செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் தடுக்கப்பட்ட திமுக எம்பி: மன்னிப்பு கேட்ட அதிகாரி

Makkal Kural Official

டெல்லி, ஜூன் 20–

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிஐஎஸ்எஃப் அதிகாரி மன்னிப்புக் கேட்டுள்ளார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா கடந்த 18ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது, மத்திய தொழில் பாதுகாப்புப் படை அலுவலர்களால் (CISF) தடுத்து நிறுத்தபட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் இதுதொடர்பாக நடவடிக்கை கோரி மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கடிதம் ஒன்றையும் எழுதினார்.

அதில், ‘நேற்று பிற்பகல் 3 மணியளவில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த போது, அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் என்னை தடுத்து நிறுத்தி நாடாளுமன்றத்துக்கு வந்ததன் நோக்கம் என்ன என விளக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினர்.

மன்னிப்பு கேட்ட அதிகாரி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ காரியங்கள் ஏதும் இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன். மேலும் எனக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், அதை நான் எனது தலைமை பொறுப்பில் இருப்பவரிடம் வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

தமிழ்நாடு மக்கள் மற்றும் மாநில அரசின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் உள்ள ஒருவரிடம், மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலர்களின் இந்த நடத்தை என்பது தவறு. நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாவலர்கள் பணியில் இருந்த போது இதுபோன்ற தவறான நடத்தை இதற்கு முன்பு நடந்ததில்லை. ஆனால் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலர்களின் செயல்பாடுகள் மிகுந்த வருத்ததை அளிக்கிறது.

என்னிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சிஐஎஸ்எப் பணியாளர்கள் மற்றும் தவறிழைத்த அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கண்ணியத்தையும் உறுதி செய்யவேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல அரசியல் கட்சிகளும் இதற்கு கண்டனங்களை தெரிவித்தன. இந்நிலையில் இந்த செயலுக்கு அந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளார். அப்துல்லாவின் கடிதத்தை தொடர்ந்து மாநிலங்கவை செயலர் சம்பந்தபட்ட அதிகாரியிடம் விசாரணையை மேற்கொண்டார். மேலும் சிஐஎஸ்எஃப் துணை கமாண்டன்ட் மணிபாரதியும் எம்பி அப்துல்லாவிடம் மன்னிப்பு கோரினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *