செய்திகள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முன்கூட்டியே நிறைவு

டெல்லி, ஏப். 7–

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு நாடாளுமன்றப் பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கம் போல், ஜனவரி 31-இல் துவங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரைக்கு மறுநாள் ஒன்றிய பொது பட்ஜெட் தாக்கலானது. இதன் முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி 11-இல் முடிவடைந்தது. இரண்டாவது கூட்டத்தொடர் மார்ச் 14 ந்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 8 ந்தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், நாடாளுமன்ற நடவடிக்கைகள், நிறைவேறவேண்டிய மசோதாக்கள் என அனைத்து பணிகளும் இரண்டு அவைகளிலும் பெருமளவில் நிறைவடைந்தன. எனவே, ஒருநாள் முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாகத் தெரிகிறது.

முன்கூட்டியே முடிப்பு

இதில், நாடாளுமன்றத்தின் மக்களவையுடன், மாநிலங்களவையும் என இரண்டும் இன்று ஒத்திவைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. ஒன்றிய பொது பட்ஜெட்டிற்கான நிதி ஒதுக்கீடு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு விட்டன. இதேபோல், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மசோதாக்களும் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றுப்பட்டுள்ளன.

மேலும், சில முக்கிய சட்டத்திருத்த மசோதாக்களும் இரு அவைகளிலும் நிறைவேறி உள்ளன. இதில், குற்றவியல் நடைமுறை, டெல்லி முனிசிபல் கார்பரேஷன் உள்ளிட்ட மசோதாக்கள் இடம்பெற்றுள்ளன. இதனால், ஒருநாள் முன்னதாக, இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் ஒத்திவைக்கப்படுகிறது.

அதேசமயம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவாகரத்தை எழுப்ப வாய்ப்பளிக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறுகின்றன. இப்பிரச்சினைக்காக, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடந்த சில தினங்களாக கோரிக்கை எழுப்பி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். அதேபோல், கடந்த வருடம் குளிர்காலக் கூட்டத்தொடரின் நாட்களும் முன்கூட்டியே குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.