ஒரு நபர் ஆணையமாக மாறிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு
சென்னை, மார்ச் 10–
நாடாளுமன்ற தேர்தல் வேளையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ள நிலையில், இதில் பாஜகவின் தலையீடு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ளது. இதனிடையே பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது.
தன்னாட்சி அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய அரசின் அமைப்புகளை அரசியல் ரீதியாக பயன்படுத்தி வருகிறது. மேலும், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளையும் தங்கள் சார்பு அமைப்புகளாக மாற்றிவருகிறது.
சாயம்போன ஆணையம்
கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் சேர்ந்த ஷிண்டே, அஜித் பவாருக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சொந்தம் என்று கூறியபோதே தேர்தல் ஆணையத்தின் மீது சர்ச்சை எழுந்தது. மேலும், சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் சாயம் வெளுத்தது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையராக செயல்பட்டு வந்த அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு 2027-ம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில், திடீரென அவர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவரின் ராஜினாமாவை உடனடியாக குடியரசுத் தலைவர் அங்கீகரித்துள்ளார்.
மக்களைவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒன்றிய அரசின் முடிவை ஏற்க மறுத்ததால் அவர் ராஜினாமா செய்தாரா ? அல்லது அவர் ராஜினாமா செய்யும்படி ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுஇந்நிலையில், இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இது தேர்தல் ஆணையமா? இல்லை தேர்தல் புறக்கணிப்பு ஆணையமா? என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன் சுதந்திரமான நிறுவனங்களின் திட்டமிட்ட அழிவை தடுத்து நிறுத்தவேண்டும், இல்லையென்றால் நாட்டின் ஜனநாயகம் சர்வாதிகாரத்தால் அபகரிக்கப்படும் என்றும் வீழ்ச்சியடைந்த ஆணையங்களில் தேர்தல் ஆணையமும் இடம் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஜனநாயக மரபுகளை அழிக்கும் பாரதீய ஜனதா கட்சியால் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வெளிப்படைத் தன்மையுடன் இல்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் நிலை கவலையை ஏற்படுத்துகிறது என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார். பிரபல திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண் பிரபலம் மஹூவா மைத்ரா கூறும்போது, ஒன்றிய அரசின் உத்தரவுகளுக்கு அருண் கோயல் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அனைத்துக்கும் சரி என்பவர் நியமிக்கப்படுவார் என்றும் விமர்சித்துள்ளார்.