செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு துவங்கியது

Makkal Kural Official

முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று சேகரித்த தேர்தல் அலுவலர்கள்

சென்னை, ஏப். 4–

தமிழகத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குப் பெறும் பணியை தேர்தல் அலுவலர்கள் இன்று தொடங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ந் தேதி தொடங்கி ஜூன் 1ந்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ந் தேதி எண்ணப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கண் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக தபால் வாக்கு செலுத்தும் வசதி தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தபால் ஓட்டுப் பெறத் தகுதியான 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு கோரும் விண்ணப்பங்கள் வாக்காளர்களிடம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வாக்காளர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்களை வழங்கினார்கள்.

இந்த நிலையில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குப் பெறும் பணியை தேர்தல் அலுவலர்கள் இன்று தொடங்கியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒருவர், உதவி வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர், நுண் பார்வையாளர் ஒருவர், போலீசார் அலுவலர் ஒருவர் மற்றும் வீடியோகிராபர் ஒருவர் ஆகியோர் அடங்கிய குழு வாக்காளர்களின் வசிப்பிடத்திற்குச் சென்று தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த வாக்காளரின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று வாக்குகளை பெற்று கொண்டனர்.

முதியவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி பகுதியில் காலை 7 மணி முதல் தபால் வாக்கு வழங்குதல் மற்றும் பெறும் பணியை மேற்கொண்டனர். அப்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் தபால் மூலம் தங்களது விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்குகளை செலுத்தினார்கள். தபால் வாக்களிக்கும் நிகழ்வு முழுவதும், ரகசிய வாக்குமுறை கடைபிடிப்பதை மீறாமல் காணொளி பதிவாக பதிவு செய்யப்பட்டது.

இன்று முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை 3 நாட்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடு வீடாகச் சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது.

இந்த நாட்களில் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி மீண்டும் ஒரு முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

ஈரோடு, திருவாரூர், புதுக்கோட்டை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வீடுகளுக்கே சென்று முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடம் வாக்குக்களை பெற்று வருகின்றனர். சில மாவட்டங்களில் நாளை முதல் தபால் வாக்குகள் பெறும் பணியை தொடங்கவுள்ளனர். சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் 8–ந்தேதி தபால் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.

மேலும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிப்பதை நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் நேரில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *