ஆர். முத்துக்குமார்
இன்றைய நவீன உலகில், இந்தியா உட்பட பல நாடுகளில் உடற்பயிற்சி குறைபாடு என்பது, ஒரு கவலைக்குரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. உடல் அசைவு இன்மையால் ஏற்படும் விளைவுகள் மிகவும் தீவிரமானவை. இது தனிநபர்களின் ஆரோக்கியத்தை சிதைத்து, சமூகத்தின் மீது மிகப்பெரிய பொருளாதார சுமையை ஏற்படுத்தும்.
2022 ஆம் ஆண்டில், சரிபாதி இந்தியர்கள் பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சி அளவைப் பூர்த்தி செய்யவில்லை என்று மருத்துவ இதழ் ‘டி லான்செட் குளோபல் ஹல்த்’ (The Lancet Global Health) இல் வெளியிடப்பட்ட புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இதய நோய்கள், நீரிழிவு, மனநோய், மார்பக மற்றும் குடல் புற்றுநோய்கள் போன்ற ஆரோக்கியச் சிக்கல்களை அதிகரிக்கிறது.
உடற்பயிற்சியில் 31% மக்கள்
உயர் வருமானம் உள்ள ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 48% மற்றும் தென் ஆசியாவில் 45% உடற்பயிற்சி குறைவான மிக அதிக வீதங்கள் காணப்பட்டன. மற்ற பிராந்தியங்களில் உடற்பயிற்சி குறைவானது 28% என இருக்கிறது. உலகளவில் 31% பேர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சி அளவைப் பூர்த்தி செய்துள்ளனர்.
இதன் விளைவாக, 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய குறிக்கோளை அடைய எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று தெரிவிக்கிறது. ஆரோக்கியச் சிக்கல்கள் பூதாகர அளவில் உயர்ந்து வருவது தான் உண்மை. பெரியவர்கள் வாரத்தில் 150 நிமிட மிதமான உடற்பயிற்சி அல்லது 75 நிமிட தீவிர உடற்பயிற்சி அல்லது அதற்கு இணையான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைக்கின்றது.
உடற்பயிற்சி என்றால் அனைத்து வகையான இயக்கத்தையும் குறிக்கிறது. நடைபயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல், விளையாட்டு, செயல்பாட்டு விளையாட்டுகள், அதாவது குறைந்த அல்லது எந்த உபகரணங்களும் தேவையில்லா விளையாட்டுக்கள், போன்றவை உடல் சுறுசுறுப்பை உருவாக்கும் வகையில் இருக்கின்றன. வீட்டுப் பணி அல்லது உடல் உழைப்பை கோரும் வேலைகள் மற்றொரு உடற்பயிற்சி வகையாகும்.
சர்வதேச யோகா தினம் அண்மைகாலமாக உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. யோகாவைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள், உடல்நலத்தின் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் விளக்குகின்றன. யோகா செய்ய வேண்டுமென்றால் ஒரு பாய் மற்றும் சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பதே போதும்!
ஊக்குவிப்பு திட்டம் அவசியம்
இன்றைய இளைய தலைமுறை அதிக நேரம் மின்னணு சாதனங்களில் செலவழிக்கிறது. இதனால் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் குறைந்துள்ளது. இதை மாற்றுவதற்கான முயற்சிகள் முக்கியமாகும். பள்ளிகள், கல்லூரிகள், வேலைப்பாடுகள் போன்றவற்றில் உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்கள் மிக அவசியம். அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து, பொதுமக்களுக்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அதனை நடைமுறையில் கொண்டு வர முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சியின் குறைவினால் ஏற்படும் ஆரோக்கியச் சிக்கல்கள் மிகப்பெரிய சீரழிவை குடும்பத்திறக்கும் நாட்டின் பொருளாதரத்திற்கும் ஏற்படுத்தும் அபாயம் வந்து விட்டது. பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சி அளவைப் பூர்த்தி செய்யாத இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை தடுக்க போர்கால அடிப்படையில் செயல்திட்டம் வேண்டும். உடல்நலத்தைப் பேணிட, விளையாட்டில் வேகமாய் ஓடி வியர்வை துளிகள் வெளிவர , தினமும் யோகா பயிற்சியில் ஈடுபட, நாளும் சுறுசுறுப்பாக இயங்க, நீங்களும் உங்கள் குடும்பமும், ஏன் நாடும் நலம் பெரும்தானே!
#FitnessGoals #HealthyLifestyle #WorkoutMotivation #சர்வதேச_யோகா தினம் # உடல்அசைவு #சுறுசுறுப்பு