.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேரும், அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 பேரும் எழுத விண்ணப்பித்து இருந்தார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், ஆரம்பத்தில் இருந்தே ‘நீட்’ தேர்வுக்கு கடும் எதிர்ப்பு இருக்கிறது. இந்தநிலையில் புதிதாக பொறுப்பேற்ற அரசு, ‘நீட்’ தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது. அந்தக்குழுவின் பணிகளும் நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த குழுவுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு போடப்பட்டதால், இந்த குழுவின் பணிகளும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போது ‘நீட்’ தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *