செய்திகள்

நாடு திரும்ப விரும்பும் கோத்தபய ராஜபக்சே: பாதுகாப்பு வழங்க ஆளும் கட்சி கோரிக்கை

கொழும்பு, செப். 2–

இலங்கையின் ஆளுங்கட்சி, கோத்தபய ராஜபக்சேவுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு அந்நாட்டு அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதர நெருக்கடி காரணமாக, அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே, மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததும், பிரதமரான ரணில் விக்ரமசிங்கேவும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, இலங்கையின் எட்டாவது புதிய அதிபராக, ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். அதன் தொடர்ச்சியாக, ரணில் விக்ரமசிங்கே உத்தரவின்பேரில், இலங்கையின் புதிய பிரதமராக, இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக, தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள், அதை கைப்பற்றினர். போராட்டக்காரர்கள் இலங்கை அதிபர் மாளிகைக்குள் புகுந்ததையடுத்து அங்கிருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

பாதுகாப்பு கோரிக்கை

முதலில் மாலத்தீவுகளுக்கு சென்ற அவர், மக்கள் போராட்டம் காரணமாக அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்று தஞ்சமடைந்தார். அங்கும் அவருக்கு எதிரான நிலைப்பாடு கிளம்பியதால், சிறிது நாட்களுக்கு மட்டுமே கோத்தபய ராஜபக்ச தங்க அனுமதி கொடுத்து இருப்பதாகவும், அவருக்கு புகலிடம் தரப்படவில்லை என்றும் சிங்கப்பூர் அரசு விளக்கம் அளித்தது.

தொடர்ந்து, சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே தங்கியிருப்பதற்கான விசா காலம் முடிவடைந்து விட்டதால், அவர் அங்கிருந்து தாய்லாந்து சென்றுள்ளார். முதல்கட்டமாக மூன்று மாதங்களுக்குதான் என்ற நிபந்தனையுடன் கோத்தபய தாய்லாந்தில் தற்போது தஞ்சம் அடைந்துள்ளார். இதனிடையே, இலங்கை திரும்புவதற்கான முயற்சிகளையும் கோத்தபய ராஜபக்சே மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில், இலங்கையின் ஆளுங்கட்சி கோத்தபய ராஜபக்சேவுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு அந்நாட்டு அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அவர் நாடு திரும்புவதற்கான தேதி இறுதி செய்யப்படவில்லை என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.