செய்திகள்

நாடாளுமன்ற மரபுகள், விதிகளை பின்பற்றுங்கள், ராகுல்காந்தி போல செயல்படாதீர்கள்

Makkal Kural Official

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி, ஜூலை 2–

ராகுல்காந்தி போல செயல்படாதீர்கள், நாடாளுமன்ற மரபுகள் மற்றும் விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

நாடாளுமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.18வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வருகிறது. நீட்தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகிறார்கள். இதனால் நாடாளுமன்றத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் அனல் பறக்கும் விவாதம் நடந்து வருகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் மக்களவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்று பேசினார்.

அப்போது பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினரை கடுமையாக விமர்சித்து பேசினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து இரு அவைகளிலும் பிரதமர் மோடி இன்று மாலை உரையாற்றவுள்ளார்.

இதற்கு முன்னதாக டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

3வது முறையாக பதவியேற்றப்பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு கூட்டணி தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். எம்.பி.க்கள் மாலை அணிவித்து சிறப்பாக வரவேற்றனர்.

கூட்டத்தில் இன்று இரு அவைகளிலும் பதிலளிக்க உள்ள பிரதமர் மோடியின் உரையில் இடம்பெற உள்ள அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள். தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மக்களின் நலனுக்காக பாடுபடவேண்டும்.

காந்தி குடும்பத்தை சேராத ஒருவர், தேநீர் விற்றவர் எப்படி 3வது முறையாக பிரதமர் ஆனார் என நினைத்து எதிர்க்கட்சிகள் விரக்தி அடைந்துள்ளன. நேருவுக்கு பிறகு இந்திய வரலாற்றில் பலர் நேரடியாகவும், சிலர் ரிமோட் கன்ட்ரோல் மூலமாகவும் பிரதமர் ஆகியுள்ளனர். பா.ஜ.க கூட்டணியின் வெற்றியை ஏற்க முடியாமல் காங்கிரஸ் தவிக்கிறது.

மக்களவையில் ராகுல்காந்தி போல் செயல்படாதீர்கள். தகவல்களை சரிபார்த்து பேசவும், ஊடகங்களில் தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். நாடாளுமன்ற மரபுகள் மற்றும் விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் பிரதமரின் வழிகாட்டுதல்படி செயல்படுவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நிறைவடைந்தது.

எம்.பி.க்கள் நாட்டிற்காக

உழைக்க வேண்டும்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “பிரதமர் இன்று எங்களுக்கு ஒரு மந்திரத்தை அளித்துள்ளார். அது மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு எம்.பி.யும் தேசத்துக்குச் சேவை செய்யவே அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கட்சி வேறுபாடின்றி. நாட்டுக்குச் சேவை செய்வதே நமது முதல் பொறுப்பு. இதில் ஒவ்வொருவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

தங்கள் தொகுதியின் விஷயங்கள், மற்ற முக்கிய விஷயங்களில் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற விதிகள், நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்றும் நடத்தை ஆகியவற்றைப் பின்பற்றுமாறும் நல்ல எம்.பி.யாக மாறுவதற்கு இவை அவசியம் என்றும் கூறினார். இந்த மந்திரத்தை கடைபிடிக்க முடிவு செய்துள்ளோம்.

பிரதமர் ஒரு கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். ஒவ்வொரு எம்.பி.யும், தங்கள் குடும்பத்தினருடன், பிரதமர் சங்கரஹாலயா (பிரதமர் அருங்காட்சியகம்)-வுக்கு செல்ல வேண்டும். அரசியல் நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லாமல், ஒவ்வொரு பிரதமரின் பங்களிப்பையும் முழு தேசமும் தெரிந்துகொள்ளவும், அதைப் பாராட்டவும், அதிலிருந்து கற்றுக் கொள்ளவும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இதுவே முதல் முயற்சி.

பிரதமர் பேசுவதை எம்.பி.க்கள் மட்டும் அல்லாமல் அனைவரும் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும். தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் மோடி பிரதமர் ஆகி வரலாறு படைத்திருக்கிறார் என குறிப்பிட்டார்

மேலும் அவர் கூறுகையில், நேற்று மக்களவையில் ராகுல் காந்தி நடந்துகொண்ட விதம், சபாநாயகர் பக்கம் திரும்பி, விதிகளை மீறி பேசியது, சபாநாயகரை அவமதித்த விதம் அகியவற்றை பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் செய்யக்கூடாத ஒன்று எனவும் கூறினார்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி, ​​“அனைத்து எம்.பி.க்களும் சபையில் இருக்குமாறும், நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுமாறும் பிரதமர் அறிவுறுத்தினார். மேலும் அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தினார். மக்களுக்கு ஆதரவாக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார். ராகுல் காந்தியின் உரைக்கு பிரதமர் மோடி இன்று மக்களவையில் பதில் அளிப்பார்” என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *