போஸ்டர் செய்தி

நாடு முழுவதும் காங்கிரஸ் முழு அடைப்பு போராட்டம்

புதுடெல்லி, செப். 10–

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த பந்த்தால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

டெல்லியில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.

காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

புதுச்சேரி, கர்னாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகனங்கள் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் பாதுகாப்புடன் அரசுப் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. மணல் லாரிகளும் இயக்கப்படவில்லை.

ரெயில் மறியல்

இந்நிலையில் முழு அடைப்பில் பங்கேற்றுள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் சாலை மறியல், ரெயில் மறியல், ஆர்ப்பாட்டம் என தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். டெல்லி ராஜ்காட்டிலிருந்து ராம்லீலா மைதானம் நோக்கி நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அவருடன் குலாம் நபி ஆசாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஒரிசா மாநிலம் சம்பல்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புவனேஸ்வரில் ரெயில் மறியல், மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. சாலையில் அமர்ந்து பேப்பர் படித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விஜயவாடாவில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெலுங்கானாவிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

குஜராத் மாநிலம் பரூச் நகரில் போராட்டக்காரர்கள் சாலையின் நடுவே டயர்களை கொளுத்திப் போட்டு பஸ் போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புதுவையில்

புதுவையில் பள்ளி, கல்லூரிகள் கடைகள் ,வர்த்தக, தொழில் நிறுவனங்கள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. கடைகள்,வர்த்தக, தொழில் நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் ஓடவில்லை. பஸநிலையத்தில் மறியல் செய்யச்சென்ற கம்யூனிஸ்ட், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களையும் பேலீசார் கைது செய்தனர்.

பஸ் கண்ணாடி உடைப்பு

காரைக்காலில் இருந்து வந்த தமிழக அரசு பஸ்மீது சிலர் கல்வீசி வி்ட்டு ஓடினர். இதனால் இந்த பஸ்சின் கண்ணாடி உடைந்தது.புதுவை கிராமப்புறங்களிலும் பந்த் போராட்டம் நடந்தது. முழு அடைப்பால் புதுச்சேரியில் சகஜ நிலை பாதிக்கப்பட்டது.

 முன்னாள் முதல்வர் அசோக் சவான் 

மும்பையில் மராட்டிய மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் அசோக் சவான் தலைமையில் கட்சித் தொண்டர்கள் மின்சார ரெயிலில் வந்து அந்தேரி பகுதியில் இறங்கி ரெயில்நிலையம் எதிரே மறியல்போராட்டம் செய்தனர். அவர்களுடன் மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே,நசீம் கான் ஆகியோரும் காங்கிரஸ் ,எதிர்க்கட்சி தொண்டர்களும் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் பாதிப்பு இல்லை

இந்த பந்த்தால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வழக்கம் போல் ஆட்டோக்கள், பஸ்கள் ஓடின. சில முக்கிய வீதிகளில் பாதி அளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பஸ் நிலையங்களில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தின் சில பகுதி களில் கடைகள் மட்டும் அடைக்கப்பட்டுள்ளன. பந்த் காரணமாக சென்னையில் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட 10க்கும் அதிகமான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பந்த்துக்கு முழு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.

கூடலூர், பந்தலூரில் கடைகள் முழுமையாக அடைப்பு நடத்தப்படுகிறது. அதேபோல் கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *