செய்திகள்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழா துவக்கம்

புதுடெல்லி, ஏப்.11–

நாடு முழுவதும் 4 நாட்கள் நடைபெறும் கொரோனா தடுப்பூசித் திருவிழா இன்று காலை தொடங்கியது. இதில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

இதில் 4 முக்கிய விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளைப் பயன்படுத்திக் கொள்ள அவசரகால அனுமதியை மத்திய அரசு வழங்கியது. இதன்படி கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதில் சுகாதாரத்துறையினர் மற்றும் முன்களப் பணியாளர்கள் போட்டுக் கொண்டனர்.

கடந்த மார்ச் 1ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதனையடுத்து ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. நேற்று வரை சுமார் 10 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் இதனை மறுத்து 4 கோடியே 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து இருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இன்று (11ந்தேதி) முதல் ஏப்ரல் 14 வரை தகுதியுள்ளவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். மேலும் மாநில அரசுகள் இதனை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.

அதன்படி தேசிய அளவில் கொரோனா தடுப்பூசித் திருவிழா இன்று தொடங்கியது. இதில் 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டினர்.

இதுபற்றி பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றியுள்ள உரையில், நாம் இன்று தேசிய அளவில் ‘டிகா உத்சவ்வை’ (தடுப்பூசி திருவிழா) தொடங்க இருக்கிறோம்.

அதனால் நாட்டு மக்கள் 4 முக்கிய விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அவை,

1.தடுப்பூசி போட விரும்புவோருக்குத் தேவையான உதவியைச் செய்யுங்கள்.

2. முகக்கவசம் அணியுங்கள், மற்றவர்களையும் அணியும்படி ஊக்கப்படுத்துங்கள்.

3. தொற்று கண்டறியப்பட்ட பகுதியை நுண் கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றுங்கள்.

4. கொரோனா சிகிச்சையைப் பெற பொதுமக்களுக்கு உதவியாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *