காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ்
புதுடெல்லி, ஆக. 1–
நாடாளுமன்ற வளாகத்தில் மழை நீர் கசியும் பகுதியில் பிளாஸ்டிக் வாளியை வைத்து ஊழியர்கள் பிடிக்கும் காணொலிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
டெல்லி பகுதியில் நேற்று மாலை பெய்த மிக கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. சுமார் 1 மணி நேரத்தில் 11 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் நாடாளுமன்றம் செல்லும் சாலைகள் மற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் மழை நீர் தேங்கியதுடன், புதிய கட்டிடத்தின் மையப் பகுதியில் மழை நீர் கசிவு ஏற்பட்டது. மேற்கூரையில் இருந்து நீர் கசிவு ஏற்பட்டு ஒழுகிய மழை நீரை, பிளாஸ்டிக் வாளியை வைத்து ஊழியர்கள் பிடித்தனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழைநீர் கசிந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.
அந்த நோட்டீசில், நாடாளுமன்றத்தின் மையப் பகுதியில் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளது குறித்து அவை நடவடிக்கையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்துக் கட்சி எம்பிக்களும் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டு நாடாளுமன்ற கட்டிடத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வீடியோவைப் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வெளியே வினாத்தாள் கசிவு, உள்ளே மழைநீர் கசிவு என்று விமர்சித்துள்ளார்.